கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் ரெங்கையா முருகன்!

இன்று காலை 9:00 மணிக்கு ஆ.சிவசு அய்யா அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை எப்போதும் சார் என்றே மரியாதையாக அழைப்பார்.

எனக்கு எறும்பு ஊர்வது மாதிரி உணர்வேன். அய்யாவிடம் பெயர் சொல்லி அழையுங்கள் என்றாலும் கேட்க மாட்டார். சரி விஷயத்துக்கு வருகிறேன்.

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி, பேசலாமா என்றார். ஓய்வாகத்தான் இருக்கிறேன், பேசுங்கள் அய்யா என்றேன். சமீபத்தில் கரிசல் இலக்கியத்தை விரிவாகப் பேசும் ஒரு புத்தகம் வந்திருக்கிறது உங்களுக்கு தெரியுமா? என்றார்.

அய்யா தெரியவில்லையே என்றேன்.

அந்த புத்தகத்தில் கு. அழகிரிசாமி, கி.ரா. ஆரம்பித்து பூமணி, லட்சுமணப் பெருமாள், சோ. தர்மன், உதயசங்கர், அய்யா பெயர் உட்பட்ட வரிசையில் தங்களது ரெங்கையா முருகன் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அந்த நூலினை தொகுத்தவர் யார் என்று தெரியாது. நூலக சங்கம் உட்பட எந்த சங்கத்திலும் நான் உறுப்பினரும் கிடையாது.

இலக்கிய வட்டார நண்பர்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பவன்.

மழைக்கு ஒதுங்குவது மாதிரி நூலகத்தில் வேலை கிடைத்த காரணத்தாலும், மூத்த எழுத்தாளர் மறைந்த பெ.சு.மணி, தினமணி சிவக்குமார், மூத்தவர் நாராயணசாமி அய்யங்கார், எம்.டி.எம், கடற்கரய் போன்றோர் வழிகாட்டுதலுடன் வேதியியல் மாணவராக இருந்த நான் தமிழைப் படிக்க ஆரம்பித்து நாமும் எழுதிப் பார்ப்போமே என்று எழுத‌ முயற்சித்தவன்.

நான் எழுதிய முதல் புத்தகம் பரவலாக கவனம் பெற்றதும் அந்த சமயத்தில் ‘தமிழர் புத்தகங்கள் – ஓர் அறிமுகம்’ என்று மிகச் சிறந்த 100 நூல் வரிசையில் எனது அனுபவங்களின் நிழல் பாதை இடம்பெற்றபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

அதைப் போலவே கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயர் இடம்பெற்றது குறித்து ஆ.சிவசுப்பிரமணியன்‌ அய்யா‌ அவ்வளவு மகிழ்ச்சியுடன் என்னை அவர் வாழ்த்தியது பெரும்பாக்கியம்.

தொகுத்தவர் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள்.

குறிப்பு: ஆ. சிவசுப்பிரமணியம் அய்யா அவர்கள் “வித்தி வான்நோக்கும் வியன் புலம்” புத்தகத்தை எனது கவனத்திற்கு அனுப்பிவைத்தார். இந்த புத்தகத்தை எழுதிய பெ.ரவீந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

You might also like