கிங் ஆஃப் கொத்தா – ஒரு ‘கொத்துகறி’ பார்சல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அவ்வப்போது வேறு மொழிகளில் நடித்து, இந்தியா முழுக்கத் தனக்கென்று ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான்.

தனக்குக் கிடைத்துவரும் பரவலான வரவேற்பை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர் தந்திருக்கும் படமே ‘கிங் ஆஃப் கொத்தா’.

ஆக்‌ஷன் வகைமையில் அமைபவை தான் தற்போது ‘பான் இந்தியா’ படமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப, இது ஒரு கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக வெளியாகியிருக்கிறது. சரி, படம் பார்த்து முடித்ததும் நமக்குள் எப்படிப்பட்ட உணர்வு உருவாகிறது?

கொத்த என்றால்..?

கொத்த என்பது மலையாளமும் தமிழும் தெரிந்தவர்கள் புழங்கும் நிலப்பகுதி. அப்படித்தான், இப்படம் சொல்கிறது. அதாவது, ஒரு கற்பனையான ஊர். அங்கு வாழும் வன்முறையாளர்கள், அவர்களால் நிகழும் மாற்றங்களைச் சொல்கிறது இந்த ‘கிங் ஆஃப் கொத்த’.

படம் தொடங்கி, கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்தே கண் முன்னே வருகிறார் துல்கர் சல்மான். ஆனால், அதற்கடுத்த இரண்டரை மணி நேரமும் திரைக்கதை அவரைச் சுற்றியே வலம் வருகிறது. ‘என்னது படம் மூணு மணி நேரமா’ என்று ‘ஜெர்க்’ ஆகும் நபர்கள் இந்த படத்தின் கதையைப் படிக்காமல் கடைசி பாராவுக்கு சென்றுவிடலாம்.

ஒவ்வொரு ஊரிலும் ரவுடிகள் என்று சிலர் இருப்பார்கள். அப்படி, கொத்த பகுதியில் கண்ணன் பாய் இருக்கிறார்.

மனைவி, மச்சான் என்று அவர் சார்ந்த சகலரும் போதை மருந்து கடத்தலில் திளைக்கின்றனர்.

அப்படிப்பட்டவர், தனது மச்சான் காதலிக்கும் பெண் ராஜுவின் தங்கை என்றதும் அலறுகிறார். ‘வேண்டாம்’ என்கிறார்.

யார் அந்த ராஜு? ஒருகாலத்தில் கண்ணனின் நண்பராக இருந்தவர். இப்போது அவர் அந்த ஊரில் இல்லை. ஆனால், அவரது குடும்பம் மட்டும் அங்கிருக்கிறது.

இப்போது ராஜு எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? மீண்டும் அவர் ஊர் திரும்புவாரா? கண்ணனால் பாதிக்கப்பட்ட லோக்கல் இன்ஸ்பெக்டர் சாகுல் மனதில் இந்த யோசனைகள் ஓடுகின்றன.

அவரால், கண்ணனை நேருக்கு நேராக எதிர்க்க முடியாதென்று புரிகிறது. ஆதலால், ராஜுவை ஊர் திரும்ப வைக்க ஒரு ‘ஐடியா’ செய்கிறார்.

அது வொர்க் அவுட் ஆனதா? ஒரு காலத்தில் ‘கிங் ஆஃப் கொத்த’வாக இருந்த ராஜு, மீண்டும் அந்த ஊரில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினாரா என்று சொல்கிறது இப்படம்.

இழுவையான திரைக்கதை!

துல்கர் சல்மானின் சுருள் கேசம், லேசான தாடி, அலட்சியமான உடல்மொழி என்று எல்லாமுமாகச் சேர்ந்து, அவரை ஒரு ஆக்‌ஷன் நாயகன் ஆக்கியிருக்கிறது. அவரது ‘மெலோடிராமா’க்களையும் ‘ரொமான்ஸ் காமெடி’களையும் ரசித்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்காது.

