தாய் – தலையங்கம்
மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே பார்த்துக் கொண்டிருந்தது.
முதலில் அமளிமயமாக நடந்த நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக இதுவரை வெளிப்படுத்தாத ஆக்ரோஷத்தோடு அவர் பேசிய பேச்சை முடிந்தவரைக்கும் நேரடியாக ஒளிபரப்புவதைத் தடுக்க அவ்வளவு வேலைகளைச் செய்தது பா.ஜ.க. அதையும் மீறித்தான் அவர் பேசினார்.
மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி அங்கு போகாதிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ.க.வினரை “தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள்’’ என்று நேரடியாகக் கொந்தளித்துப் பேசினார்.
அவருடைய குரலில் வெளிப்பட்ட உணர்வு மணிப்பூர் மக்களின் உணர்வை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வையும் பிரதிபலித்தது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சு அதிகாரத்தின் குரலாகவே வெளிப்பட்டது.
காங்கிரசைக் குற்றம் சாட்டிய அவர், காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளைக் குறிப்பாக, தி.மு.க. மீது குற்றம் சுமத்தினார்.
ஆ.ராசா குறித்து எச்சரிக்கையாகப் பேச, அவர் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடியின் பேச்சு – அவர்களுடைய மொழியிலேயே சொன்னால் “மங்கீ பாத்’’ குரலாக இல்லை.
மணிப்பூர் விவகாரம் பற்றி அவர் விரிவாகப் பேசவில்லை. தான் ஏன் அங்கு போகவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை.
வெறுமனே எதிர்க்கட்சிகளை வழக்கம் போல விமர்சித்துவிட்டு “ஏழைத் தாயின் மகனான தான் பிரதமர் ஆவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை’’ என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசிய தன்னுடைய பேச்சையே நகல் எடுத்த பிரதமரின் பேச்சு பொதுவெளியில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர்கள் தோற்றிருக்கலாம்.
ஆனால், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பிரதமரைப் பேச வைத்து விஷயத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.
இதே நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரான அமித்ஷா சொன்ன வார்த்தை ஒன்று இந்தச் சூழலுக்கு மிகவும் பொருந்தும்.
இவர் தெரிவித்தது இதைத் தான்.
“நாட்டு மக்கள் இங்கு நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும்’’
*