ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்ப சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1685-ம் வருடம் ஜெர்மனியில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் அதிர்ஷ்டம் செய்தவர்.
தந்தை உட்பட அவருடைய மாமாக்கள் அனைவரும் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள். அரசவைகளிலும் சர்ச்சுகளிலும செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தார்கள். சிறுவன் பாக் தன்னைச் சுற்றிலும் பியானோக்கள், ஆர்கன்கள், வயலின்கள் ஒலிக்க அந்த இசையைக் கேட்டபடிதான் வளர்ந்தான்.
(பிற்காலத்தில் தன்னுயை குடும்பத்தின் இசை பாரம்பரியத்தைப் பற்றியும் பெருமை பற்றியும் தி ஆரிஜின் ஆஃப் தி மியூசிக்கல் பாக் ஃபாமிலி என்று ஒரு புத்தகமாக எழுதினார்)
ஆனால் துரதிருஷ்டவசமாக பாக்கின் பத்தாவது வயதிலேயே அவருடைய அம்மாவும், அப்பாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அதற்குப் பிறகு பாக்கின் அண்ணன் கிறிஸ்டோஃப்தான் அவருக்கு எல்லாமுமாகிப் போனார்.
சர்ச்சில் ஆர்களிஸ்டாக வேலை பார்த்த அவர் தம்பி பாக்கிற்கு மரபியல் மற்றும் செவ்வியல் இசையைப் படிப்படியாகச் சொல்லிக் கொடுத்தார்.
ஐரோப்பா முழுவதும் இசை மழையைப் பொழியவைத்த மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் இசையை அவர்தான் சிறுவன் பாக்கிற்கு அறிமுகப்படுத்தினார். ஒரு புதிய உலகத்தில் பறப்பது போல் இருந்தது பாக்கிற்கு.
பாக்கின் 14வது வயதில் அவருக்குப் பெருமைமிகு செயிண்ட் மைக்கேல் பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அங்கே செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
தன் பள்ளித் தோழனுடன் பாக் மேற்கொண்ட அந்தப் பயணம் வாழ்க்கையின் வேறு பக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது.
ஃபிரெஞ்ச், இத்தாலி, லத்தீன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார். பள்ளியில் அவருடைய இசை அவரைப் பிரபல மாணவராக ஆக்கியது.
பட்டப்படிப்பு முடியும் வரை அவர் இசை கற்றுக் கொண்டபடி, இசைத்துக் கொண்டபடி இருந்தார்.
பட்டப்படிப்பு முடிந்ததும் ஆர்கன் வாசிக்கும் ஒரு பதவிக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேறவில்லை என்று சொல்லிவிட்டதால் மன வருத்தத்துடன் ஒரு பிரபுவின் சபையில் இசைக் கலைஞராக இணைந்து கொண்டார்.
அந்த ஏழு மாத காலத்தில் அவருடைய பியானோ வாசிப்பு எல்லோரையும் பிரமிக்க வைத்தது.
ஆம்ஸ்டாட் நகரத்தின் சர்ச்சில் புதிதாக வந்து இறங்கியிருந்த புத்தம் புது பியானோ ஒன்றை பரிசீலித்து அதன் முதல் இசையை இசைக்கும் பெருமைமிகு அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது.
தன்னுடைய புதிய குழந்தையைப் போல் அதைப் பாசமுடன் தொட்டுப் பார்த்தார் பாக் அந்த சர்ச்சிலேயே அவருக்கு ஆர்கன் கலைஞர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அந்தப் பியானோவைத் தன் இசையறிவை வைத்து இசையின் புதிய நுணுக்கங்களைக் கொண்டு வரும் வகையில் அதன் சாவிகளை மாற்றியமைத்து டியூன் செய்தார் பாக். (நம்முடைய இசைஞானி இளையராஜா கிடார் சாவிக்களின் சுருதிகளை மாற்றி அமைத்து இசைப்பார் என்று சொல்வார்கள்)
அந்தப் பியானோவில் புதிய இசைப் படிவங்களை வடிக்க ஆரம்பித்தார் பாக். அது அவருடைய நெருக்கமான நண்பனைப் போல் ஆனது. ஒரு நாளின் பெரும் பகுதியை அந்தப் பியானோவுடனேயே செலவிட்டார் பாக்.