அதேநேரத்தில், அவர் திரையில் வெளிக்காட்டும் கம்பீரத்தை ரசிக்காமல் இருக்கவும் முடியாது. உதாரணமாக, இடைவேளைக்கு முன்னும் பின்னுமாகத் தனது நடிப்பில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் அபாரம்.

’பொன்னியின் செல்வனி’ல் பூங்குழலியாக வந்த ஐஸ்வர்யா லெட்சுமிதான் இதில் நாயகி. ஆனால், அவரது பாத்திரம் திரையில் சரியாக எழுதப்படவில்லை.

மிகத்தீர்க்கமாக வடிவமைப்பட்டுள்ள நைலா உஷாவின் பாத்திரத்திற்கு, திரைக்கதையில் போதிய இடம் தரப்படவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அதகளம் செய்திருக்கிறார் ஷபீர் கல்லாரக்கல். ‘சார்பட்டா’வில் டான்ஸிங் ரோஸ் ஆக வந்தாரே, அவரேதான். இதில் அவருக்குப் பெயர் சொல்லும்படியான வேடம்.

செம்பன் வினோத் ஜோஸ் பேசும் அரைகுறை ஆங்கில வசனங்கள் பல இடங்களில் சிரிப்பூட்டுவதில்லை.

பிரசன்னா, கோகுல் சுரேஷ் கூட்டணி அவ்வப்போது வந்தாலும் நம்மை ஈர்க்கிறது. இவர்களது பாத்திரங்களை இன்னும் தெளிவாக வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இவர்கள் தவிர்த்து ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, ஷரண் சக்தி என்று பலர் நடித்துள்ளனர்.

சுதி கோப்பா, அனுமோள் உட்படப் பலரும் இரண்டொரு ஷாட்களில் காணாமல் போகின்றனர். சௌபின் ஜாகிர் ஒரேயொரு காட்சியில் தலைகாட்டியுள்ளார்.

’கிங் ஆஃப் கொத்த’யின் பெரிய பலம் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

போலவே, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் நல்லதொரு ‘பீரியட் பிலிம்’ பார்க்கும் உணர்வை எளிதில் உண்டாக்குகிறது.

அதற்கு, நிமேஷ் தனூரின் தயாரிப்பு வடிவமைப்பு பக்கபலமாக அமைந்துள்ளது. கொத்த உருவாக்கத்தில் அவர் எடுத்துக்கொண்ட சிரத்தைதான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.

ஷ்யாம் சசிதரனின் படத்தொகுப்பு ஆக்‌ஷன் காட்சிகளில் அற்புதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, படத்தின் நீளத்தைக் குறைப்பதில் அதன் பங்கு பெரிதாக இல்லை.

சண்டைப்பயிற்சியாளர் அன்பறிவ் குழுவினரின் உழைப்பு இதில் அபாரம். அக்காட்சிகளுக்காகவே நிறைய நாட்கள் செலவிடப்பட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.

’கிங் ஆஃப் கொத்த’யின் மிகப்பலவீனமான அம்சம், ரொம்பவே இழுவையான அபிலாஷ் சந்திரனின் திரைக்கதை.

கண்ணன் எப்படிப்பட்ட கொடூரன் தெரியுமா என்று வசனங்களில் ‘பில்ட்அப்’ செய்வதற்கேற்ப, படத்தில் காட்சிகள் அமைக்கப்படவில்லை.

அதேபோல, ராஜு ஊரைவிட்டுச் செல்வதற்கும் திரும்பி வருவதற்குமான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.

அனைத்தையும் விட, கொத்த எனும் ஊரில் ரவுடிகளின் அட்டகாசம் ஏன் ஒழிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையான விஷயம் ஓரிடத்தில் கூட தெளிவுற இடம்பெறவில்லை.

