கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி.

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான எண்பது பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்.

கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எங்களைப் பார்க்க வந்திருந்தார் கலைஞர். அன்றிரவே அவர் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல் வந்ததும், மாலையில் விடுவிக்கப்பட்ட நான் கலைஞரின் ஆலிவர் வீட்டுக்குச் சென்றபோது போலீசார் அதிகமாக இருந்தார்கள்.

கொடுமையான கெடுபிடிகளுக்கு இடையில் கலைஞரைக் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, அவரை எங்கே அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.

அதற்குள் கலைஞரின் குடும்பத்தினரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து அதிகாலையில் இருள் விலகாத நேரத்தில் போனபோது அங்கே சிலர் மட்டுமே இருந்தார்கள்.

இருந்த சில பத்திரிகையாளர்களையும் காவல்துறை விரட்டிக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அன்றைக்கு நடத்தப்பட்ட வித‍த்தைப் பார்த்து அதிர்ந்து போனோம்.

அலறியபடி இருந்த அவரை ரத்தக்கறை படிந்த வேட்டியோடு போலீசார் தூக்கி வந்தார்கள். பலமான தாக்குதலை அவர் எதிர்கொண்டிருப்பது புலப்பட்டது. அவர் வந்த கார் சாவி எங்கோ தூக்கி எறியப்பட்டது.

மனைவியுடன் தடுமாறிய நிலையில் வந்த அவரை நானும், இன்னொரு பத்திரிகையாளரும் சேர்ந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பினோம்.

தயாளு அம்மாள், தமிழரசு, கனிமொழி போன்றவர்களை போலீஸ் நடத்தியவிதம் குறித்து போலீசாரிடம் தட்டிக் குரல் கொடுத்தபோது “பேசினா அரெஸ்ட் பண்ணிருவோம்’’ – மிரட்டிய போலீசார் கலைஞரின் குடும்பத்தினர் மீது நடத்திய தாக்குதலை ‘லைவ்’ ஆக முக்கியமான வி.ஐ.பி.க்கு ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

போலீசாரின் சிரமங்களை எதிர்கொண்டு வெளியே வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழி, அரவிந்தனை வேறு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பியபோது காவல்துறையின் வரம்பு மீறிய அதும்மீறல்களுக்கு கண்கூடான சாட்சிகளைப் போல் இருந்தோம் நானும், அங்கிருந்த சில பத்திரிகையாளர்களும்.

விடியும் நேரத்தில் சென்னை மத்தியச் சிறைக்குப் போன போது கட்டிய கைலியுடன் தரையில் அமர்ந்திருந்தார் கலைஞர்.

அன்று நடந்ததை விரிவாக நான் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய வாரமிருமுறை பத்திரிகையில் படங்களுடன் பதிவு செய்திருந்தேன்.

பெரும் கொந்தளிப்புக்குப் பிறகு சில நாட்களில் கலைஞர் விடுதலை செய்யப்பட்டதும், அவரைப் பேட்டி எடுக்க கலைஞரின் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததும்.

விடுதலை ஆனதும் கொடுத்த முதல் சிறப்புப் பேட்டி அது.

உணர்ச்சிகரமாக இருந்தார் கலைஞர். முகத்தில் அதீதச் சோர்வு. அவரைவிட, அவருடைய குடும்பத்தினர் நடத்தப்பட்ட விதம் அவரைக் கலங்க வைத்திருப்பதை பேச்சு வெளிப்படுத்தியது.

“தயாளுவை.. மாறனை எப்படி எல்லாம் நடத்தியிருக்காங்க… என்னை என்ன வேணும்னாலும் செய்யட்டும்.. அவங்களை நடத்தின வித‍த்தை என்னால் செரிக்க முடியலை.. வீட்டில் சொன்னாங்க.. அன்னைக்கு நீங்களும் இருந்தீங்கன்னு.. அதான் முதல்லே உங்களை வரச்சொன்னேன்..’’ என்றவர் கண்கலங்கியபடி “நன்றிப்பா’’ என்றபோது மனம் கனத்த உணர்வு.

அந்த நிலையிலும் அவர் கொடுத்த கொந்தளிப்பான பேட்டியை “இனியும் கைதுகள் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்’’ என்ற ஆக்ரோஷமாக அவர் சொன்ன சொல்லையே தலைப்பாக்கி வெளியிட்டிருந்தோம்.