அந்த காலத்தில் ஜெர்மனியில் பக்ஸிஹ்யூட் என்கிற மிகப் பிரபலான இசைக்கலைஞர் வாழ்ந்தார். அவரைத் தன் மானசீக குருவாகவே மனதில் வைத்திருந்தார் பாக்.
ஒருநாள் அவரைப் பார்ப்பதற்குக் கிளம்பி விட்டார். காடு, மேடுகளைக் கடந்துதான் அவர் இருக்கும் இடத்தை அடைய முடியும். குதிரைதான் ஒரே போக்குவரத்து. ஆனால் அதுவும் கிடைக்காத நிலையில் வெறும் காலாலேயே நடக்க ஆரம்பித்து விட்டார் பாக்.
ஏறக்குறைய 400 கிலோ மீட்டர்கள் அயராது நடந்தார். அங்கே சென்று பக்ஸிஹ்யூட்டை சந்தித்தார். அவருடன் பல மாதங்களைச் செலவிட்டார். ஜெர்மன் ஆர்கன் இசையின் தந்தை என்று அழைக்கப்பட்ட பக்ஸியூட் அவருக்கு இசையின் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.
மீண்டும் ஆம்ஸ்டாட் திரும்பிய பாக்கிற்கு ஏகப்பட்ட இசைப்பதவிகள் காத்துக் கொண்டிருந்தன. பலவற்றில் கொஞ்ச காலம் இருந்து விட்டு விலகிக் கொண்டார்.
அதிக வருமானங்களைத் தரும் பதவிகளுக்கு மாறிக் கொண்டே இருந்தார். அவருடைய உறவுக்காரப் பெண்ணான மாரியா பார்பராவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் இரண்டு பேர் பிற்காலத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாக வளர்ந்தார்கள்.
செயிண்ட் பிளாஸியஸ் என்கிற சர்ச்சில் இருந்த பழமையான ஆர்கன் வாத்தியத்தைச் சரி செய்யும் பணி பாக்கிற்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது.
அதைப் பல நாட்கள் செலவழித்துச் சரி செய்து பாக் அருமையாக இசைத்ததைக் கண்டு பரவசமானார்கள் மக்கள். அரசாங்கமும் பெரும் பணத்தை அவருக்கு சன்மானமாக அளித்தது.
அதற்குப் பிரதியுபகாரமாக காண்டடா இசையைக் கம்போஸ் செய்து கொடுத்தார் பாக். வெய்மர் என்னும் நகரத்தில் அவருக்கு இன்னும் மேன்மையான இசைப் பதவி தரப்பட்டதால் தன் குடும்பத்துடன் அங்கே இடம் பெயர்ந்தார் பாக்.
வெய்மர் நகரம் அவருக்கு அற்புதமான சூழலைக் கொடுத்தது. இத்தாலிய இசைக்கலைஞர்களான விவால்டி, கொரால்லி போன்றவர்களின் இசை அவரைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றன.
இசையின் டெக்னிக்கல் பாதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பாக். “டிரமாடிக் ஓப்பனிங்” எனப்படும் பிருமாண்ட இசை வடிவங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டார்.
டைனமிக் மோட்டர் ரிதம், ஹார்மோனிக் ஸ்கீம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றார். அப்போது இத்தாலிய இசைதான் நவீன இசையாக இருந்தது.
புதிய டிரண்ட் இசையான அதில் கட்டுண்டு கிடந்தார்கள் மக்கள். அதன் வீச்சும் புதிய வடிவமும் பாக்கையும் கவர்ந்தன.
இளவரசர் ஜோஹன் ஏர்னஸ்ட் இத்தாலியிலிருந்து அந்த நவீன இசை வடிவங்களின் நோட்டுகளைக் கொண்டு வந்தார். அதில் இருந்த கண் பார்வையற்ற இத்தாலிய இசைக் கலைஞர் ஜான் கிராஃபின் இசை தோட்டுகளைப் பார்த்து பிரமித்தார் பாக்.
