ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடந்திருக்கிறது.

ஆனால், ஆரம்பிக்கும்போது தெரியாமல், படம் பாதி நடந்து கொண்டிருக்கும்போது, இரண்டு படங்களின் கதைகளின் ஒன்று என தெரிந்தால்? அப்படித்தான் இந்தப் படமும்.

ஆங்கிலத்தில் வெளியான படம், Nobody’s child. இந்தப் படத்தை தழுவி சின்ன அண்ணாமலை தனது வெற்றிவேல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த படம், ‘கடவுளின் குழந்தை’. அவரே திரைக்கதை, வசனத்தை எழுத தாதா மிராசி இயக்கினார். இதில் கல்யாண்குமார், ஜமுனா, எம்.ஆர்.ராதா, ஜி.சகுந்தலா, நாகேஷ், ஜாவர் சீதாராமன் உட்பட பலர் நடித்தனர்.

ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் ஷூட்டிங் பரப்பாக நடந்துக் கொண்டிருந்தபோதுதான், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் கதையும் இதன் கதையும் ஒன்று என தெரிய வந்தது. அதன் ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்துக் கொண்டிருந்தது.

‘கடவுளின் குழந்தை’யையும் ‘களத்தூர் கண்ணம்மா’வையும் Nobody’s child என்ற ஆங்கிலப் படத்தின் கதையின் அடிப்படையிலேயே எடுத்தார்கள். அதன் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட படங்கள்.

இதனால், ‘கடவுளின் குழந்தை’க்கு முன்பே ‘களத்தூர் கண்ணம்மா’வை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்தது, ஏவி.எம் நிறுவனம்.

ஆனால், அந்தக் கதையை அப்படியே தழுவி ‘களத்தூர் கண்ணம்மா’வை எடுக்காமல், தமிழுக்காக நிறைய சென்டிமென்ட் சேர்த்து உருவாக்கினார்கள்.

பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தில், ஜெமினி கணேசன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, தேவிகா, ஜாவர் சீதாராமன் உட்பட பலர் நடித்தனர். இருந்தாலும் சின்ன அண்ணாமலையின் ‘கடவுளின் குழந்தை’ படத்தின் வேலைகள் வேகவேகமாக முடிந்து முதலில் ரிலீஸ் ஆகிவிட்டது.

அதாவது 1960 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இதன் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது. ‘களத்தூர் கண்ணம்மா’. இந்த இரண்டு படமும் ஒரே கதையை கொண்டதுதான் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு மாற்றி எடுத்திருந்தார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் என்ற சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்!

-அழகு

You might also like