எப்போது ஹீரோ ஆவார் தோனி?!

மகேந்திரசிங் தோனி, இந்திய கிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர். 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான ரோல்மாடல்களில் ஒருவர்.

முக்கியமாக, ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியில் இருந்து வந்து விஐபி அந்தஸ்தை நோக்கிப் பயணித்து வெற்றிகள் பல கண்டவர்; அது மட்டுமல்லாமல், அந்த வெற்றி முகத்தைத் தக்க வைக்கும் சூத்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

அப்படிப்பட்டவர் திரைப்படத் தயாரிப்பில் இறங்குகிறார் என்றொரு தகவல் மூன்றாண்டுகளூக்கு முன் உலா வந்தது.

இதோ, இப்போது அது முழுக்க உண்மையாகியுள்ளது. தோனி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முதலாவதாக வெளியாகவிருக்கிறது ‘எல்ஜிஎம்’ திரைப்படம்.

தோனியின் பெயரை ‘எம் எஸ் டி’ என்று ரசிகர்கள் செல்லமாகக் குறிப்பிடுவது போல, படத்தின் பெயரும் சுருக்கமாக இருப்பது சென்டிமெண்டாக அமையட்டும் என்று நினைத்திருக்கலாம்.

எப்போதும் ‘7’ எனும் எண் தாங்கிய ஜெர்சியை அணிய விரும்பும் தோனி, ஆண்டில் ஏழாவதாக வரும் ஜூலை மாதம் தனது முதல் தயாரிப்பை வெளியிட விரும்பியதற்கு அந்த எண் மீதான விருப்பம் கூட காரணமாக இருக்கலாம்.

சென்னை கனெக்‌ஷன்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் பிறந்து வளர்ந்த எம்.எஸ்.தோனி, 2004-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.

இரண்டரை ஆண்டுகளில் டி-20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவுக்குத் தனது திறமையை வெளிப்படுத்தினார்; சக வீரர்களின் திறமைகளை மதிப்பிடும் அளவுக்கு உயர்ந்தார்.

அதெல்லாமே, கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த தகவல்கள் தான். அப்படிப்பட்டவர், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியோடு இணைந்தபிறகு கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’யாக மாறினார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, ‘விசில் போடு’ என்றார்.

ஆண்டுகள் பல கடந்து, இன்றும் தோனியைச் சென்னையோடும் தமிழ்நாட்டோடும் இணைத்துப் பார்க்கும் வழக்கம் உயிர்ப்போடு இருந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய நட்பையும் தோனி சம்பாதித்துள்ளார்.

அப்படிப்பட்ட வலுவான பிணைப்பைச் சென்னையோடு கொண்டிருக்கும் தோனி பொழுதுபோக்குத் துறையில் முதலீடு செய்யலாம் என்றெண்ணும்போது தமிழ் திரையுலகம் அவரது முதல் விருப்பமாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.

எல்ஜிஎம் மீதான எதிர்பார்ப்பு!

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்; படத்தின் இசையமைப்பாளரும் அவரே.

தொழில் நுட்பரீதியிலான சிறந்த ஒருங்கிணைப்பை வழங்கும் குழுவுடன் இணைந்து, சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குநர் தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது ‘எல்ஜிஎம்’.

தோனியின் முதல் தயாரிப்பு என்பதால், ஏதேனும் ஒரு சிறப்பம்சம் அதில் இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.

அதைத்தாண்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ‘எல்ஜிஎம்’ மீது ஏற்றிவிடக் கூடாது என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. உண்மையில் அது நல்லதொரு அம்சம்.

‘லவ் டுடே’, ‘குட்நைட்’ போன்ற படங்களின் வெற்றி, குறைந்த அல்லது நடுத்தர பட்ஜெட்டில் நேர்த்தியான திரைக்கதையும் காட்சியாக்கமும் கொண்ட படங்களைத் தேடி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்ற உத்தரவாதத்தைத் தந்திருக்கிறது.

‘எல்ஜிஎம்’ அதனைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
இந்தப் படத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளில் தோனியின் மனைவி சாக்‌ஷியும் கலந்துகொண்டார்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, ‘தோனி ஆக்‌ஷன் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உண்மையைச் சொன்னால், இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். ஏனென்றால், முன்னணி கிரிக்கெட் வீரர்களில் பலர் ஓராண்டில் குறிப்பிட்ட நாட்கள் விளம்பரப் பட படப்பிடிப்பு, போட்டோஷூட், நிறுவனங்கள் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

மைதானத்தில் இருப்பதற்கும் அவற்றுக்குமான வித்தியாசம் அனேகம் என்றபோதும், அதனை எளிதாகக் கைக்கொண்ட ஒருவரால் நிச்சயமாகத் திரைப்பட உலகிலும் வெற்றிகளைக் குவிக்க முடியும்.

