பாலிவுட் கொம்பில் படர்ந்த முல்லைகொடி!

பாலிவுட் திரைப்படங்களை பல அழகிகள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஒரு பெயர்தான் சாய்ரா பானு.

தற்போதைய உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பிறந்த சாய்ரா பானு, சிறுவயதிலேயே நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

கதக், பரதநாட்டியம் ஆகிய நடனங்களில் சிறந்தவராக விளங்கிய சாய்ரா பானு, தனது நடனத் திறமையால் திரையுலகில் இடம் பிடித்தார் லண்டனில் படித்து விட்டு, மும்பை திரும்பிய சாய்ரா பானு, தனது 16-வது வயதில், ஷமிகபூருடன் இணைந்து ‘Junglee’ என்ற படத்தில் நடித்தார்.

இதுதான் சாய்ரா பானுவின் முதல் திரைப்படம். இதில் முகமது ரஃபி பாடியது ‘Yahoo Chahe Koi Mujhe Junglee Kahe’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதல் படத்திலேயே சிறப்பாக நடித்த சாய்ரா பானுவின் பெயர் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

காதல் படங்களில் கதாநாயகியாக பாலிவுட் திரையுலகமும், ரசிகர்களும் சாய்ரா பானுவை ஏற்றுக் கொண்டார்கள்.

Shaadi, Purab Aur Paschim, Balidin, Padosan உள்ளிட்ட படங்களில் நடித்த சாய்ரா பானு, 1960-களில் பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழ்ந்தார்.

விக்டோரியா 203, Pocket Maar, Chaitali ஆகிய படங்களும் சாய்ரா பானுவுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து நடிக்காதது தனது திரை வாழ்க்கையில் ஒரு குறையாகவே இருந்தது என பின்னாளில் பேட்டி ஒன்றில் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

1988-ஆம் ஆண்டு வெளியான Faisia என்ற படத்துடன் தனது திரை வாழ்க்கைக்கு விடையளித்து விலகிக் கொண்டார் சாய்ரா பானு.

பழம்பெரும் நடிகர் மறைந்த திலீப்குமா‌ரை 1966-ஆம் ஆண்டு சாய்ரா பானு திருமணம் செய்து கொண்டார். அப்போது திலீப்குமாருக்கு 44 வயது. சாய்ரா பானுவுக்கோ 22 வயது.

1972-ஆம் ஆண்டு கர்ப்பமான சாய்ரா பானுவுக்கு அதிக அளவு ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், கர்ப்பத்தில் இருந்த குழந்தை‌யை காப்பாற்ற முடியவில்லை.

அதன்பிறகு, திலீப்குமார் – சாய்ரா பானு தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ளவே இல்லை. குழந்தை இல்லாமல் இருப்பது கடவுளின் விருப்பம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமா கடவுளின் விருப்பம்?… யார் யாருடன் எப்போது இணைவார்கள், யார் யாரை விட்டு எப்போது பிரிவார்கள்? என்பதும் கடவுளின் விருப்பம்தானே…? ஆண்டவனை நம்பும் ஆத்திகர்களுக்கு!

(பாலிவுட்டின் பழம்பெரும் திரைப்பட நடிகை சாய்ரா பானுவின் பிறந்த நாள்

(ஆகஸ்ட் 23, 1944) இன்று)

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like