தெலுங்குப் படங்களை ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்ப்பதென்பது அந்தரத்தில் நடப்பது போன்றது. ‘நல்லாயிருக்கு’, ‘சொதப்பல்’ என்பதைத் தாண்டி வேறுவிதமான கருத்துகளைச் சொல்ல இடமே இருக்காது.
இவ்விரண்டு எல்லைகளையும் தாண்டி மேற்கொண்டு ‘வாவ்’, ’ப்ச்ச்..’ போன்ற கமெண்ட்களை உதிர்க்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், மெகர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘போலா சங்கர்’ பார்க்கத் தொடங்கியபிறகு ‘ப்ச்..’ என்று பலமுறை சலிப்படைய வேண்டியதாகிவிட்டது.
ஒரு தெலுங்குப்படம் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே, அதனைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் என்ற காரணமே இதனைப் பார்க்கத் தூண்டியது.
பாசமலர் கதை!
ஒரு அண்ணன் தங்கை. இருவரும் கொல்கத்தா செல்கின்றனர். அங்கொரு கல்லூரியில் தங்கைக்கு ‘அட்மிஷன்’ கிடைக்க, அண்ணனோ ஒரு டாக்ஸி ஓட்டுநராகப் பணியில் சேர்கிறார். அண்ணனுக்கு ஒரு பெண்ணோடு மோதல் உருவாகிறது.
தங்கையைப் பார்த்த நொடியிலேயே, ஒரு ஆண் காதலில் விழுகிறார்.
அதனை அறியும் அந்த அண்ணன், தன் தங்கையின் விருப்பமின்றி அவரைத் துரத்திக் காதலிக்கக் கூடாது என்கிறார்.
அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, தன் பெற்றோரோடு வந்து அந்த அண்ணனிடம் பெண் கேட்கிறார் அந்த ஆண். அப்புறமென்ன, இந்திய சினிமா வழக்கப்படி கல்யாணம் நிச்சயமாகிறது.
அந்த நேரத்தில், அண்ணனைக் கொல்வதற்காகப் பெரும்படை கிளம்பி வருகிறது. அவர்களனைவரையும் அடித்து துவைக்கிறார் அந்த அண்ணன்.
அதன்பிறகே, அவர் கொல்கத்தா வந்ததே அந்த கும்பலைக் காலி செய்வதற்குத்தான் என்று தெரிய வருகிறது.
அந்த கும்பலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக் ஆக விரிகிறது. அதன்பிறகு, ஒரு சுபமான கிளைமேக்ஸ் உடன் படம் முடிவடையும் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
தமிழில் ‘வேதாளம்’ பார்த்தவர்களுக்கு, அதில் இருக்கும் ‘பாசமலர்’ கதையின் பின்னணி தெரிந்திருக்கும்.
வெற்றிப்படமான அதில், சில பழைய படங்களின் சாயல் நன்றாகவே தெரியும். அதையும் மீறி, அதில் அஜித் ரசிகர்கள் கொண்டாடப் பல அம்சங்கள் இருந்தன. இந்த படத்தில் அவற்றில் பல இடம்பெறவில்லை.
படம் எப்படியிருக்கு?
டட்லியின் ஒளிப்பதிவு, மார்த்தாண்ட் கே.வெங்கடேஷின் படத்தொகுப்பு, ஏ.எஸ்.பிரகாஷின் தயாரிப்பு வடிவமைப்பு அனைத்தும் சேர்ந்து வழக்கமான தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை உண்டாக்குகின்றன.
ஆனாலும், ‘போலா சங்கர்’ நம்மைத் திருப்திப்படுத்துவதில்லை. காரணம், சமகாலத் தெலுங்கு கமர்ஷியல் படங்களில் உள்ள பல விஷயங்கள் இதில் இல்லை.
மஹதி ஸ்வரசாகரின் இசையில் பாடல்கள் ரொம்பவும் மோசம் இல்லை. ஆனால், இருக்கையை விட்டு எழாத அளவுக்கு நம்மைக் கட்டிப்போடவும் இல்லை. பின்னணி இசை கூட ஓகே ரகம் தான்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், சிரஞ்சீவியின் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு. அவர் மட்டுமே, ஒரிஜினல் ‘வேதாளம்’ படத்தில் வரும் பாத்திரத்தின் தன்மையை இதிலும் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.
மற்றபடி சிரஞ்சீவி முதல் தமன்னா, நகைச்சுவை நடிகர் வெண்ணிலா கிஷோர், வில்லனாக வரும் தருண் அரோரா உட்படப் பலரும் ரொம்பவே ‘சாதாரணமாக’ திரையில் வந்து போயிருக்கின்றனர்.
