இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டு டா’.
ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்த வணிகரீதியான படைப்பு என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கு இந்த படக்குழு விண்ணப்பித்துள்ளது.
கின்னஸ் சாதனையை ஏற்று அறிவிக்கும் குழுவினரும் இது தொடர்பான சாதகமான பதிலை படக்குழுவினருக்கு வழங்கியுள்ளனர்.
இதனால் ஜி. சிவாவின் நடிப்பில் உருவாகும் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’ எனும் திரைப்படம் கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.
இது தொடர்பாக படத்தின் நாயகனும், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜி. சிவாவிடம் பேசினோம்.
ஒரே ஒரு நபர் மட்டும் நடிக்கணும் என்ற ஐடியா எப்படி வந்தது?
ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பினேன்.
எத்தனை நாளில்… எந்தெந்த லொக்கேஷனில் படமாக்கினீர்கள்?
20 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்.
படத்தில் பாடல் காட்சிகள் இருக்கின்றனவா?
இருக்கிறது. காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு நடிகர் நடிக்கும் படத்தை கமர்சியலாக எப்படி எடுத்துள்ளீர்கள்?
ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம் பெற வைத்திருக்கிறோம். அது மட்டுமின்றி சமீப காலமாக நடந்த குற்றங்களை மையப்படுத்தியே திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா படத்தின் அடுத்த பாகம் எப்போது…?
இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. இது தமிழ் சினிமாவில் புது முயற்சி.
இதுபோன்று நிறைய வித்தியாசமான படங்களை இயக்க விரும்புகிறேன்.
இந்தத் திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம்.
அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம்.
விரைவில் சாதகமான பதில் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
ஒரே ஒரு நடிகர் நடிப்பில் கமர்சியலாக உருவாகி இருக்கும் படம் என்பதால் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா’ எனும் திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.