டி.எம்.எஸ்-100 : இசையால் வசமான விழா!

தமிழ்த் திரையுலகைத் தன் கம்பீரக் குரலால் கட்டிப் போட்டிருந்த பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனின் நூற்றாண்டு விழா – சென்னை வாணி மகால் அரங்கில்.

டி.எம்.எஸ்.ஸின் ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்தச் சிறப்பு விழாவின் சில துளிகள்:

• மிகவும் லயித்து டி.எம்.எஸ் பாடிய முருகனின் பாடலுடன் துவங்கிய விழாவை நிறைவடைய வைத்தவர்கள் யூ.கே. முரளி குழுவினர். தொகுத்து வழங்கியவர் ஒய்.ஜி. மகேந்திரன்.

“எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்திய பாடல் இது” – ஒய்.ஜி.எம். முன்னுரையுடன் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ பாடலை அதே குரல் பாவத்துடன் பாடியவர் டி.எம்.எஸ். செல்வகுமார்,

 • தொடர்ந்து டி.எம்.எஸ்.ஸின் இன்னொரு மகனான டி.எம்.எஸ்.பால்ராஜ், தந்தையின் பல பாடல்களைப் பாடினவிதம் தந்தையின் கெட்டிக் குரலை நகல் எடுத்த மாதிரி இருந்தது.

அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற “சிந்தனை செய் மனமே” பாடலைப் பாடியவர் பிரபலப் பாடகரான முகேஷ்.

தொடர்ந்து சில பாடல்களைப் பாடிய அவரே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தில் இடம் பெற்ற “முத்துக்குளிக்க வாறீகளா?” பாட்டைப் பாடிய போது, எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் மற்றும் உடல் மொழியை அப்படியே பிரதிபலித்துப் பாடி அப்ளாஸ் வாங்கியவர் ஒய்.ஜி.எம். வாரிசான மதுவந்தி. அவருடைய பேரனும் ஒரு பாடலைப் பாடினார்.

• ‘சாந்தி’ படத்தில் தன் வழக்கமான குரலைக் கீழிறக்கி டி.எம்.எஸ். பாடிய “யார் அந்த நிலவு?’’ பாடலைப் பாடுவதற்கு முன் இசையமைப்பாளரிடம் டி.எம்.எஸ். சலிப்புடன் சொன்னதையும், சிவாஜி அந்தப் பாடலுக்குத் தயாரானதையும் சொல்லிவிட்டு, அந்தப் பாடல் பாடப்பட்டபோது கூடுதலான கைதட்டல்.

• திருப்புகழில் வரும் “முத்தைத் தரு” என்ற மொழியின் இறுக்கம் கூடிய பாடலை மேடையில் பாடிய சிறுவனுக்குப் பத்து வயது.

“ஏழிசை மன்னரான தியாகராஜ பாகவதரைச் சந்தித்தபோது, டி.எம்.எஸ்.ஸிடம், “நானாவது என்னுடைய குரலில் மட்டும் தான் பாடுகிறேன். நீயோ பல நடிகர்களின் குரலுக்கு ஏற்றபடி எல்லாம் பாடுகிறாயே’’ என்று அவரைப் பாராட்டினாராம் பாகவதர்.

பாட வந்த புதிதில் டி.எம்.எஸ்,ஸூக்கு வைக்கப்பட்ட பெயர் “எம்.கே.டி. எதிரொலி’’.

• “எங்க அப்பா டி.எம்.எஸ் அவர்கள் ஒவ்வொரு நடிகருடைய குரலின் வளம் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு அதுக்கேத்தபடி தன்னோட குரல் பாவத்தை மாற்றிப் பாடுவார். சிவாஜிக்குப் பாடுறப்போ ஒரு விதமாகவும், எம்.ஜி.ஆருக்குப் பாடும்போது மற்றொரு விதமாகவும் பாடுவார்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம் பெற்ற “என் கேள்விக்கு என்ன பதில்?’’ என்ற பாட்டை முதலில் சிவாஜி பாடுகிற மாதிரி அழுத்தமாகப் பாடியிருந்தார்.

