சத்திய சோதனை என்றவுடன், ‘காந்தி எழுதிய சுயசரிதை தானே’ என்று கேட்பது இயல்பானது. ‘சூரியன் படத்துல கவுண்டமணி பேசுற வசனம்தானே அது’ என்று கேட்பது சினிமா வெறியர்களுக்கானது.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எப்படியிருக்கும்? அதாகப்பட்டது, சுய விமர்சனத்துடன் கொஞ்சம் புனைவையும் கலந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் அமைந்துள்ளது இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் ‘சத்திய சோதனை’ திரைப்படம்.
பிரேம்ஜி, ஸ்வயம் சிதா, ரேஷ்மா பசுபுலேட்டி, ‘சுப்பிரமணியபுரம்’ கே.ஜி.மோகன், ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
அப்பாவியா, அடப்பாவியா?
ஒரு நபரை நான்கு பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்கின்றனர். அடுத்த நாளே போலீசிலும் சரணடைகின்றனர். ஆனால், பலியானவரின் உடல் அந்த காவல்நிலைய எல்லைக்குள் இல்லை.
அதற்குள்ளாகவே, அருகிலுள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பிணத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.
சரி, சடலம் இடம் மாறியது எப்படி? அந்த இடத்தில்தான், நாயகனின் நல்ல உள்ளம் புரிந்த தொண்டு தெரிய வருகிறது.
அந்த பிணத்தை இடம் மாற்றி வைப்பதற்கான காரணமும் ரொம்பவே எளிமையானது.
வெயிலின் பிணம் கிடக்கிறதே என்று ஓரமாக நிழலில் அதனை நகர்த்திப் போடுகிறார்.
அதோடு, அங்கிருக்கும் மொபைல், பிணத்தின் கழுத்தில் உள்ள தங்க சங்கிலி, கையில் உள்ள வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார்.
அந்தப் பயணத்தின்போது, சாலையில் நடந்து செல்லும் ஒரு மூதாட்டிக்கு ‘லிப்ட்’டும் கொடுக்கிறார். அவர் அளித்த தகவல்களின் பேரில்தான், அந்த பிணம் போலீசாரால் கைப்பற்றப்படுகிறது.
ஆனால், சரணடைந்தவர்கள் போலீசில் சொல்லும் ஒரு தகவல் அந்த நபரையே குற்றவாளிகளில் ஒருவராக மாற்றுகிறது.
வேறொன்றுமில்லை, அவர்கள் கொலை செய்த நபர் 30 பவுன் அளவிலான நகையை அணிந்திருந்தார்.
இப்போது, அரை பவுன் சங்கிலியை மட்டுமே அந்த நபர் ஒப்படைத்திருக்கிறார். உடனே, அதனை அவர்தான் திருடினார் என்று முடிவு செய்கின்றனர் போலீசார். அவரை ‘உரிய’ முறையில் விசாரிக்கின்றனர்.
விசாரணை முறையைத் தாங்க முடியாமல், அதற்கடுத்தநாள் தப்பிச் செல்கிறார் அந்த நபர். கூடவே, கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களையும் ஒரு வாக்கி டாக்கியையும் காவல்நிலையத்தில் இருந்து திருடி விடுகிறார்.
அவ்வளவுதான், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் அனைத்து போலீசாரும் அல்லோகலப்படுகின்றனர். அதன்பிறகு என்ன நடந்தது?
சரணடைந்த நபர்களைப் போலவே, திருட்டுக்குக் காரணமானவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனரா?
வாக்கிடாக்கியோடு தப்பியோடிய நபர் என்னவானார் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சத்திய சோதனை’.
இந்தக் கதையில், காவல்நிலையத்திற்கு புகார் தர வந்து ‘ப்ரூட்டி’ வாங்கிக் குடிக்கும்போது அப்பாவியாகத் தென்படுகிறார் நாயகன். வாக்கிடாக்கியை லவட்டும்போது, அவரே ‘அடப்பாவி’யாக மாறுகிறார்.
கொஞ்சம் சிரிக்கலாமா?
ஒரு கொலையில் இருந்து கதை தொடங்கினாலும், நீதிமன்ற அமைப்பின் கீழ்மட்டத்தில் நிகழும் விசாரணையைக் காட்டும்போது சிரித்துச் சிரித்து கண்ணில் நீர் முட்டுகிறது.
நாயகனாக பிரேம்ஜியைக் காட்டியவுடன், அது இன்னும் அதிகமாகிறது. அதற்கேற்ப, அவரும் அடி வாங்கியபிறகும் ‘கவுண்டமணி’ போல ‘கலாய்’த்தலாக பேசுகிறார்.
அது போதாதென்று போலீசாராக வரும் கே.ஜி.மோகன், செல்வமுருகன் இடையிலான விவாதம் அவ்வப்போது நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறது.
அதற்கும் மேலே கொலையானவரின் நகை திரும்பக் கிடைத்ததா என்று அருகாமை காவல்நிலையத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதும், அதையடுத்து நாயகனிடம் விசாரணை துரிதமடைவதுமாகக் கதை நகர்வது சிரிப்பை அள்ளச் செய்கிறது.
இவையனைத்துமே காவல் துறை மீதான நையாண்டியாகவே படம் முழுக்க அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது சீரியசான இடங்களிலும் சிரிப்பு மூட்டுவதுதான் உரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் தடையை உருவாக்குகிறது.
வெங்கட்பிரபு படங்களில் எப்படி ‘கூல்’ என்று கை, கால்களை ஆட்டித் திரிவாரோ, அது போலவே ‘சத்தியசோதனை’யிலும் தோன்றியிருக்கிறார் பிரேம்ஜி.
