தாதா 87 மற்றும் பவுடர் படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார்.
93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
‘ஹரா’ படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்கமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ‘ஹரா’ படத்தில் சாருஹாசன் அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு.
ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார்.
அவரது காட்சிகளை எந்தவித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார்.
அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி” என்று கூறினார்.
மேலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனனும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமாரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
‘ஹரா’ திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தெரிவித்துள்ளார்.