நிச்சயமாக, இது ஒரு இயக்குனரின் தோல்விதான். ஏனென்றால், தமிழில் அந்த இடங்கள் எல்லாம் ரொம்ப ‘பவர்ஃபுல்’லாக வெளிப்பட்டிருக்கும்.
உண்மையைச் சொன்னால், இந்தக் கதையில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறார் சிரஞ்சீவி.
சில காட்சிகளில் ராம்சரண், பவன் கல்யாண் பெயர்களை எல்லாம் உச்சரிக்கும்போது, ’இதே சிரஞ்சீவி தானே மாப்பிள்ளையில் ரஜினி உடன் ஒரு ஷாட்டில் தோன்றி கைத்தட்டல்களை அள்ளியிருப்பார்’ என்ற யோசனை மனதில் நிழலாடுகிறது.
இப்படிப் பல அம்சங்களில், ‘வேதாளம்’ படத்தோடு ஒப்பிட்டு வேதனையடையத் தூண்டுகிறது ‘போலா சங்கர்’.
அஜித் ரசிகர்கள் கவனத்திற்கு..!
‘வேதாளம்’ படத்தின் முதல் சிறப்பு, ‘ஆலுமா டோலுமா’ பாடல். போலவே, முன்பாதியில் எந்த அளவுக்கு அப்பாவித்தனமான கார் ஓட்டுநராக வருகிறாரோ, அதே அளவுக்கு மொட்டைத்தலை கெட்டப்பில் வந்து பிளாஷ்பேக்கில் அசத்தியிருப்பார் அஜித்.
அந்த பாத்திரம் முழுக்க முழுக்க எதிர்மறை குணாதிசயங்கள் கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
அப்படிப்பட்ட நபர் மனதில் சகோதர பாசம் உருவாவதுதான் ’வேதாளம்’ கதையின் மையம். சிரஞ்சீவியை அப்படிக் காட்டாமல் இயக்குனர் தவிர்த்திருப்பதுதான், இப்படத்தின் முதல் சரிவு.
வேதாளம் இடைவேளையையொட்டி வரும் ‘கண்ணாமூச்சி ரே ரே’ வசனம் படுபயங்கரமாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டாலும், அதுவே அப்படத்தின் முத்திரைக் காட்சியாகவும் அமைந்தது.
தமிழில் லட்சுமி மேனனின் பெற்றோராக நடித்த தம்பி ராமையா – சுதா ஜோடி கண் பார்வைக்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளாகக் காட்டப்பட்டிருந்தது.
அவர்களை அஜித் கொடுமைப்படுத்துவது போன்றும் காட்சிகள் உண்டு. அவற்றையெல்லாம் ‘க்ரிஞ்ச்’ என நினைத்து ‘கட்’ செய்திருக்கிறார் இயக்குனர்.
அதற்குப் பதிலாக என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால், தொண்ணூறுகளில் வந்த தெலுங்குப் படங்களைப் போல சிரஞ்சீவியை ‘செக்ஸுவல்’லாக சீண்டுவது போல ராஷ்மி கௌதம், ஸ்ரீமுகி பாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார்.
பெண்களின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்துப் பேசுகிற கதையில் இப்படியொரு அபத்தத்தைப் புகுத்துவதை விட முட்டாள்தனம் வேறில்லை. அது போதாதென்று, படம் முழுக்கச் சட்டையில் அழுக்கு படாமல் சண்டையிடுகிறார் நாயகன்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஒரு பழைய தெலுங்கு சினிமாவை பார்த்த உணர்வை உருவாக்குகிறது.
அஜித் ரசிகர்கள் கவனத்திற்கு.. இந்த படத்தை முழுதாக அல்ல, சிற்சில நிமிடங்கள் பார்த்தால் கூட மனதளவில் வெந்து நொந்துபோவது நிச்சயம்.
‘வீரம் படத்தின் தெலுங்கு, இந்தியில் தெலுங்கு, இந்தி ரீமேக், ‘நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு பதிப்புக்குப் பிறகு, அஜித் நடித்த ‘வேதாளம்’ படமும் தெலுங்கில் வெளியாகி நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அனைத்தையும் கணக்கில் கொண்டால், அஜித் படங்கள் நிகழ்த்தும் மாயாஜாலத்தை வேறு மொழிகளில் பெயர்க்க இயலுமா என்ற கேள்வி பூதாகரமகிறது. அதனை அழுத்தம்திருத்தமாக உணர்த்துகிறது ‘போலா சங்கர்’.
-உதய் பாடகலிங்கம்