வெயில் காலத்தில் இயற்கையின் வரப்பிரசாதம் தான் பனைமரம். நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்கு வரத்து அதிகரித்துவிடும்.
எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.
நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது நுங்கு.
பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
நுங்கு அதிகம் சாப்பிட்டால் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
வெயிலுக்கு குளுகுளுவென, வயிற்றுக்கு குளிர்ச்சியான இந்த நுங்கு பாயாசத்தை ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.
நுங்கு பாயாசம் செய்ய வேண்டிய தேவையான பொருள்கள் :
நுங்கு – 15
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 300 கிராம்
பாதாம் பிசின் – 3 துண்டு
ஏலக்காய் – 5
செய்முறை :
முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் சேர்த்து 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இவையனைத்தும் நன்றாக ஜெல்லி போன்று உப்பி வந்திருக்கும்.
பின்னர் நுங்கு மேல் தோல் நீக்கி நுங்கில் இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 3 நுங்கை எடுத்துக்கொண்டு, மற்ற நுங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வைத்த நுங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பு பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பால் சிறிது நேரத்தில் நன்றாக சுண்டி வர ஆரம்பிக்கும் பொழுது, அரைத்து வைத்த நுங்கு விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஏலக்காயை தட்டி சேர்த்து கலந்து விடவும்.
இவ்வாறாக கலந்து விட்டது அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் பதம் வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக நறுக்கி வைத்த நுங்கு துண்டுகளைச் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டு, பாயாசத்தை நன்றாக ஆற வைக்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் எடுத்து வைத்த நுங்கு தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இவை ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் அனைவருக்கும் பறிமாறி கொடுத்தால் அற்புதமாக இருக்கும். வயிற்றுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் உடல் சூடு தணியும்.
-வைஷ்ணவி பாலு