சீரியசான காட்சிகளில் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு வசனம் பேசத் தடுமாறியிருக்கிறார்.
உண்மையைச் சொன்னால், இந்த வேடம் அவரைவிட வெங்கட் பிரபுவுக்குத்தான் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். நாயகியாக வரும் ஸ்வயம் சிதா அழகாகத் திரையில் வந்து போயிருக்கிறார்.
தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். கே.ஜி.மோகனும் செல்வமுருகனும் வரும் காட்சிகளனைத்தும் ‘கொஞ்சம் சிரிக்கலாமா’ என்று கேட்கும் ரகம்.
சில இயக்குனர்கள் இவர்களை கவுண்டமணி – செந்தில் போலப் பயன்படுத்தும் வாய்ப்பும் பிரகாசமாகத் தெரிகிறது.
நீதிபதியாக வரும் ஞானசம்பந்தன், சமூக அரசியல் அமைப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது நம்மைச் சிரிக்க வைக்கிறார்.
ஆனால், பட்டிமன்றத்தில் தீர்ப்பு சொல்வது போல கேமிராவை நோக்கி வசனம் பேசுவதுதான் அவரைத் திரையில் காண்பதில் நமக்கிருக்கும் ஒரே சங்கடம்.
இவர்கள் தவிர்த்து ரேஷ்மா பசுபுலேட்டி, அவரது கணவர், குழந்தையாக நடித்தவர்கள், காவல்நிலையத்தில் இருக்கும் இதர போலீசார், சந்தேக வழக்கில் பிடிபட்டவர்கள், கொலை செய்தவர்கள் என்று ஒரு டஜன் பேர் இதில் நடித்துள்ளனர்.
அத்தனை பேரையும் மீறி ‘போலீஸ் இன்பார்மர்’ ஆக நடித்தவரும், மதுரை வட்டார மொழியில் நம்மைச் சாமியாட வைக்கும் அந்த மூதாட்டியும் நம்மைச் சிரிக்க வைக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடித்துள்ளனர்.
ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு ஒரு நேர்த்தியான சினிமா பார்க்கும் அனுபவத்தைத் தரவில்லை. அதேநேரத்தில், கதாபாத்திரங்களின் அசைவுக்கும் கதையமைப்புக்கும் முக்கியத்துவம் தந்து முக்கால்வாசி நேரம் நிலை கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு, வெகுஇலகுவாக நகரும் காட்சியமைப்பை மேலும் லேசானதாக மாற்றுகிறது. எம்.ரகுராமின் இசையில் ‘பார்த்தாலே பாதகத்தி’ பாடல் இனிக்கிறது.
அதனை மிஞ்சும் விதமாக, நகைச்சுவையை ஒருபடி மேலேற்றும் வகையில் பின்னணி இசை தந்திருக்கிறார் தீபன் சக்கரவர்த்தி.
கிராமப் பின்னணியில் அமைந்த காவல்நிலையம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மூதாட்டியின் வீடு போன்றவற்றைக் காட்டும்போது கலை இயக்குனர் வாசுதேவன் குழுவினரின் உழைப்பு தென்படுகிறது.
‘எல்லாமே பொதுவுடைமையா இருந்தவரைக்கும் குத்தம் இல்ல, சட்டம் இல்ல, தண்டனை இல்ல’ என்பது போன்ற வசனங்களில் கவனம் ஈர்க்கிறது குருநாதன் – சுரேஷ் சங்கையா இணை.
இயக்குனருக்கு வெற்றியா?
‘ஒரு கிடாயின் கருணை மனு’ தந்து நம்மை ஈர்த்த சுரேஷ் சங்கையா, இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இது.
அந்த வகையில் விசாரணை, ஜெய்பீம், ரைட்டர், டாணாக்காரன் வரிசையில் இடம்பெறும் இப்படம், காவல் துறையின் குற்ற விசாரணை மீதான விமர்சனமாக அமைந்துள்ளது.
பின்னணி இசையில் தென்படும் ‘நையாண்டி மேளம்’ போலவே, திரையிலும் காட்சியனுபவம் கிடைக்கிறது.
பார்வையாளர்கள் சிரிக்கவும் வேண்டும், சிந்திக்கவும் வேண்டும் என்ற மெனக்கெடலோடு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், காட்சிகளில் இருக்கும் நாடகத்தனம் சீரியசான படம் பார்க்கும் உணர்வை மட்டுப்படுத்துகிறது.
அது போதாதென்று முகத்தில் வருத்தத்தை டன் கணக்கில் நிறைக்க வேண்டிய காட்சிகளிலும் சிரித்தவாறே வலம் வருகிறார் பிரேம்ஜி.
ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ‘ரியாலிட்டி’ மறைந்து, கிண்டலும் கேலியும் நிறைந்த ‘கேரிகேச்சர்’ பாணி கதை சொல்லலே நிறைந்துள்ளது.
அரங்கமே நிறைந்து சிரிப்பும் கைத்தட்டலும் குதூகலமுமாக இருந்தால் மட்டுமே, அதன் வெற்றியை அளவிட முடியும். அதனால், இப்படத்தில் இயக்குனர் பெற்ற வெற்றி எத்தகையது என்பது கேள்விக்குரியதாகிறது.
அதேநேரத்தில், அடுத்த படைப்பை இன்னும் நேர்த்தியாக அவர் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே உள்ளது.
அதுவே, ‘சத்திய சோதனை’ பத்தோடு பதினொன்று அல்ல என்பதைச் சொல்லிவிடுகிறது.
– உதய் பாடகலிங்கம்