அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருட்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என நெட்டி கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தஞ்சை கலைகளின் பிறப்பிடமாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம் என அனைத்து கலைகளும் தஞ்சை மண்னுக்கு பெருமை சேர்த்து வருகிறது. தலையாட்டி பொம்மை, தஞ்சை கலைத்தட்டு, தஞ்சை வீணை உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த வரிசையில் நெட்டி வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்களும் ஒன்றாகும். புவிசார் குறியீடு பெற்றுள்ளது. நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.
இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படும்.
இத்தகைய நெட்டி மூலம் கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டட அமைப்புகள் மற்றும் வாழ்த்து மடல்கள் செய்யலாம்.
நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்றே வெண்மையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
இத்தகைய வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என மட்டுமின்றி இயற்கை உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப் பொங்கலின்போது மாடுகளுக்குப் பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கு இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது.
எனவே இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டு வருகிறது.
இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும்.
முற்றிலும் கைகளாலேயே செய்யப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு எந்தவித இயந்திர உதவியும் தேவையில்லை.
தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்த கைவினைக் கலைத்தொழில் அதன் தன்மையும், தனிச்சிறப்பும் மாறாமல் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் சுமார் 50 மேற்பட்ட பேர் இதனைச் செய்து வருகின்றனர்.
நெட்டி வேலைப்பாடு கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த பிறகு ஆர்டர் அதிக அளவில் வருவதாகவும், கற்றுக்கொள்ள யாரும் முன்வராத காரணத்தால் ஆர்டர்கள் குறைந்து வருகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள இக்கலையை அரசு காப்பாற்ற முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– தேஜேஷ்