காரசாரமான செட்டிநாடு புடலங்காய் வடை!

மாலை நேரம் வந்து விட்டால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். விதவிதமான நொறுக்குத் தீனிகள் கடைகளில் இருந்தாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடத் தான் நாம் அனைவரும் விரும்புவது.

சர்க்கரை நோயாளிகளின் தோழனாக அழைக்கப்படும் பாம்பு புடலங்காய் ஒரு சிலருக்கு இதன் வாடை பிடிக்காமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.

புடலங்காய் கூட்டு, பொரியல், உசிலி போன்ற ஒரே மாதிரியான சமையலும் அலுப்பு தட்டி விட காரணமாக இருக்கிறது.

எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் காரமான சுவையான செட்டிநாடு புடலங்காய் வடை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

காய்ந்த மிளகாய் – 6

இஞ்சி – 1 துண்டு

பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

பொடியாக நறுக்கிய புடலங்காய் – 1 கப்

செய்முறை;

கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், இவை மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் சோம்பு, பட்டை, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய புடலங்காய், உப்பு மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பிசைந்து வைத்து விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து புடலங்காயின் தண்ணீர் பிழிந்து எடுத்து விட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை அரைத்த விழுது எல்லாவற்றையும் கலந்து பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு எடுக்கவும். இப்போது காரமான சுவையான புடலங்காய் வடை ரெடி.

– யாழினி சோமு

You might also like