புகழ் வெளிச்சம் விழாத இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா!

திரையிசையில் இவர்தான் பிடிக்கும், அவர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாதபடி பல்வேறு படைப்புகளைக் காலம் கடந்து ரசிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதையும் தாண்டி, இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் யாரைப் பிடிக்கிறது என்றால் நிவாஸ் பிரசன்னாவைக் கைகாட்டுவேன்.

‘ஜீரோ’வில் வரும் ‘உயிரே உன் உயிரென நான் இருப்பேன்’ பாடல் எனது பேவரைட். இதோ, இந்த ஆண்டு ‘டக்கர்’ படத்தில் அசத்தலாக 5 பாடல்கள் தந்திருக்கிறார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் ‘இமைத்திடாதே’, ‘ஆத்மநேசர்’, ‘முருகா’ என்று விதவிதமான பாடல்கள் தந்ததோடு, உலகத்தரத்தில் பின்னணி இசை அமைத்திருந்தார்.

இத்தனையும் இருந்தும், அவர் மீது ஏன் புகழ் வெளிச்சம் சரியாக விழவில்லை என்று யோசித்திருக்கிறேன்.

அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும்போது மட்டுமே, இவரைப் போன்றவர்கள் பரவலான ரசிகர்களின் கவனத்தைப் பெறுவார்கள். ஆனால், அது நடந்தேற எது தடையாக உள்ளது என்று தெரியவில்லை.

நிவாஸ் மட்டுமல்ல, அவரது சமகாலத் திறமையாளர்களான லியோன் ஜேம்ஸ், சாம்.சி.எஸ், ஜஸ்டின் பிரபாகரன், வேத்சங்கர் சுகவனம், ஷான் ரோல்டன் போன்றவர்களும் கூட இதே நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் ஊடகங்களின் மீது தான் குற்றம் என்பேன்.
ஓடுற குதிரையில தான் பணம் கட்டுவேன் என்பது போல ’ஓடுற படத்தைத்தான் பார்ப்பேன், எல்லோரும் புகழ்றவங்களையே நானும் புகழ்வேன்’ என்று பார்வையாளர்களில் ஒரு சிலர் நினைப்பது போலவே, ஊடகங்களும் நினைப்பதை எப்படிச் சரி என்று சொல்வது?

‘இவர்தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி’ என்றளவில் இல்லாமல், ஏதோ கொஞ்சம் ‘பில்டப்’ கொடுத்தால் தானே நிவாஸ் போன்றவர்களின் இசைக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்.

குறைந்தபட்சமாக, இவர்களது படைப்பின் மீது உண்மையான அக்கறையைக் காட்டலாமே? அதை விட்டுவிட்டு, ‘இது அந்த பாட்டின் காப்பியாமே’ என்று ஏற்கனவே புளித்துப்போன மெட்டுக்கு இன்னும் கொஞ்சம் யூடியூப் ஹிட்ஸ் அள்ளித் தருவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது?

– பா.உதய்

You might also like