இரு மொழிகளில் உருவாகும் விறுவிறு புலனாய்வு த்ரில்லர் ‘லெவன்’!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘லெவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள்.

அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

You might also like