ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான பிரான்சிஸ் டே, தனது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனுடன் சேர்ந்து, விஜயநகரப் பேரரசுடன் இன்றைய சென்னையாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தார்,
அது மெட்ராஸாக மாறியது, இன்று தமிந்நாட்டின் தலைநகர் சென்னை என்று அழைக்கப்படுகிறது.
மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்கிய நிலம் சென்னை பட்டணம் என்று கையெழுத்தானது.
384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணமாக இருந்து தற்போது நாட்டின் மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி உள்ளது சென்னை.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே குடியிருப்புகள் வளர்ந்தன. பின்னர் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. பின்னர், பழைய மற்றும் புதிய நகரங்கள் இணைக்கப்பட்டன. இது தற்போது நாட்டின் முக்கியமான பெருநகராக மாறி உள்ளது.
இன்று பல்வேறு காரணங்களால் சென்னை உயர்ந்து நிற்கிறது. கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சுற்றுலா, வாகனத் தொழில்கள், திரைப்படங்கள் போன்றவை சென்னை முன்னணி நகராக உள்ளது.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலகமாக விளங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி மருத்துவமனை, விக்டோரியா மஹால், ரிப்பன் மாளிகை, ராஜாஜி அரங்கம் என சென்னையின் அடையாளங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை, டைடல் ஐடி பார்க், நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முனையமான கோயம்பேடு பேருந்து நிலையம், பிரபலமான வழிபாட்டு தலங்கள், கன்னிமாரா நூலகம், கலங்கரை விளக்கம் என சென்னைக்கென தனி அடையாளங்கள் உள்ளன.
சென்னை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட “உலகைச் சுற்றி வர 52 இடங்கள்” (52 places to go around the world) பட்டியலில் இந்தியா மட்டுமல்ல. தெற்காசியாவிலேயே இடம்பிடித்த ஒரே நகரம் சென்னை தான்.
விஸ்வநாதன் ஆனந்த், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், கருண் சந்தோக், ஏ.ஆர்.ரஹ்மான், சி.வி.ராமன் என பல முக்கிய பிரமுகர்கள் சென்னையில் பிறந்தவர்கள்.
சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்.
கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை இந்தியாவின் முதல் பெரிய ஆங்கில குடியிருப்பு பகுதியாக மாற்றியது.
இந்தியாவின் பழமையான மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடம், சென்னையில் அமைந்துள்ளது. இது 1688 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இன்றும் இயங்கி வருகிறது.
முதலாம் உலகப் போரின் போது தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் மெட்ராஸ் ஆகும். ஜெர்மன் படைகள் தான் தாக்குதலை நடத்தியது.
சென்னையில் உள்ள ராயபுரம் ரயில் நிலையம், இந்தியாவில் பழமையான ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் 1856-ம் ஆண்டு இயங்கத் தொடங்கியது. இன்னும் இயங்கி வருகிறது
மெட்ராஸ் உயர் நீதிமன்ற கட்டிடம் உலகின் இரண்டாவது பெரிய நீதித்துறை அமைப்பாகும்.
மெட்ராஸ் தின வரலாறு
2004 ஆம் ஆண்டு சென்னை ஹெரிடேஜ் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது பத்திரிகையாளர்கள் சஷி நாயர் மற்றும் வின்சென்ட் டிசோசா மற்றும் வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா ஆகியோருக்கு மெட்ராஸ் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
எனவே, சென்னை மாநகரின் தோற்றம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் மெட்ராஸ் தினம் 2004 இல் கொண்டாடப்பட்டது, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
ஆரம்பத்தில் 2004 இல் ஐந்து நிகழ்வுகளுடன் தொடங்கிய இந்த கொண்டாட்டம் 2007 இல் 60 நிகழ்வுகளுக்கு மேல் படிப்படியாக வளர்ந்தது.
ஒவ்வொரு ஆண்டும், மெட்ராஸ் வாரம் மற்றும் மெட்ராஸ் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்று மக்கள் கோருவதால், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மெட்ராஸ் தின கொண்டாட்டம்
மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவது நகரத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மையமாகக் கொண்டது. சமூகங்கள் முதல் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வரை அனைவரும் விழாக்களில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பொது பேச்சு போட்டிகள், பாரம்பரிய நடைப்பயணங்கள், கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்பு அமர்வுகள், உணவு விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, மர நடைப்பயணம், களப்பயணங்கள், புகைப்படப் போட்டிகள், டி-ஷர்ட் டிசைனிங் போட்டி, ஆவணப்படப் போட்டி, மல்டிமீடியா விளக்கக்காட்சி, வினாடி வினா போன்றவையும் பல்வேறு சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகரத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை விளக்கும் பல சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், தொழிற்சாலை, வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும், அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள் சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனர்.
ஆனால் அதே நேரம், சென்னை எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ அதே அளவிற்கு ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் கொண்டுள்ளது.
ஜாதி, மத பேதமின்றி எல்லா தரப்பு மக்களையும் அரவணைக்கிறது சென்னை. அதனால் இது வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கப்படுகிறது.
இன்று கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சென்னையில் முக்கால்வாசி பேர் வெளியூர்காரர்கள் தான்..
பல ஆண்டுகளுக்கு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும், மிகப்பெரிய பிரபலங்களாகவும் மாறியுள்ளனர்.
சென்னை என்பது வெறும் ஊர் மட்டுமல்ல.. அது ஒரு உணர்வு.. இன்று தனது 384வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை இன்னும் பல நூறு ஆண்டுகளை கடந்தும் இதே பெருமையுடன் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
– நன்றி: ஏசியா நெட் இதழ்