அந்த பாதிப்புகளும் பாக்கிடம் இருந்த இயல்பான இசைத் திறமையும் சேர்ந்து புத்தம் புதிய கற்பனைகளை அவர் மனதில் பொங்க வைத்தன. பாக்கின் அற்புதமான இசைக் கோவைகள் அப்போதுதான் இயற்றப்பட்டன.
தன்னுடைய மூத்த மகன் புரிந்து கொள்வதற்காக பாக்கினால் அப்போது எழுதப்பட்ட “லிட்டில் ஆர்கன் புக்” புகழ்பெற்றது.
ஆர்கன் வாசிப்பை எளிமையாக சொல்லிக் கொடுக்கும் விதத்தில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இசையை கலபமாக சொல்லிக் கொடுக்கும் ஒரு மாஸ்டரின் மேதைத்தன்மை அதில் உள்ளதாகக் கூறுவார்கள்.
வெய்மர் நகரத்தின் அரசவையிடம் பாக்கிற்குக் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. அவர் அந்தப் பதவியிலிருந்து விலக விரும்பினார்.
அதில் கடுப்பான அரசவை அவர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கும் உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால் விசாரணைக்குப் பிறகு சிறைவாச உத்தரவை ரத்து செய்து அவரைப் பதவியிலிருந்து இறக்கியது. ‘நல்லது ” என்று சொல்லியபடி விடை பெற்றார் பாக்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல் ஆன்ஹால்ட் நகரத்து இளவரசர் லியோபோல்ட் அவரை இருகரம் நீட்டி வரவேற்றார்.
நல்ல சன்மானத்தையும் கொடுத்தார். மனம் மகிழ்ந்த பாக், லியபோல்ட் அரசவைக்காகப் பல இசைக் கோவைகளை வடிவமைத்தார்.
பிராண்டன்பர்க் கான்சர்டோஸ், சிக்ஸ் சூட்ஸ் ஃபார் அன் அக்காம்னீட் செல்லோ, சோனாட்டோஸ் அண்ட் பார்த்திதாஸ் , ஃபார் சோலோ வயலின், போன்ற அவருடைய பிரபல இசைக் கோவைகள் இயற்றப்பட்ட காலம் இது.
இளவரசர் லியோபோல்ட் அவரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அவருடைய இசை மேதைத்தன்மையை அங்கே வெளிப்படுத்தினார். பாக்கின் பெயர் ஐரோப்பிய நாடுகள் முழுக்கப் பரவியது.
அப்படி ஒரு வெளிநாட்டுப் பயணத்தில் லியோபோல்டுடன் பாக் இருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மனைவி மரியா இறந்து போனார். மனமுடைந்து போனார் பாக்.
ஆனால் சரியாக ஒரே வருடத்தில் மற்றொரு அரசவையில் இசையமைத்துக் கொண்டிருந்த அன்னா மகதலேனா என்னும் இளம் பெண்ணைச் சந்தித்தார் பாக். இருவரும் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்தார்கள்.
இருவருக்கும் 13 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் இரண்டு பேர் பிற்காலத்தில் பெரிய இசைக்கலைஞர்கள் ஆனார்கள்.
1723ம் வருடம் லிப்ஸிக் அவருக்கு அரசாங்க உயர் பதவிகள் தேடி வந்தன. “காண்டர்” என்னும் அரசாங்கப் பதவியையும் பல சர்ச்சுகளின் “இசை இயக்குனர்” பதவியையும் அவர் விரும்பி ஏற்றிக் கொண்டார்.
இப்பதவிகளில் அவர் அடுத்த 27 வருடங்கள், மரணமடையும் வரை பணிபுரிந்தார். ஆனாலும் சிட்டி எஸ்டேட் எனப்படும் அரசாங்கத்தின் ஒரு கோஷ்டிப் பிரிவு அவரைக் கடைசிவரை தொந்தரவு படுத்திக் கொண்டே இருந்தது.