இதையே சாக்‌ஷியும் அடிகோடிட்டுப் பேசியிருக்கிறார். அதுவே, ‘தோனி எப்போது ஹீரோ ஆவார்’ என்ற கேள்வியையும் வலுவாக்கியிருக்கிறது.

அதேநேரத்தில், நல்லதொரு ஆக்‌ஷன் கதையோடு அவரைச் சந்தித்தாலும் அது பான் இந்தியா படம் என்ற பெயரில் இந்தியில் தயாராகுமே தவிர, இதர மாநில மொழிகளில் உருவாகும் சாத்தியம் பூஜ்யம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஏனென்றால், தோனி இந்தியா முழுக்கப் புகழ்க் கொடி நாட்டியவர் என்பதை மறந்துவிடக் கூடாது.

திரையில் கிரிக்கெட் ஹீரோக்கள்!

கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைத்துறை கலைஞர்களுக்குமான நெருக்கம் நாமறிந்த ஒன்று. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களோடு நெருக்கமாகப் பழகிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் பெரியது.

வீரர்களோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியல் இன்னும் பெரியது. அந்த திசையில் பயணிப்பது நமக்குத் தேவையில்லாதது.

அதே நேரத்தில், மிகச்சில கிரிக்கெட் வீரர்கள் இந்தி உட்படப் பல மொழி திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களிலோ அல்லது கௌரவமாகவோ தலைகாட்டியதும் நாம் அறிந்ததே.

தற்போது, ’லால் சலாம்’ படத்தில் ரஜினியோடு கபில்தேவ் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையாக இருந்தபோது, சில பஞ்சாபி படங்களில் யுவராஜ்சிங் நடித்துள்ளார்.

நம்மூர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடிக்க வைக்க கமல் பெரும் முயற்சி மேற்கொண்டதாக, அவரே ஒரு மேடையில் தெரிவித்திருக்கிறார்.

இந்த வரிசையில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் என்று சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமீப ஆண்டுகளில் சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றியிருக்கின்றனர்.

இந்த வரிசையில் அஜய் ஜடேஜா, சலீல் அங்கோலாவையும் கூட சேர்க்கலாம். அவ்வளவு ஏன், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் ஜெயம் ரவியோடு சடகோபன் ரமேஷ் நடித்ததை நாம் ரசித்துப் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் தோனியோ அல்லது வேறு கிரிக்கெட் வீரர்களோ கூட எதிர்காலத்தில் இடம்பெறலாம்.

அதேநேரத்தில், மற்றவர்களைப் போல ஏனோதானோவென்று ஏதோவொரு கதையில் தன்னைப் பொருத்திப் பார்க்க தோனி விரும்பமாட்டார் என்பதனை உறுதியாகச் சொல்லலாம்.

ஏனென்றால், இன்றைய தேதியில் ‘கேஜிஎஃப்’ மாதிரியான ஒரு படத்தில் உடலுறுதியைப் பேணும் எந்தவொரு விளையாட்டு வீரராலும் நடித்துவிட முடியும். அதற்குக் குறைந்தபட்ச பயிற்சியும் பெருமளவிலான வேட்கையும் மட்டுமே தேவை.

அதேநேரத்தில், திரையில் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் திணறாமல் சமாளிக்கும் ஆற்றலும் தேவைப்படும்.

அதையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரு முன்னோட்டமாகக் கூட, ‘எல்ஜிஎம்’ படத்தை தோனி தயாரித்திருக்க வாய்ப்புகள் அனேகம்.

இன்னொரு புறம், சில ஆயிரம் கோடிகள் புழங்கும் ஒரு தொழில் துறையில் புதிதாகக் களமிறங்கிச் சாதிக்க முனையும் நம்பிக்கையும் அவரிடம் மிகுந்திருக்கலாம்.

ஏதோ ஒன்று அவரை திரைப்படத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறது. இந்த அனுபவத்தின் துணையோடு தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் அவர் கால் பதிப்பார் என்றே தோன்றுகிறது. 

‘எல்ஜிஎம்’ அவருக்கு நல்லதொரு வழி காட்டட்டும்; அப்படியே, தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வண்ணம் பெருவெற்றியைப் பெறட்டும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like