நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நேற்றுடன் நிறைவடைந்தது. அப்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடந்த நிலையில் பிரதமர் மோடி அத்தீர்மானத்திற்கான விவாதத்தின் மீது பதிலளித்தார்.
இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28% வரி விதிக்க திருத்தம் செய்யும் மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில், பல மசோதாக்கள் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட மசோதாக்கள்:
1. மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28% வரி விதிக்க திருத்தம் செய்யும் மசோதா.
2. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவீதம் வரி விதிக்க திருத்தம் செய்யும் மசோதா.
3. தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா.
4. அரசியல் சாசன (பட்டியல் பழங்குடிகள்) ஆணை (5 வது திருத்த) மசோதா, 2022. சத்தீஸ்கர் மாநிலத்துக்கான பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா.
5. உயிரியல் பன்மிய (திருத்த) மசோதா, 2021.
6. பல மாநிலங்களைச் சேர்ந்த கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) மசோதா, 2022.
7. அரசியல் சாசன (பட்டியல் பழங்குடிகள்) ஆணை (3 வது திருத்த) மசோதா, 2022. இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கான பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா.
8. வன (பாதுகாப்பு) திருத்த மசோதா , 2023.
9. தேசிய தாதி மற்றும் செவிலித்தாய் ஆணைய மசோதா
10. தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா
11. ஜன் விஸ்வாஸ் (துணை அம்சங்கள் திருத்த) மசோதா, 2022
12. காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா.
13. ஒளிப்பதிவு (திருத்த) மசோதா, 2023.
14. பிறப்புகள் மற்றும் இறப்புக்கள் பதிவு செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
15. கடல்பரப்பு தாதுக்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
16. சுரங்கங்கள் மற்றும் தாது வளங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
17. முப்படைகள் ஒருங்கிணைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா
18. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
19. மத்தியஸ்தம் தொடர்பான சட்டத்தின் திருத்தங்கள் செய்யும் மசோதா
20. பத்திரிகைகள் மற்றும் பத்திரிகைகளை பதிவு செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
21. வழக்கறிஞர்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா
22. கடலோர மீன்வள ஆணைய மசோதா
23. கடற்பரப்பு தாதுக்கள் பயன்பாடு தொடர்பான மசோதா.