அவ்வப்போது வருமானத்தை நிறுத்தியது. எல்லாவற்றையும் தான் விரும்பிய பணிக்காகப் பொறுத்துக் கொண்டார் பாக்.
தன்னுடைய இந்த நெடிய பணியில் அவர் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்களை அவர் உருவாக்கினார்.
சர்ச்சுகளின் இசை இயக்குனர் என்கிற பணியின் ஒரு பகுதியாக சர்ச்சுகளில் ஆர்கன் இசைக்கலைஞர்களையும், பாடகர்களையும், பியானோ கலைஞர்களையும் உருவாக்கும் பொறுப்பு இருந்தது. இசை கற்றுத் தருவதில் பாக் மிகத் திறமையானவர்.
லிப்ஸிக் நகரத்தில் பதவிப் பொறுப்பேற்ற முதல் ஆறு வருடங்களில் அவர் ஐந்து காண்டடா இசைக் காவியங்களைப் படைத்தது அவருடைய இசை வாழ்க்கைப் படைப்பின் உச்சி என்று சொல்லப்படுகிறது.
அப்போது அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்த மாஸ் இன் பி மைனர் இசைக் கோவையை ஒரு மாபெரும் இசை மேதையால் மட்டுமே கம்போஸ் செய்ய முடியும் என்பார்கள். ஆனால் அவர் அளித்த அந்த இசைக் கோவையின் நோட்டுகள் கிடப்பில்தான் போடப்பட்டிருந்தது.
அவருடைய மறைவுக்குப் பிறகே அது வாசிக்கப்பட்டது. வாழ்வின் இறுதிக் காலங்களில் அவருடைய கண் பார்வை மோசமடைந்தது. ஒரு பிரபல ஆங்கில கண் மருத்துவர் அவருக்கு கண் ஆபரேஷன் செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
தன் மரணப்படுக்கையில் படுத்தபடி தன் கடைசி இசைப் படைப்பாள BWV 668 ஏ இசைக் கோவையை எழுதி முடித்தார் பாக். அவருடைய உயிர் மெல்லப் பிரிந்தது. தவறான கண் ஆபரேஷனால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் அவர் உயிரைப் பறித்தது என்று அப்போது எழுதப்பட்டது.
65வது வயதில் இறந்த சமயம் அவருடைய வீட்டைப் பலர் பார்வையிட்டபோது வீடு முழுக்க இசைக்கருவிகளாக இறைந்து கிடந்தன.
பியானோக்களும், வயலின்களும், ஆர்கன்களும், ஹார்மோனியம்களும் எங்கும் ஆக்ரமித்திருந்தன. பாக்கின் இசை மேன்மை பியானோ இசையை அவர் மேம்படுத்தியதுதான்.
இத்தாலி, ஃபிரெஞ்சு மற்றும் இசை வடிவங்களைத் தன்னுடைய இசை மேதைத் தன்மை மூலம் ஒருங்கிணைத்துத் தன் பாணியை அதில் உள்ளடக்கி அவர் உருவாக்கிய இசைக் கோவைகள் இன்றைக்கும் மேற்கத்திய செவ்வியல் இசையின் மிகப்பெரும் பாதிப்பாக இருக்கிறது.
இசைப் பிதாமகன் ஆமடியஸ் மொசார்ட்டுக்கு எப்போதும் தன்னைப் பற்றிய ஒரு பெருமை மிகு கர்வம் உண்டு. தான் யாரிடமும் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று நினைப்பவர் அவர். அப்படிப்பட்ட மொஸார்ட் ஒரு முறை பாக்கின் இசையைக் கேட்ட போது உள்ளம் உருகிப் போனார். “இவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றார். பாக்கின் இசை நோட்டுகளை வாங்கி எல்லாவற்றையும் படித்தார்.
ஜோஹன் செபாஸ்டியன் பாக்கிற்கு இதை விட வேறென்ன, அங்கீகாரம் வேண்டும்?
– கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய ‘இசையாலானது’ நூலிலிருந்து…