ஒரு நூலை ஆழ்ந்து வாசிக்கிறபோது அவர் எதிர்கொள்கிற விதமும் வியக்க வைக்கும். பாராட்ட வேண்டியதைச் சிக்கனமாகப் பாராட்டுவார். சிலவற்றிற்கு உணர்வுவயப்பட்டிருக்கிறார்.

“மறக்கப்பட்ட வரலாறு’’ என்கிற குமரி மாவட்டத்தில் சாதி பேத‍த்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்து மதம் மாறியவர்களைப் பற்றிய நூலைக் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களுக்குப் பிறகு திருவாரூக்கு அவருடைய பால்ய நண்பர் தென்னனைச் சந்தித்தேன்.

கலைஞரைப் பற்றிச் சொல்வதற்கு அவரிடம் ஏராளமான் விஷயங்கள் இருந்தன. மனதில் இருந்ததைக் கொட்டிவிட்டார். அபூர்வமான கடிதங்களை, கலைஞரின் பால்ய காலத்துப் புகைப்படங்கள் என்று அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த பலவற்றையும் உரிமையுடன் கொடுத்தார்.

அண்ணா கலைஞருக்கு எழுதிய அபூர்வமான கடிதமும் அதில் இருந்தது.

எப்படி கருப்புக்கொடிப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது தொடர்மாக அண்ணா கலைஞருக்கு எழுதிய கடிதம் அது.

அந்த வாரமே – அந்தக் கடித‍த்தை வார அதழில் வெளியிட்டோம்.

மறுநாள் வெளிவந்த முரசொலியில் அந்தக் கடிதம் பற்றி நெகிழ்வுடன் எழுதியிருந்தார் கலைஞர்.

பேட்டி என்று கலைஞரை அணுகாத நிலையிலும், வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்ததும் போயிருந்தேன்.

உற்சாகம் பொங்க இப்படி வரவேற்றார் கலைஞர்.

“வாய்யா.. என்ன..

தென்ன‍ன் திருவாரூர்க் குழாயை உங்க கிட்டே திறந்து விட்டுட்டானா?’’

அவருக்கே உரித்தான கிண்டலுடன் பேச்சை ஆரம்பித்தபோது, என்னிடம் பேசியது குறித்து தென்ன‍ன் அவரிடம் பேசியிருப்பது தெரிந்தது.

“தனிப்பட்ட முறையில் பேசணும்னு தான் உங்களை வரவழைச்சிருக்கேன்.. சிவ விஷயங்களைப் பகிர்ந்துக்கணும்னு தான் கூப்பிட்டேன்.. அன்னைக்கு நீங்க கொடுத்தட்டுப் போன “மறக்கப்பட்ட வரலாறு’’ நூலை ஒரே மூச்சில் வாசிச்சேன்ப்பா.. சாதி பேத‍த்தினாலே எப்படி எல்லாம் கடுமையான புறக்கணிப்பை, அவமானத்தை சந்திச்சிருக்கு நமக்கு முன்னாடி இருக்கிற சமூகம்?

நம் சமூகம் கடந்து வந்த மாதையைப் பற்றி நாமே வெட்கப்பட வேண்டியிருக்கு’’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் வாழ்வில் தான் எதிர்கொண்ட சிராய்ப்புகளை அன்று அனுபவித்த வலியுடன் சொல்லிக் கொண்டிருந்த சில மணிநேரப் பேச்சு உணர்த்திய விஷயங்கள், ‘பராசக்தி’ படத்தில் அவர் எழுதிய “தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்’’ என்ற வரிகளைப் போலக் கொதிப்புடன் இருந்தன.

அந்தக் கொதிப்பின் கணகணப்பு தான் கலைஞர் என்னும் மனிதரைத் தலைவராக்கியிருக்கிறது.

– 03.09.2023 அன்று வெளியான முரசொலி இதழில் வெளிவந்த கட்டுரை.

*

குறிப்பு: கலைஞர் கருணாநிதி பற்றி மணா எழுதிய ‘கலைஞர் என்னும் மனிதர்’ என்ற நூல் கூடுதல் பக்கங்களுடன் பரிதி பதிப்பகம் மறுபதிப்பாக விரைவில் வெளியிட உள்ளது.

தொடர்புக்கு:  பரிதி பதிப்பகம்,
56சி | 128 பாரத கோவில் அருகில்,
ஜோலார்ப் பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம்-635 851.
செல் : 72006 93200

You might also like