தீண்டாமை ஒழிந்தது சட்டத்தில் மட்டும் தானா?

தாய் தலையங்கம்:

முன்னேறிய நாடு என்கிறோம். அதிக மக்கள்தொகை இருப்பதால் வல்லரசு ஆவது பற்றிக் கனவு காண்கிறோம். சில ஆயிரத்திற்கு முந்திய தொன்மை நம்முடையது என்று பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, கல்வியறிவின் சதவிகிதம் அதிகரித்தும் கூட இன்னும் நிலப்பிரபுத்துவ மனோபாவங்கள் கோலோச்சுகின்றன என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சாதியினைக் காரணம் காட்டி ஒரு தரப்பு மக்களைக் கீழானபடி நடத்திக் கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மாநிலங்களில் மட்டும் தான் வேறுபாடு இருக்கின்றது. மூலம் ஒன்று தான்.
ஆணின் முகத்தில் சிறுநீரைக் கழிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

பெண்களை நடுத்தெருக்களில் ஆடைகள் இன்றி பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்குகிறவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கிராமத்து நீர்த்தொட்டியில் மலத்தைக் கலக்கிற அளவுக்குக் குரூரம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

வகுப்பறையில் பாராட்டுப் பெற்ற சக மாணவனைச் சாதிப்பகைமை காரணமாக வீடு புகுந்து வெட்டிச் சாய்த்து, அந்தக் கொடூரத்தைப் பார்த்த உறவினர் ஒருவர் அதிர்ச்சியில் உயிரை விடும் அளவுக்கு மனதில் விஷ வன்ம‍ம் கொண்ட மாணவர்கள் இருக்கிறார்கள்.

தங்கள் சாதியை உயரப்படுத்திக் காட்ட பள்ளிகளுக்கு தனி அடையாளக் கயிறு அணிந்து வரும் மாணவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஜனநாயகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும், இதுவரை தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களைப் பழமை மாறாமல் வைத்திருக்கிற நினைக்கிறவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

சாதீயம் எப்படி எல்லாம் இளம் மனங்களில் களையைப் போல விதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் போது மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறவர்கள் பதற வேண்டியிருக்கிறது.

இந்தச் சாதீய வன்மத்திற்கு வித்திட்டவர்கள் யார்? சாதியப் பாகுபாடு எங்கிருந்து துவங்கி இப்படி எல்லாம் வேர் விட்டிருக்கிறது? வீடுகளிலும், தெருக்களிலும், கோவில்களிலும், பள்ளிகளிலும் கூட அது எப்படியெல்லாம் பரவிக்கிடக்கிறது?

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், சாதியச் சங்கங்களுக்கும் இந்த உணர்வைப் பரப்பியதில் பங்கில்லையா?
சக மாணவளை வெட்டித் தற்போது சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை உண்மையில் எப்படிச் சீர்திருத்துவது?

நம் மனங்களில் பாசியாகவும், அடர்த்தியான அழுக்கைப் போலவும் படர்ந்திருக்கிற சாதிய வன்ம‍த்தை எப்போது, எப்படிக் களையப் போகிறோம்?

சட்ட வரம்பை எல்லாம் மீறி சாதியம் இங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறதா?

கனக்கிறது மனம்!

You might also like