5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஜெயிலர் டிக்கெட்!

’ஜெயிலர்’ காய்ச்சல் தமிழ்நாட்டை தாண்டியும் பரவி உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படம் வெளியாவதால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளுடன் செயல்படும் தனியார் நிறுவனம், ’ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் வியாழக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ சினிமா 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்தப் படம் பார்ப்பதற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR துறைக்கு விடுமுறை விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இது தவிர, எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மேலும் சில நிறுவனங்களும், தங்கள் ஊழியர்கள், முதல் நாளிலேயே ஜெயிலர் படம் பார்க்கும் வகையில், தங்கள் அலுவலகத்துக்கு 10-ம் தேதி விடுமுறை விட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொள்ளை லாபம்

வழக்கமாக ரஜினியின் படங்கள், அதிகாலையில், ரசிகர்களுக்காக திரையிடப்படும். ஆனால் ஜெயிலர் படத்துக்கு தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை.

காலை 9 மணிக்குப் பிறகே தமிழக திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அங்கு பெரும்பாலான திரையரங்குகளில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.

பெங்களூருவில் உள்ள சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கே ஜெயிலர் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலையில் தொடங்கியது.

ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே திரையரங்கு வாசலில் கியூவில் நின்று போட்டி போட்டு டிக்கெட் வாங்கினர்.

சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன்கள், கார்களில் பெங்களூரு வந்திறங்கினர்.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 2200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

சில தரகர்கள் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்று பெரும் லாபம் பார்த்துள்ளனர். தியேட்டர் ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, தரகர்கள் மொத்தமாக டிக்கெட் வாங்கி, கள்ளச் சந்தையில் 5,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

சில திரையரங்குகளும், நேரடியாக டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனை செய்துள்ள நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் தமிழகத்தில் இருந்து கொத்து கொத்தாக வருவதை சாதகமாக்கிக்கொண்டு சில திரையரங்கங்கள் அதிகாலை 4 மணி காட்சிக்கான டிக்கெட்டை 5,000 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் பார்த்தன.

இமயமலை செல்கிறார். இதற்கிடையே இன்று ஜெயிலர் படம் பார்த்து விட்டு ரஜினிகாந்த் இமயமலை செல்கிறார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் ஷுட்டிங் முடிந்ததும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக ரஜினி, சில ஆண்டுகளாக இமயமலைக்கு போகவில்லை.

-பி.எம்.எம்.

You might also like