கேங்க்ஸ்டர் படம் என்று விலகி நிற்காமல் ரசிகர்களைக் கதையோடு பிணைக்க நட்பு, காதல், பாசத்திற்கான காட்சிகளை கொஞ்சம் நீட்டிக்க விரும்பியிருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி. அது கொஞ்சம் கூட கைகொடுக்கவில்லை.

கேஜிஎஃப், கருட காமன விரூஷிப வாகன உள்ளிட்ட சில படங்களில் சாயல் தெரிந்தாலும், அது பற்றிக் கவலைப்படாமல் இப்படத்தைத் தந்திருக்கிறார் அபிலாஷ் ஜோஷி.

படத்தில் நிறைய பாத்திரங்கள் உண்டு. அவற்றைச் சரிவரை நிறைவு செய்யாமல் விட்டிருப்பதுதான் நெருடலைத் தருகிறது.

அதைவிட முக்கியமான விஷயம். வில்லனைப் பலவீனமாகவும் ஹீரோவை வெல்லவே முடியாத அளவுக்குப் பலமுள்ளவனாகவும் காட்டியிருப்பது.

‘பீமா’ போன்ற பல நல்லுழைப்பு கொண்ட படங்கள் தோற்றதற்கு அதுவே காரணம். அந்த வரலாறு தெரிந்தும், ஒவ்வொருவராக வந்து நாயகனிடம் வரிசையில் வந்து அடி வாங்கிவிட்டுச் செல்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

டைட்டிலை கவனிங்க..!

ஒரு பிரமாண்டமான படத்தைத் தர நினைத்த ‘கிங் ஆஃப் கோதா’ குழு, அதற்கான அத்தனை விஷயங்களையும் பிரேமுக்குள் நிறைத்திருக்கிறது. அப்படியே தமிழ் டைட்டில் வடிவமைப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

டைரக்டர் என்பதை இயக்குனர் என்றோ, இயக்கம் என்றோ குறிப்பிடாமல், ‘டிரெக்டட் பை’ என்று சொல்லியிருப்பதே அதன் அமெச்சூர்தனத்திற்கு சான்று.

இன்றைய தேதியில் மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜுக்கு அடுத்தபடியாக எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு நாயகனாக விளங்குபவர் துல்கர் சல்மான். டொவினோ தாமஸ், நிவின் பாலி, ஆசிஃப் அலி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோருடன் போட்டி போடும் நிலையில் உள்ளார்.

அதேநேரத்தில் சீதாராமம், மகாநடி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று தெலுங்கு, தமிழிலும் தனித்துவமான ஹிட்களை தருகிறார். அது, இப்படம் மூன்று மொழிகளில் வெளியாகவும் பட்ஜெட்டை கைக்குள் அடக்கவும் உதவியிருக்கிறது.

கேங்க்ஸ்டர் படம் என்றாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் வேகம் இதர காட்சிகளில் இல்லை. அந்த இடங்கள் அனைத்துமே மிகப்பலவீனமாக உள்ளன.

சினிமாத்தனம் தெரிய வேண்டுமா அல்லது யதார்த்தமான படம் எனும் உணர்வை உருவாக்க வேண்டுமா என்பதில் இயக்குனர் தெளிவான முடிவைப் பின்பற்றவில்லை.

அதனால், எல்லா ரசிகர்களையும் கவர வேண்டுமென்று யோசித்து எல்லாம் கலந்த ஒரு ‘பொத்தலாக’ படம் மாறியிருக்கிறது.

இப்படித்தான் ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்றொரு படம், பீரியட் பிலிம்’ என்ற முத்திரையுடன் அரதப்பழசான காட்சிகளோடு வெளியானது; கேரள மக்களால் கொண்டாடப் பெற்றது.

அதிலும் எழுத்தாக்கம் செய்தவர் அபிலாஷ் சந்திரன் தான். அதேபோல, இதுவும் மலையாளத்தில் வரவேற்கப்படலாம். அந்த வாய்ப்பு தெலுங்கிலும் தமிழிலும் மிகக் குறைவு!

– உதய் பாடகலிங்கம்

You might also like