ஏ.வி.எம். செட்டியார் சிவகுமாருக்கேத்த மாதிரி மாற்றிப் பாடச்சொன்னதும் சிவகுமாரை வரவழைத்துப் பேசி அவருக்கேத்த படி அதே பாடலைப் பாடினார்’’ என்றார் டி.எம்.எஸ்.செல்வகுமார்.

• டி.எம்.எஸ் மீது கொண்ட அன்பினால் தனது படத்தில் தனக்காக டி.எம்.எஸ் பாடவேண்டும் என்று விஜய்காந்த் கேட்டுக் கொண்டதின் பேரில் ‘உழவன் மகன்’ படத்தில் டி.எம்.எஸ். பாடிய பாட்டு ”உன்னைத் தினம் தேடும் தலைவன்’’.

தனது வீட்டு நிகழ்ச்சிக்காக டி.எம்.எஸ் மதுரைக்குச் சென்றிருந்த நிலையில்  “அவர் வந்து பாடினால் தான் பொருத்தமாக இருக்கும்’’ என்று எம்.ஜி.ஆர் சொல்லிக் காத்திருந்து பதிவு செய்யப்பட்ட பாடல் ‘அடிமைப் பெண்’ படத்தில் இடம் பெற்ற “தாயில்லாமல் நானில்லை’’ பாடல்.

• சிவகுமார், ரவிச்சந்திரனுக்குப் பாடிய பாடல்களை எல்லாம் பாடப்பட்டாலும், ‘பாத காணிக்கை’ படத்தில் இடம் பெற்ற “ஆடிய ஆட்டம் என்ன?’’ என்று துவங்கும் பாடலை டி.எம்.எஸ்.ஸின் புதல்வர் தந்தை பாணியில் பாடியபோது நெகிழ்ச்சியுடன் கைதட்டல் கூடியது.

• ‘குங்கும‍ம்’ படத்தில் இடம் பெற்ற “சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா’’ என்பது உள்ளிட்ட டி.எம்.எஸ்.ஸை அடையாளப்படுத்திய பல பாடல்களை விழாவில் தொகுத்து வழங்கி, அந்தப் பாடல்களுக்கு ஏற்ற படங்களைப் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தாலும்,

மக்கள் திலகத்திற்குப் பெருமை சேர்த்த  “நான் உங்க வீட்டுப் பிள்ளை’’ பாடல் பாடப்பட்டபோது, தளர்ந்த நிலையிலும் மேடைக்கு வந்தவர் அந்தப் பாடலை எழுதியவரான பூவை செங்குட்டுவன். சிக்கனமாக டி.எம்.எஸ்.ஸை வாழ்த்திய அவரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.

• டி.எம்.எஸ். பற்றிய நீண்ட காட்சித்தொடரை இயக்கிய விஜய்ராஜை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார் ஒய்.ஜி. மகேந்திரன்.

அவர் இயக்கிய டி.எம்.எஸ். தொடரின் முன்னோட்டத்தையும் ஒளிபரப்பினார்கள். அதில் வழக்கமான கம்பீரத்துடனே இருந்தார் டி.எம்.எஸ். “அவருடைய நூற்றாண்டு நடக்கிற இந்த நேரத்திலாவது அவரைப் பற்றிய தொடரை வெளியிடுவதற்கு ஏதாவது ஒரு தொலைக்காட்சி முன்வர வேண்டும்’’ என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் மகேந்திரன்.

• நூற்றாண்டுத் தருணத்தில் பாடகர் டி.எம்.எஸ்.ஸூக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிற விழாக்கள் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், முக்கியமாக அவருடைய சொந்த ஊரான மதுரையிலும் கொண்டாடப்பட வேண்டும் என்பது டி.எம்.எஸ், ரசிகர்களின் விருப்பம்.

 – யூகி

You might also like