மக்காச்சோளம், பருத்தியை மட்டுமின்றி மாநிலத்தின் மையத்திலிருந்து மாமேதையையும் உருவாக்கிய மாவட்டம் பெரம்பலூர்.
இந்த மாவட்டம், இதிகாசத் தொடர்புக்கு வாலி சிவனை வழிபட்டஸ்தலமான வாலி கண்ட புரம் வாலீஸ்வரர் திருக்கோயிலையும், வரலாற்றுப் பெருமைக்கு வால்கொண்டா போர் நடந்த ரஞ்சன்குடி கோட்டையையும் சிலப்பதிகாரத் தொடர்புக்கு சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலையும்,
பௌதீகப் பழமைக்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப்பெரிய சாத்தனூர் கல் மரப்படிமத்தையும், புவிசார் குறியீடு பெற்று புகழ் பரப்புகின்ற அரும்பாவூர் மரச்சிற்பங்களையும் தன்னடக்கத்தோடு கொண்டிருப்பது பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பு.
அந்த வரிசையில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கே தமிழைக் கற்றுத்தந்த தாத்தாக்கள் வாழ்ந்த பூமியாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது.
நாடு நாடாகச் சென்று மேலை நாட்டவர் மதம் வளர்த்த சமயத்தில் ஏடு ஏடாகச் சேகரித்து பலநூல்களை பதிப்பித்து வீடு வீடாகத் தமிழைக் கொண்டுசேர்த்த ஈடில்லா மனிதருக்கும் இலக்கணத்தைக் கற்றுத்தந்த பெருமைகளைக் கொண்டதுதான் பெரம்பலூர் மாவட்டம்.
தமிழின் அறிந்திடாத பல இலக்கிய வளங்களையும், சங்கத்தமிழ் நூல்களையும் அழிந்திடாமல் காத்தவர்.
உதிரி உதிரியாக ஓலைச்சுவடிகளாக ஊரெல்லாம் இறைந்து கிடந்த இலக்கியச் செல்வங்களை முத்துக்களாகக் கோர்த்து அன்னைத் தமிழுக்கு ஆபரணங்களைப் போல அணிவித்து, உலகறியச் செய்தவர்தான் உ.வே.சாமி நாத அய்யர்.
1855ல் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் இசையுடன் காலட் சேபம் நடத்தும் வேங்கட சுப்பையருக்கு மகனாகப் பிறந்தார் உ.வே. சாமிநாதர்.
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் ஐந்தாண்டு பயின்று அறிஞராகும் முன்பே, இவருக்கு அடைக்கலம் கொடுத்து குருகுலக் கல்வியைக் கற்றுத்தந்தது குன்னம்தான்.
11 வயதிலேயே தமிழைக் கற்கும் ஆவலோடு, இப்போதைய குன்னத்திற்கு தனது குடும்பத்தோடு வந்தவர்தான் உ.வே.சா.
குன்னத்தைச் சேர்ந்த தமிழ்ச்சான்றோரும், செல்வப்பெருந்தகையுமான சிதம்பரம் பிள்ளைதான் உ.வே.சாமிநாத அய்யர் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அங்குள்ள அக்ரஹாரத்தில் தங்கிக்கொண்டு பெருமாள் கோயில் தெருவிலுள்ள சிதம்பரம்பிள்ளை வீட்டில் கல்வி கற்றார்.
ஒவ்வொரு மாதமும், உ.வே.சாமி நாத அய்யர் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. சிதம்பரம் பிள்ளை வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் இசைப்பாடல்களைப் பாடி, உ.வே. சாமிநாதரின் தந்தையார். ஊர்மக்களை மகிழ்வித்து வந்தார். அதற்கும் தனியே ஊதியம் வழங்கப்பட்டது.
குன்னம் என்றழைக்கப்படும் இந்த ஊர் தமிழ்க்குன்றமாக விளங்கியது. தமிழறிவிலும், கொடைக்குணத்திலும் இப்பகுதி மக்கள் சிறந்து விளங்கினர்.
குன்னத்திற்கு அருகிலுள்ள காருகுடி கிராமத்தில் கஸ்தூரி ஐயங்கார் வீட்டிலும் தங்கி 5 மாதத்திற்கு மேல் தமிழைப் பயின்று வந்தார். அருகில் உள்ள வெண்மணி கிராமத்திற்குச் சென்று சிலநாள் தங்கி தமிழ் பயின்று வந்துள்ளார்.
செங்குணம் என்றழைக்கப்படும் இப்போதைய கிராமத்தில் ‘சின்னப் பண்ணை என்ற அடைமொழி கொண்ட விருத்தாசலம் ரெட்டியார் குடும்பத்திலும் தமிழ் பயில்வதற்காக தங்கியிருந்தார்.
அப்போதுதான், பாக்களைப் படைக்கும் திறன் வளர்க்கும் இலக்கண நூலான யாப்பருங்கலக் காரிகையைக் கற்றுத் தேர்ந்தார். பெரம்பலூர் பள்ளி ஆசிரியரிடம் திருக்குறள் நூலிருப்பதை அறிந்து அவரிடம் சென்று நேரடியாக திருக்குறளையும் பெற்றுக் கொண்டார்.
இப்போதைய வ.களத்தூரில் தங்கி இசைப்பாடல்களைத் தன் தந்தையோடு சேர்ந்து உ.வே.சாமிநாத அய்யர் உரக்கப்பாடியுள்ளார். 14 வயதில் பால்ய விவாகத்திற்காகத் தனது சொந்த ஊரான உத்தமதான புரம் சென்றார்.
விவாகம் முடித்து அரும்பாவூர் நாட்டார் வழிகாட்டுதலால் மேல் கல்வி பெற மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைச் சந்தித்து கல்வி கற்றார்.
இடையே காரை கிருஷ்ண சாமி ரெட்டியார் ஏற்பாட்டின் பேரில் அங்கு தங்கி கதை இசைப் பாடல்களைப் பாடிவந்தார். இலந்தங்குழி கிராமத்தில் உள்ள நிலங்களை சன்மானமாகவும் பெற்றுள்ளார்.
விருத்தாசலம் ரெட்டியார் உடல்நிலை குன்றியிருந்தபொழுது, அவர்களுடைய குலதெய்வமான அருள்நிறை நீலியம்மன் மீது ‘நீலி அம்மன் இரட்டைமணி மாலை’ என்ற வெண்பா நூலினை இயற்றிப் பாடினார்.
பலநூறு படைப்புகளைப் பதிப்பித்த பெருமைகொண்ட உவே. சாமிநாத அய்யர், தானே படைத்த இலக்கண நூல் இது மட்டுமே.
‘அருள் நிறை’ கிராமம் இப்போது அரணாரையாகிவிட்டது.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஏக்கத்தால், பெரம்பலூர் பகுதியை நாடிவந்த உவே.சாமிநாத அய்யருக்கு. தமிழைக் கற்றுத் தந்த தாத்தாக்கள் பலருண்டு.
அவருக்கு வேண்டுவன வழங்கி தமிழ்த் தாத்தாவைத் தமது பேரப் பிள்ளையாக அரவணைத்துக் கொண்டது பெரம்பலூர் மாவட்டமே.
ஜே.வில்சன்
-நன்றி: தினகரன் பொங்கல் மலர்-2022