‘நாட்டாமை’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதில் ‘மீன், மானுக்கு வலை போட்டால் வலைக்குள் மீனும் மானும் இருக்கும்; ஆனால், கொசுவலை போட்டால் அதனுள் என்ன இருக்கும்’ என்று ஒரு கேள்வியை எழுப்புவார் நடிகர் செந்தில்.
பதிலுக்கு, ‘நாய்க்கு வலை போட்டா அதுக்குள்ள என்ன இருக்கும்’ என்று தன் பாணியில் ‘கவுண்டர்’ விடுவார் கவுண்டமணி.
நடராஜ் சுப்பிரமணியம், ஷில்பா மஞ்சுநாத் உட்படப் பலர் நடிப்பில், கார்த்திக் ராஜா இசையமைப்பில், ஹாரூண் இயக்கியுள்ள ‘வெப்’ படம் பார்த்தபோது, நாட்டாமை காமெடி நினைவுக்கு வந்து தொலைத்தது.
சரி, அதற்கும் ‘வெப்’ படத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை, அந்தக் காட்சியை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை இயக்குனர் ஆக்கினாரோ என்று தோன்றியது. அது ஏன் என்பதை இந்த விமர்சனத்தின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.
உள்ளே.. வெளியே..!
ஐடி நிறுவனமொன்றில், ஒரே குழுவில் பணியாற்றும் மூன்று இளம்பெண்கள் (ஷில்பா மஞ்சுநாத், சுப பிரியா, சாஷ்வி பாலா); மூவரும் நெருங்கிய தோழிகளாக உலா வருகின்றனர்.
‘வுல்ஃப் கேங்’ என்பது தங்கள் குழுவுக்கு அவர்களாகவே வைத்துக்கொண்ட செல்லப் பெயர்.
வாரம் ஆறு (?!) நாட்கள் உழைப்பு; சனிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை போதை என்பதே இவர்களது தாரக மந்திரம்.
இந்த நிலைமை தொடர்கதையாகும்போது, மூவரும் போதைக்கு அடிமையாகின்றனர்.
இந்தச் சூழலில், உடன் பணியாற்றி வரும் ஜோடி (முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி) ஒன்று தேனிலவை முடித்துவிட்டு பணியில் மீண்டும் சேர்கிறது.
அவர்களை வரவேற்கும்விதமாக, மூவரும் ஒரு ‘பார்ட்டி’ கொடுக்கின்றனர். அதன் முடிவில், மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மூன்று பேரும் காரில் செல்கின்றனர். அதற்கடுத்த நாள் விடியும்போது, நால்வரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் கிடக்கின்றனர்.
முந்திய நாள் பார்ட்டியில் ‘ஹாலோவீன்’ உடையணிந்து வந்த நபர்களில் ஒருவர், அவர்களைக் கடத்தியிருக்கிறார். ஆனால், காரணம் என்னவென்று தெரியவில்லை.
அவர் ஒரு மாற்றுத்திறனாளி; ஊன்றுகோல் வைத்திருக்கிறார். இதற்கு முன்னர், நால்வருமே அவரைப் பார்த்ததில்லை.
அந்த நபருக்கு உதவியாக ஒரு பெண் பணியாளர் இருக்கிறார். அந்தப் பெண்களுக்கு உணவு தருவதோடு, மருந்தைச் செலுத்தி மயக்கமுறச் செய்யும் வேலையைச் செய்கிறார்.
அந்த அறையை ஒட்டி, பாத்ரூம் செல்லும் வழியில் ஒரு பெண் ரத்தக் காயங்களோடு கிடக்கிறார்; அவர் யார்? எதற்காகத் தாக்கப்பட்டார்? எதுவும் அப்பெண்களுக்குத் தெரிவதில்லை.
