எல்ஜிஎம் – ஒரு ‘ட்ரிப்’ போகலாமா?

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் எதிர்பார்ப்பை உருவாக்கும்; அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியாகும் படம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்திருக்கிறது ‘எல்ஜிஎம்’.

’லெட்ஸ் கெட் மேரிட்’ எனும் ஆங்கில வார்த்தைகள் டைட்டிலுக்கு விளக்கம் சொல்லும். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

காதல், நகைச்சுவை வகைமையில் அமைந்த படம் என்றபோதும், இதனைக் குடும்பத்தோடு பார்த்து மகிழலாம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். உண்மையில், படம் அதற்குக் தக்கவாறு உள்ளதா?

மாமியார் – மருமகள் கதை!

தந்தை இல்லாத குறை தெரியாத வகையில், தன் மகன் கௌதமை (ஹரீஷ் கல்யாண்) வளர்க்கிறார் லீலா (நதியா). மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பதே அவரது மிகப்பெரிய ஆசை.

ஆனால், கௌதம் அதற்குச் செவி சாய்ப்பதில்லை. காரணம், மீரா (இவானா) மீதான காதல்.

‘முதலில் பழகலாம்; பிறகு காதலிக்கலாம்’ என்று ‘கண்டிஷன்’ இடும் மீராவிடம், இரண்டு ஆண்டுகள் கழித்து ‘கல்யாணம் செய்துக்கலாமா’ என்கிறார் கௌதம்.

மீராவோடு சேர்ந்து, அவரது குடும்பமும் அதற்குச் சம்மதம் சொல்கிறது. ஆனால், லீலாவை நேரில் பார்த்ததும் ’மாமியாரோடு ஒரே வீட்டில் வாழ முடியுமா’ என்று தடுமாறுகிறார் மீரா. அதனைக் கௌதமிடம் சொல்ல, அவர் ஆத்திரமடைகிறார்.

அதையடுத்து, இருவரும் பிரிய முடிவெடுக்கின்றனர். ஆனாலும், காதல் அவர்களை விடுவதாக இல்லை. ’ஒரு ட்ரிப் சென்றுவந்தால் உன் அம்மாவோடு செட் ஆகுதான்னு பார்க்கலாம்’ என்கிறார் மீரா. அதனைக் கேட்டு கௌதம் கோபப்பட்டாலும், பிறகு சம்மதம் தெரிவிக்கிறார்.

ஆனால், இந்த விஷயத்தைக் குறிப்பிடாமல் ‘குடும்பத்தோட ஆபீஸ்ல ட்ரிப் போறாங்க’ என்று பொய் சொல்லி லீலாவைத் தன்னுடன் அழைத்து வருகிறார் கௌதம். வந்த இடத்தில், மீரா தன் குடும்பத்தோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் லீலா. வேறு வழியில்லாமல், அனைவரும் ஒன்றாகப் பயணிக்கிறார்கள்.

கர்நாடகாவிலுள்ள குடகுப் பகுதியை அடைகின்றனர். எவ்வளவோ முயன்றும், இரு குடும்பமும் சகஜமாகப் பழக முடிவதில்லை. தொடரும் பிரச்சனைகளால் அனைவரும் சென்னை திரும்புவதென்று முடிவாகிறது.

ஆனால் லீலா, மீரா இருவரும் ‘தாங்கள் தனியாக ட்ரிப் செல்கிறோம்’ என்று கூறுகின்றனர். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் கௌதம் அதற்கு ‘ஓகே’ சொல்கிறார்.

திரும்பும் வழியில், தாய் ‘இன்ஹேலரை’ மறந்து தனது பேக்கில் வைத்திருப்பதைக் காண்கிறார். நண்பன் விஜய் உடன் இணைந்து, மீண்டும் ஹோட்டலுக்கு செல்கிறார். அப்போதுதான், லீலாவும் மீராவும் சேர்ந்து கோவா போனது தெரிய வருகிறது.

அதன்பின் என்னவானது? காதலியையும் தாயையும் கௌதம் தேடிப் பிடித்தாரா? அந்த பயணத்தில் மீராவும் லீலாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘எல்ஜிஎம்’.

கொஞ்சமாய் காமெடி!

இயக்குனர் சொல்வதைக் கேட்டு காட்சிகளின் தன்மைக்கேற்ப நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். அதில் தவறில்லை.

ஆனால், தனது கதாபாத்திரம் கடந்து வந்த வாழ்க்கையை, வலிகளை, அதன் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்தியிருக்கிறாரா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அதாவது, தாயால் தனியாக வளர்க்கப்படும் ஒரு மகனாகத் தோன்ற சிரமப்பட்டிருக்கிறார்.

இந்தக் குறையை அவர் சரி செய்வது அவசியம்.
அதேபோல, இவானாவும் தன்னை எப்படி திரையில் வெளிப்படுத்துவது என்பதில் தடுமாறியிருக்கிறார்.

