ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள்
- சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்” சார்பில் வெளிவந்த “அல்லி அர்ஜுனா”, “ரத்னாவளி” என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான வேகத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்ததால் நடிகர்களின் வாயசைப்பு முன்னால் வர, வசனம் பின்னால் வருவதை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அப்போது தான் முதன் முதலாக சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை நிறுவ தீர்மானித்தார்.
- 1940 ஆம் ஆண்டு மைலாப்பூர், கபாலி தியேட்டர் அருகில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மற்றும் அவரது பங்கு தாரர்களால் உருவாக்கப்பட்ட முதல் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் “பிரகதி ஸ்டூடியோ”.
- பிரகதி ஸ்டூடியோவில் தயாரித்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்த முதல் திரைப்படம் “பூகைலாஸ்” என்ற தெலுங்கு திரைப்படமாகும்.
- ஏ.வி.எம் தயாரித்த “ஓர் இரவு” திரைப்படத்தின் 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதையை ஒரே இரவுக்குள், எழுதி முடித்துக் கொடுத்தார் சி.என்.அண்ணாதுரை. இயக்குநர் ப.நீலகண்டன் இயக்குநரானதும் இப்படத்தின் மூலமே.
- “நாம் இருவர்”, “வேதாள உலகம்”, வாழ்க்கை” ஆகிய படங்களின் சென்னை நகர வினியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள், ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “பராசக்தி”. நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே.
- “பராசக்தி” திரைப்படத்தின் நாயகனாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என்பது ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் விருப்பமாக முதலில் இருந்தது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான பி ஏ பெருமாளின் விருப்பப்படி சிவாஜியை நாயகனாக நடிக்க வைத்து படத்தை எடுத்தவரை போட்டுப் பார்த்த ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தி ஏற்பட்டு, கணேசனே தொடர்ந்து நடிக்கட்டும். தமிழகத்தின பெயரை காப்பாற்றுவார் என்று அன்றே ஆரூடம் கூறினார் மெய்யப்ப செட்டியார்.
- பாடல், நடனம் ஏதும் இல்லாமல் முதன் முதலில் திரைப்படம் தயாரித்த பெருமை மெய்யப்ப செட்டியாரையே சாரும். படம்: “அந்த நாள்”. நாயகன்: சிவாஜி கணேசன்.
- ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் புதல்வர் எம்.முருகனும், மருமகன் வீரப்பனும் இணைந்து ஏ.வி.எம் பேனரில் தயாரித்த திரைப்படம் தான் “களத்தூர் கண்ணம்மா”.
இத்திரைப்படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமல்ஹாசன் அறிமுகபடுத்தப்பட்டார்.
- ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஹிந்தியில் தயாரித்த முதல் திரைப்படம் “பஹார்”. 1951ல் வெளிவந்த இத்திரைப்படம், தமிழில் இவர் தயாரித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற “வாழ்க்கை” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
படத்தின் நாயகியான வைஜெயந்திமாலா ஹிந்தியில் அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் வாயிலாகத்தான்.
- ஏ.வி.எம்மின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகசந்தர், முதன் முதலாக இயக்குநராக அறிமுகமானது ஏ.வி.எம் தயாரித்த “வீரத்திருமகன்” என்ற திரைப்படத்தின் மூலமாக.
- எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து மெய்யப்ப செட்டியார் தயாரித்த ஒரே திரைப்படம் “அன்பே வா”. இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே திரைப்படமும் இதுவே.
- பின்னாளில் மிகப் பெரிய இயக்குநர்களாக அறியப்பட்ட ப நீலகண்டன், கே.சங்கர், எம்.வி.ராமன், ஏ.டி.கிருஷ்ணசாமி ஆகியோர் மெய்யப்ப செட்டியாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் ஆவர்.
- நடிகர் சிவகுமார் ஏ.வி.எம் தயாரித்த “காக்கும் கரங்கள்” திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். பழனிசாமி என்ற இவரது இயற்பெயரையும் சிவகுமார் என மாற்றியதும் இவர்களே.
- ராகினி ரெக்ரியேஷன் நாடகமான “மேஜர் சந்திரகாந்த்” கதையை அதன் கதாசிரியரும், இயக்குநருமான கே.பாலசந்தரை இயக்குநராக்கி அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டது ஏ.வி.எம்.
- சிவாஜி கணேசனின் முதல் படம் “பராசக்தி”, 125வது படம் “உயர்ந்த மனிதன்”, 250வது படம் “நாம் இருவர்”. இத்திரைப்படங்களை தயாரித்தது ஏ வி எம்.
- 1941ல் வெளிவந்த “வசந்தசேனா” என்ற திரைப்படமே ஏ.வி.மெய்யப்ப செட்டியார், கன்னடத்தில் தயாரித்த முதல் திரைப்படமாகும்.
- கன்னட நடிகர் ராஜ்குமார் அறிமுக திரைப்படமான “பேடர கண்ணப்பா” திரைப்படத்தை தயாரித்ததும் ஏ வி மெய்யப்ப செட்டியாரே.
- நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த முதல் ஏ.வி.எம் திரைப்படம் “சகலகலா வல்லவன்”. கடைசியாக நடித்த திரைப்படம் “பேர் சொல்லும் பிள்ளை”.
- நடிகர் ஜெய்சங்கர் நாயகனாக நடித்த முதல் ஏ.வி.எம் திரைப்படம் “குழந்தையும் தெய்வமும்”. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய இத்திரைபடத்தின் மூலம் ஜெய்சங்கர் தமிழகமெங்கும் புகழ் பெற்றார்.
- 1967 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த திகில் திரைப்படமான “அதே கண்கள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “பொம்பள ஒருத்தி இருந்தாளாம்” என்ற பாடலில் முதன் முதலாக “டாக்கர”, “சொடிஜா”, “தொன்னவா” என்ற சௌராஷ்டிர மொழி வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.
- ஏ.வி.எம்மிற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் “முரட்டுக்காளை”.
- ஏ.வி.எம் தனது 50வது ஆண்டு பொன்விழா நிறைவை கொண்டாடும் வகையில் தயாரித்த திரைப்படம் “மின்சாரக்கனவு”.பிரபுதேவா, அரவிந்தசாமி, கஜோல் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்கியிருந்தது ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இசையமைத்திருந்தது ஏ ஆர் ரஹ்மான்.
- பழம்பெரும் நடிகர்கள் டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் டி.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் அறிமுகமானது1938 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரித்த “நந்தகுமார்” என்ற திரைப்படத்தின் மூலம்.
- ஏ.வி.எம் தயாரித்த முதல் சிங்கள திரைப்படம் 1956ல் வெளிவந்த “டாக்டர்” என்ற படமாகும்.
- ஏ.வி.எம் நிறுவனத்திற்காக நடிகர் ஜெமினி கணேசன் நடித்த முதல் திரைப்படம் “பெண்”.1954ல் வெளிவந்த இத்திரைப்படம் “சங்கம்” என்ற பெயரில் தெலுங்கிலும், “லட்கி” என்ற பெயரில் ஹிந்தியிலும் தனித்தனியே எடுத்திருந்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
– நன்றி: தினமலர்