சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் ரயில் வடிவத்தில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கோச் உணவகம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னையின் அடையாளமாக திகழக்கூடிய இடங்களில் ஒன்றான டாக்டர் புரட்சி தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு உள்ளேயும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் செல்வதற்காக பலதரப்பட்ட பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இருப்பினும் ரயில் நிலையத்தில் அமர்ந்து உணவு உண்பதற்கு வசதியான உணவகங்கள் இதுவரை இல்லாத நிலை இருந்தது. பசி என்றாலே சாலையை கடந்து சென்று சாப்பிட கூடிய நிலையில் தான் இருக்கிறது.
பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தனது முதல் ரயில் கோச் உணவகத்தை சென்னை ரயில்வே கோட்டம் தொடங்கியுள்ளது.
வந்தாரை வாழவைக்கும் சென்னையில் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக ரயிலை பிடிக்க பல மக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் பசியை போக்கவே ரயில் கோச் உணவகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் டெர்மினல் அருகே சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தெற்கு முனையில் இந்த ரயில் கோச் உணவகம் அமைந்துள்ளது.
இதன் சிறப்பு மற்ற உணவகங்களை போல் இல்லாமல் தண்டவாளத்தில் ரயில் நிற்பது போன்ற வடிவத்தில் 2 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகம் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுகிறது.
பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இங்கு உணவுகள் அனைத்தும் சுவையாக இருப்பதாகவும் பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.
– தேஜேஷ்