தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் நாயகர்கள் யாராவது அவ்வப்போது வருவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் ரவிச்சந்திரன். 1960களில் காதல் நாயகன். 1980களில் மிரட்டல் வில்லன்.
மலேசியாவில் பிறந்த ரவிச்சந்திரனின் தந்தை மலேசியாவில் ‘தமிழ் நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரி படிப்புக்காக திருச்சிக்கு வந்தவருக்கு மருத்துவம் படிக்க ஆசை.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவராக இருந்த அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஸ்ரீதர்.
1963ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படம் தான் ரவிச்சந்திரன் அறிமுகம். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
முத்துராமன், காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், டி.எஸ்.பாலையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த அந்த படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி ரகம்.
முதல் படத்திலேயே கனவு நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த ரவிச்சந்திரன் நடித்த அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அமோக வரவேற்பை பெற்றவை.
ஜெயலலிதாவுடன் நடித்த ‘நான்’, திரில்லர் படமான ‘அதே கண்கள்’ (கமலின் ‘விக்ரம் 2’ படத்தின் raw version), ‘இதய கமலம்’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘கவுரி கல்யாணம்’, ‘வாலிப விருந்து’… இப்படி 100 நாட்களை கடந்த படங்கள் ஏராளம்.
எம்ஜிஆர் போலவே படங்களை கொடுத்ததால் ‘சின்ன எம்ஜிஆர்’ ‘ரொமான்ஸ் ஹீரோ’… இப்பிடி நிறைய பட்டங்களை கொடுத்து 1960களின் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடி தீர்த்தனர்.
பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி வசூல் நாயகனாக ரவிச்சந்திரன் வலம் வந்தார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளி விட்ட அவர், 1980களில் வில்லனாக சினிமாவுக்குள் மீண்டும் வந்தார். 1986ல் வெளியான ‘ஊமை விழிகள்’ படத்தில் மிரட்டியிருப்பார்.
80ஸ் கிட்ஸ்களை தூக்கத்தில் கூட திகிலூட்டிய அந்த படத்தில் அடுத்தடுத்து கொலைகளை செய்யும் மர்ம மனிதனாக அதகளம் செய்திருப்பார் ரவிச்சந்திரன்.
அதே ஆண்டில் விஜயகாந்தின் ‘அம்மன் கோயில் கிழக்காலே’, படத்தில் நாயகி ராதாவின் தந்தையாக வில்லனாக நடித்தார்.
கொஞ்ச காலம் வில்லனாக இருந்தவர் அப்புறமாக தந்தை, தாத்தா என குணச்சித்திர நடிகராக மாறினார்.
ரஜினியுடன் ‘குரு சிஷ்யன்’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘அருணாச்சலம்’ கமலுடன் ‘பம்மல் கே சம்பந்தம்’ என நடித்த ரவிச்சந்திரன் ‘கண்டேன் காதலை’ படத்தில் தமன்னாவின் தாத்தாவாக சந்தானத்துடனும் காமெடி பண்ணியிருக்கிறார்.
ரவிச்சந்திரனின் மொத்த குடும்பமும் சினிமா குடும்பம் தான். அவருக்கு இரண்டு மனைவிகள்.
சூப்பர் ஹிட் மலையாள படமான ‘செம்மீன்’ நாயகி ஷீலா இவரது இரண்டாவது மனைவி (‘சந்திரமுகி’ படத்தில் நாசர் வீட்டின் ஆளுமையாக அகிலாண்டேஸ்வரி வேடத்தில் வருவாரே அவர்தான்…)
ரவிச்சந்திரன் தனது 100வது படத்தை தானே இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
2005ல் வெளியான ‘மந்திரன்’ என்ற அந்த படத்தின் ஹீரோ அவரது மகன் ஹம்ஸ வர்தன். ரவிச்சந்திரன் 7 படங்கள் வரை இயக்கி இருக்கிறார். அவரது மகன் ஹம்ஸவர்தனும் 10க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
ரவிச்சந்திரனின் மற்றொரு மகன் ஜார்ஜ் விஷ்ணுவும் நடிகர் தான். துணை நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
‘நகரம்’ படத்தில் வடிவேலு போகும் இடமெல்லாம் சுந்தர்.சி செல்லும் காமெடியில் சுந்தர் சி-யுடன் ஆட்டோ ஓட்டுநராக வருபவர் இவர்தான்.
நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் இன்றைய பிரபல சினிமா நட்சத்திரம் தான்.
சசிகுமாருடன் ‘பலே வெள்ளையத் தேவா’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘நெஞ்சுக்கு நீதி’, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படங்களின் ஹீராயின் தான்யா ரவிச்சந்திரன் தான் அவர்!
– நன்றி: இந்துஸ்தான் தமிழ்