இந்த நிலையில், தனது காதல் கணவரின் பிணம் பீரோவில் இருப்பதைப் பதறுகிறார் புதிதாகத் திருமணமான பெண். அனைக் கண்டு கோபமுறும் அந்த மர்ம நபர், அவரையும் தனியறையில் பூட்டி கொடூரமாகத் தாக்குகிறார்.
அதன்பிறகு, ஒரு சாக்குப்பையைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்; அந்த பையில், தோழியின் கைவிரல்கள் தெரிவதைக் கண்டு மூன்று பெண்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அதுநாள்வரை மூழ்கிக் கிடந்த போதையில் இருந்து விடுபட்டு மரண பயத்துக்கு ஆட்படுகின்றனர்.
அதன்பிறகு, அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் எண்ணம் அவர்களுக்கு வந்ததா இல்லையா என்பதோடு ‘வெப்’ படம் முடிவடைகிறது.
முதல் பதினைந்து நிமிட காட்சிகளில் மூன்று இளம்பெண்களும் வேலை, போதை இரண்டிலும் சம அளவில் திளைப்பது சொல்லப்படுகிறது. அதில் இரண்டு பாடல்களும் அடக்கம்.
அதன்பிறகு, மூவரும் தப்பிக்கயியலா கூண்டில் அடைபட்ட உணர்வை ‘வெப்’ திரைக்கதை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. அதனால், நாயகிகளின் ‘உள்ளே வெளியே’ ஆட்டமும் நம்மைச் சுவாரஸ்யப்படுத்தவில்லை.
நல்ல எண்ணம்!
இந்தப் படத்தின் நாயகிகளாக ஷில்பா மஞ்சுநாத், சுப பிரியா, சாஷ்வி பாலா மூவரும் வருகின்றனர். என்னதான் கர்வத்துடன், அலட்சியத்துடன், ஆர்ப்பாட்டத்துடன், பயத்துடன், வருத்தத்துடன், சோகத்துடன் நடித்தாலும், மூவரும் கவர்ச்சிப் பதுமைகளாகவே திரையில் தெரிகின்றனர்.
’அது போதும்’ என்றெண்ணுபவர்களுக்கு, அவர்களது இருப்பு இலுப்பைப்பூ சர்க்கரைதான்..!
அனன்யா மணி – முரளி ராதாகிருஷ்ணன் ஜோடி நான்கைந்து காட்சிகளில் வந்து போகிறது. இவர்கள் தவிர்த்து பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் ஐந்தாறு பேர் வருகின்றனர். அலுவலகம், பப் போன்ற இடங்களில் மட்டும் மனிதத் தலைகள் கொஞ்சம் தெரிகின்றன.
இந்தக் கதையில் நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் எதற்கு என்பவர்கள், இப்படத்தின் முடிவு பார்த்ததும் ‘ஓஹோ’ என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்வார்கள்.
ஆனால், கிளைமேக்ஸை யோசித்த இயக்குனர் அதற்குப் பொருத்தமான திரைக்கதையை ஆக்கவில்லை. அதுதான் ‘வெப்’ படத்தின் ஆகப்பெரிய பிரச்சனை.
இசை கார்த்திக் ராஜா என்று சொல்கிறார்கள். பின்பாதியில் இடம்பெற்ற அண்ணன் தங்கை பாசப் பாடல் மட்டுமே, அந்த பெயருக்கு ஏற்றாற் போல உள்ளது. மற்றபடி வேறு பாடல்களோ, பின்னணி இசையோ நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.
ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப், ‘இண்டோர்’ காட்சிகளில் ஒளிக்கலவையால் ரசிக்க வைக்கிறார். ஆனால், திரும்பத் திரும்ப ஒரே கோணங்களை பார்க்கிறோம் என்ற எண்ணம் வரும்போது அயர்வு தொற்றுகிறது.
இயக்குனர் தந்த காட்சிகளை அப்படியே அடுக்கினால் போதும் என்றமைந்திருக்கிறது சுதர்சன் படத்தொகுப்பு.
