தென்னிந்தியாவில் கால் பதிக்கும் பட வெளியீட்டு நிறுவனங்கள்!

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இக்கூட்டணி மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கதை எழுதுவதில் துவங்கி, அதனை படமாக்கி, மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரை திரைப்படத்தின் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவதில் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது.

புதிய திட்டத்தின் மூலம் வித்தியாசமான, புதுமைமிக்க கதையம்சம் கொண்டவர்களை அர்த்தமுள்ள கூட்டணிகளின் மூலம் ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனர் கார்த்திக் கவுடா, “எங்களின் மிக முக்கிய நோக்கம், வித்தியாசமான கதை மற்றும் அவற்றை எழுதுவோரை ஊக்கப்படுத்துவது தான்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை எடுப்பதில் பிரபலமாக அறியப்படும் டி.வி.எஃப். உடன் கூட்டணி அமைப்பதன் மூலம் எங்களின் நோக்கம் விரிவடையும்” என்றார்.

புதிய கூட்டணி குறித்து டி.வி.எஃப். நிறுவனர் அருனப் குமார், “கன்னடா, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் புதிய படங்களை தயாரிக்க ரத்தன் பிரபஞ்சா, குருதேவ் ஹொய்சாலா போன்ற படங்களை தயாரித்த ஸ்டூடியோவுடன் கூட்டணி அமைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

You might also like