கத்தார் (Gaddar) என்ற பெயரில் தெலுங்கு மொழியில் நாட்டுபுறப் பாடல்களைப் பாடி, மக்களை ஈர்க்கும் பொதுவுடைமைக் கருத்துகளை மக்களிடம் விதைத்த மாபெரும் கலைஞன் கத்தார் என்ற கும்மாடி விட்டல் ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி.
மாரக்சிய, லெனினியக் கட்சியின் நட்சத்திரப் பாடகராக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் லட்சகணக்கான மக்களின் ஆதர்ச நாயகனாக திகழ்ந்த
ஒப்பற்ற கலைஞன் கத்தார்.
எத்தனையோ கலைஞர்களில் மக்களால், குறிப்பாக உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் கலைஞர்கள வெகு சிலர் மட்டுமே.
அதற்குக் காரணம் அவரது எழுச்சிமிகு இசையோடு கூடிய ஒவ்வொரு வரியும் பாமர மனிதனின் உள்ளுணர்வோடு இணைவதே. அது உண்மையின் உயரிய குரல் .
தனது வசீகரக் குரல் மற்றும் உடல் மொழியின் ஒவ்வொரு அசைவிலும் முற்போக்கு கருத்துகளையும் சமூக அநீதிகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்த அற்புதக் கலைஞன்.
1970 களின் இறுதிகளில் துவங்கி எண்பதுகளில் உச்சம் தொட்ட இந்தக் கலைஞன் தனது 74 வயதில் உடல்நலக் குறைவால் மறைந்து விட்டார்.
வாழ்வின் இறுதிப் பகுதிகளில் ஆன்மிகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார். எனினும் துள்ளல் ஓசையோடு, இசை நயத்தோடு கூடிய அவரது புரட்சிகரப் பாடல்கள் மக்களின் மனதில் என்றும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.
ஆந்திர மக்கள் மட்டுமன்றி அவரது பாடல்கள் அனைத்து மொழி மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இசையும் கலையும் மொழி, இனம் போன்ற எல்லைகளை கடந்த இனிய உணர்வு.
அற்புதக் கலைஞன் கத்தார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். நெஞ்சார்ந்த அஞ்சலி
நன்றி: முகநூல் பதிவு