குழந்தைத்தனத்தையும் அந்த வயதுக்கே உண்டான முதிர்ச்சியையும் அடுத்தடுத்து காட்டும் காட்சிகள் இருந்தும், ‘லவ் டுடே’ போல இப்படத்தில் தெளிவுற அவரது உணர்வு பதிவு செய்யப்படவில்லை.

லீலா என்ற பாத்திரத்தில் தோன்றும் நதியா, பிளாஷ்பேக் காட்சிகளில் மனதோடு ஒட்டிக் கொள்கிறார். உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கணவர் இறந்ததால் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழ்கிற ஒரு பெண்ணாக, அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆனாலும், அப்பாத்திரம் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை நதியாவின் அதீத மேக்கப் மழுங்கடித்துவிடுகிறது.

இந்த படத்தில் யோகிபாபு மிகச்சில காட்சிகளில் வருகிறார். லேசுபாசாக சிரிக்க வைக்கிறார். அவருக்குப் பதிலாக, காமெடியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார் ஆர்ஜே விஜய்.

’விக்கல்ஸ்’ புகழ் விக்ரம், ஹரி இருவரும் இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டிவிட்டு காணாமல் போகின்றனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் தீபா, வெங்கட்பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், வினோதினி, மோகன் வைத்யா, ஜானகி சபேஷ் என்று பலதெரிந்த முகங்கள், சில காட்சிகளோடு காணாமல் போகின்றன.

ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில், படம் முழுவதும் குளுமையும் இனிமையும் மிளிர உதவியிருக்கிறார். அருண் வெஞ்சாரமூடுவின் கலை வடிவமைப்பு, ஒரு விளம்பரப் படம் பார்த்த உணர்வு உருவாக வழி வகுத்திருக்கிறது.

இயக்குனர் அமைத்த திரைக்கதைக்கும் பின்னணி இசைக்கும் ஏற்ப, காட்சிகளை வெட்டி ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்.

‘எல்ஜிஎம்’ திரைக்கதையில் பழைய நெடி அதிகம்; ஆனாலும், கொஞ்சமாய் ஆங்காங்கே வரும் காமெடியும் ரொமான்ஸும் முன்பாதியை நகர்த்த உதவியிருக்கின்றன. பின்பாதியில், அதுவும் கைகூடவில்லை.

அட போங்கப்பா..!

திருமணத்திற்கு முன்னர் மாமியாரைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில், அவரோடு மருமகள் ஒரு ‘ட்ரிப்’ செல்கிறார் என்பதே ‘எல்ஜிஎம்’மின் மையக் கதை.

நிச்சயம் அது சுவாரஸ்யமூட்டும். உண்மையைச் சொன்னால், யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் ‘சினிமத்தனமான’ ட்ரீட்மெண்டில் திரைக்கதை அமைத்து இதனை ஒரு ‘பீல்குட்’ படமாக மாற்றியிருக்கலாம்.

காதலனை விட, அவரது தாயுடன் ஒரு பெண் பாசப்பிணைப்பு கொள்கிறார் என்று முடித்திருக்கலாம்.

அந்தவொரு எதிர்பார்ப்புதான், ‘எல்ஜிஎம்’மை பார்க்கத் தூண்டியது; ட்ரெய்லரும் அதற்கு உத்தரவாதம் தந்தது. ஆனால், படத்தில் அது துளி கூட பூர்த்தி செய்யப்படவில்லை.

கௌதம், மீரா, லீலா என்று ஹரிஷ் கல்யாண், இவானா, நதியாவைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனால், அதற்கேற்ப அவர்களது பாத்திர வடிவமைப்பில் தெளிவு தென்படவில்லை.

அதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய குறை. புதிதாகக் காட்சிகளை அமைத்து திரைக்கதையை இன்னும் சுவையானதாக மாற்றுவதெல்லாம் அதற்குப் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டியவை.

ஆரம்பத்திலேயே கோட்டைவிட்டதன் காரணமாக, பவுண்டரி லைன் தொடும் பந்தை தடுக்க முடியாமல் தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

’படம் பார்க்கறதுக்கு பதிலா, குடும்பத்தோட ட்ரிப் போயிருந்தாலே சுவாரஸ்யமா இருந்திருக்கும்’ என்று எண்ண வைத்திருக்கிறார்.

அதேநேரத்தில், ஒரு இசையமைப்பாளராக வெற்றி கண்டிருக்கிறார். பாடல்கள் சுமார் ரகம் என்றபோதும், பின்னணி இசை அமைத்த வகையில் ரசிகர்கள் தூங்கிவிடாமல் தடுத்திருக்கிறார்.

ஒருவேளை பின்னணி இசை வாய்ப்புகள் வந்தால், அதனை அவர் தவறவிடக்கூடாது என்பதே நம் விருப்பம். மற்றபடி, தோனிக்காக ‘எல்ஜிஎம்’மை பார்ப்பேன் என்று அடம்பிடிப்பதெல்லாம் உங்கள் விருப்பம்..!

  • உதய் பாடகலிங்கம்
You might also like