ஒரு நல்ல எண்ணத்தின் மீது கட்டமைக்கப்பட்ட கதையைக் கொண்டது ‘வெப்’. ஆனால், கிளைமேக்ஸில் இருந்து பின்னோக்கிச் சென்று தொடக்கப்புள்ளியை அடையும்போது அந்த எண்ணம் சிதையாதிருக்க வேண்டும். ‘வெப்’ திரைக்கதையால் அதனைச் சாதிக்க முடியவில்லை.
இது த்ரில்லரா..?
ஆங்கிலம் உட்படப் பல உலக மொழிகளில் ‘கேஜ் த்ரில்லர்’ எனும் வகைமைப் படங்கள் வெகு பிரபலம். அவற்றில் சில திரைப்படங்கள் போர்னோ, ஸ்னஃப் படங்கள் என்று சொல்லத்தக்க அளவில் கொஞ்சம் கண்றாவியாகவும் இருக்கும்; சில படங்கள் குமட்டலை உருவாக்கிவிடும்.
அப்படியொரு நிலைமை இதில் ஏற்படவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம். ஆனால், அது போன்ற படம் எனும் தோற்றத்தை உருவாக்கியதற்கான நியாயத்தை இயக்குனர் எந்த இடத்திலும் விளக்கவில்லை.
முதல் அரை மணி நேரத்தை நாயகிகளின் அலப்பறைகளை நிறைக்கின்றன; அதன்பிறகு வரும் ஒரு மணி நேரக் காட்சிகள், நாயகிகள் தங்கள் மன உறுதியை இழந்து உயிராசையைக் கையிலேந்தி வாழ்வதாக நகர்ந்திருக்க வேண்டும்; அது நிகழவில்லை. அதனால், ‘இது த்ரில்லர் தானா’ என்ற சந்தேகம் நம்மைப் பற்றுகிறது.
ஒருவேளை மொத்தக் காட்சிகளிலும் ‘செறிவை’ நிறைக்க முயன்றிருந்தால், அருமையான திருப்பத்தோடு முடிவடையும் ஒரு ‘குறும்படம்’ கிடைத்திருக்கும். அதற்குப் பதிலாக, சுமார் இரண்டு மணி நேரம் நம் பொறுமையைச் சோதித்திருக்கிறார் இயக்குனர் ஹாரூண்.
2007ஆம் ஆண்டு வெளியான ‘பட்டர்பிளை ஆன் தி வீல்’ எனும் படத்தைத் தழுவி தமிழில் இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன; மலையாளத்திலும் கூட, அதே கதை வேறுவிதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
தெரிந்த கதை என்றபோதும், அத்திரைக்கதைகளின் ‘ட்ரீட்மெண்ட்’ ஆச்சர்யம் தருவதாக இருக்கும். அதைப் போன்றதொரு ட்ரீட்மெண்ட், ‘வெப்’ படத்திலும் இடம்பெற்றிருந்தால், இதையும் நாம் கொண்டாடியிருக்கலாம்.
இயக்குனர் அதனைச் செய்யத் தவறியதால், ஒரு குழுவின் உழைப்பே விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.
டிக்கெட் வாங்கச் செலவழித்த காசு நஷ்டமானாலும் பரவாயில்லை என்று யோசிப்பீர்களானால், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தியேட்டரை விட்டு வெளியேறுவீர்கள்; அதனைச் செய்ய மனமில்லாதவர்கள், படத்தில் வரும் நாயகிகளைப் போல ஒரு இரண்டு மணி நேரம் ‘தேமே’வென இருட்டறையில் அடைந்து கிடக்க வேண்டியிருக்கும்.
ஆக மொத்தத்தில், ‘வலையில் வலியச் சென்று சிக்கியது நாம்தான்’ என்பதே ‘வெப்’ நமக்குத் தரும் சேதி!
– உதய் பாடகலிங்கம்