ஜூலை-24: ஈழத் தமிழர்களின் கருப்பு நாள்!

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலவரத்தை நினைவுகூரும் ‘கருப்பு ஜூலை’ தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தாய் இணையதளத்திற்காக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பின்வருமாறு:

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத் தமிழர் பிரச்சினை இன்னும் முடியாமல் நீள்கிறதே?

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் நடந்த கூட்டத்தில் ‘‘இந்தியாவின் ஒரு தீவாக அங்குள்ள தமிழர் பகுதிகள் சேர்த்துக்கொள்ளலாமே’’ என்று மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார்.

அதற்கு நேருவும், வல்லபபாய் படேலும் சம்மதிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றியதாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களாலும் மவுன்ட் பேட்டனுக்கு இந்த யோசனை உதித்துள்ளது.

இந்த இரு தரப்பினரும் அப்போது சிங்களவர் எண்ணிக்கைக்கு இணையாக இருந்துள்ளனர். இதை குறைக்க தேயிலை தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழகம் அனுப்பப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழர்களுக்காக இலங்கை அரசு 1964-ம் ஆண்டுவரை 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

காவல் துறை, அரசு நிர்வாகம் என அனைத்திலும் சிங்களர்கள் ஆதிக்கம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.

இதுபோன்ற பல இன்னல்களால், மே 14, 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன.

1970, 1974-ம் ஆண்டுகளை விடப் பெரிதாக, 1983-ல் ‘கருப்பு ஜூலை’ எனும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஜூலை 24, 1983-ல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்ற கலவரம் தனித்தமிழ் ஈழப்போராட்டமாக மாறியதில், அப்போது சுமார் 5,000 பேர் உயிரிழந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர்.

பிரபாகரனை போன்ற தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன்பிறகு தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக நாட்டை விட்டு கிளம்பத் தொடங்கினர்.

இதை முன்னின்று நடத்தியவர் அன்று அமைச்சராக இருந்தவரும், ஜெயவர்தனேவின் மருமகனுமான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே.

பல செய்திகள் வெளிவராமல் இருப்பது உண்மைதான். 1973-74 இல் அமிர்தலிங்கம் பற்றியது முக்கியமானவை. அவருக்கு ஒருமுறை உடல்நலம் குன்றிய போது தமிழத்தின் சிகிச்சைக்காக வர விரும்பினார்.

ஆனால், அவருக்கு இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இதனால், இலங்கையின் நிலையை தமிழகத்தின் முக்கியத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க அமிர்தலிங்கம் விரும்பினார்.

இதற்காக தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் எம்எல்சியாக இருந்த இரா.ஜனார்தனத்தை கச்சத்தீவிற்கு வரும்படி தகவல் அனுப்பினார்.

இருவரும் அங்கு சந்தித்து, அன்றைய முதல்வரான கலைஞர், முன்னாள் முதல்வரான காமராஜர், நடிகர் எம்.ஜி.ஆர்., சிபிஐ கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம், சிபிஎம்ஐயின் பி.ராமமூர்த்தி, மா.பொ.சி ஆகியோருக்கு இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்து கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார்.

மற்றொரு முக்கியமான தகவல் என்னவெனில், அப்போதையத் தமிழ் அரசியல் தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரை சந்தித்து வந்தனர்.

டெல்லிக்கு சென்று பிரதமரை நேரடியாக சந்திக்கும் வழக்கம் அப்போது இல்லை. ஒருமுறை தமிழகம் வந்த அமிர்தலிங்கம், டெல்லியில் பிரதமர் இந்திராவை சந்திக்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவராக இருந்த நெடுமாறனிடம் தெரிவித்தார்.

நெடுமாறனால் நடந்த இந்த சந்திப்பிற்கு மறுநாள் குடியரசு தலைவர் மாளிகையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இதர அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க அமிர்தலிங்கத்தையும் அங்கு வரச் செய்தார்.

அமிர்தலிங்கம் குடியரசு தலைவர் மாளிகைக் கூட்டத்தில் நுழைந்த போது பிரதமர் இந்திரா எழுந்து நின்று கூட்டத்தினரிடையே அவரை அறிமுகப்படுத்தியதுடன், கைதட்டி வரவேற்றார்.

தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் தந்தை செல்வா தலைமையில் 14.05.1976-ல் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நாடாளுமன்றத்திற்கு அதையே தேர்தல் அறிக்கையாக தமிழரிடம் வைத்து 19 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தமிழர் பகுதியிலிருந்து சென்றார்கள்.

அங்கே ஈழம் தனிநாடுதான், இனி எங்களுக்கென்று தனி வாழ்வு தான், இந்தியா எங்களை ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார்கள். இதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கவனத்திற்கும் கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் விடுதலை புலிகள் இயக்கம் 1976 மே 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு முன்பே டிஎன்டி என்று சொல்லக்கூடிய (தமிழ் புதுப் புலிகள்) தமிழ் நியூ டைகர்ஸ் ஆரம்ப கட்டத்திலேயே அதாவது 22 மே 1972 அன்றே துவங்கப்பட்டது.

அதில் பிரபாகரன் பிரதான பங்கு வகித்தார். விடுதலைப் புலி என்கிற இயக்கம் 1976 மே 5-ல் தான் திரும்ப மாற்றி அமைக்கப்பட்ட துவங்கப்பட்டது.

இதற்கு முன்னோடியாக இதற்கு முன்பே தமிழ் நியூ டைகர்ஸ் புது புலிகள் என்ற இயக்கம் 22 மே 1972ல் துவங்கப்பட்டது.

வட்டுக்கோட்டை தீர்மானம் ஒரு அடிப்படை மகா சாசனமாக தமிழர்களுக்கு இருந்தது இந்த அடிப்படையில் ஜனநாயக முறையில் போராடினார்கள், சாத்வீக முறையில் போராடினார்கள், காந்திய முறையில் போராடினார்கள்.

இருந்தும் வேறு வழியின்றி ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள்.

பல்வேறு ஆயுத குழுக்களும் பிரபாகரன் தலைமையில் துவங்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரன், அண்ணன் நெடுமாறன் சொல்லி சென்னையில் என்னுடைய தங்கிய நாட்களை எல்லாம் மறக்க முடியாது.

ஒருமுறை அவர் தியாகராய நகரில் உள்ள ராஜகுமாரி தியேட்டரில் தொட்டால் சுடும் என்ற படத்தின் இரவு காட்சி பார்த்துவிட்டு வந்தபோது அவரும் முகுந்தனும் டி-நகர் கீதா கஃபே பக்கத்தில் சந்தித்துக்கொண்ட போது தேவையில்லாத சர்ச்சைகளால் துப்பாக்கி சுடப்பட்டது. அங்கே பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

பிரபாகரன், ரவீந்திரன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். முகுந்தன் தப்பிவிட்டார். பிறகு அடுத்த நாள் அவரை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்தார்கள். பிறகு பாண்டி பஜார் வழக்கு நடந்தது. விடுதலைப் புலிகளுக்காக மனுக்கள் எல்லாம் போட்டு வெளியில் கொண்டு வந்தோம். பாண்டி பஜார் சம்பவம் 19/5/1982 ல் நடந்த நினைவுகள்.

கடந்த 23/7/1983-இல் நள்ளிரவு 11:30 மணிக்கு தொடங்கி மறுநாள் (இதே நாளில்) சிங்கள அரசால் தூண்டிவிடப்பட்ட கலவரம் ஏறத்தாழ 5000 பேர்கள் முதல் நாளிலே கொல்லப்பட்டார்கள். தமிழனுடைய மாமிசம் விலைக்கு கிடைக்கும் என்று எழுதி வைத்தார்கள் சிங்களர்கள்.

குட்டிமணி, ஜெகன் என்ற வெளிக்கடை சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் கொல்லப்பட்டார்கள்.

இப்படியான நிலையில் பிரபாகரன் போன்றோர்கள் தந்தை செல்வா தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய வட்டுக்கோட்டை தீர்மானம் எங்களுடைய அடிப்படை என்றே தமிழினத்தை முன்னெடுத்தார்கள்.

அந்த கருப்பு நாள் 24.07.1983 கலவரம் நேரத்தில்தான் யாழ்ப்பாண நூலகமும் கொழுத்தப்பட்டது. அங்குள்ள தமிழர்களும் கொல்லப்பட்டார்கள். இது இன அழிப்பு இனப்படுகொலை என இந்திரா காந்தியே நாடாளுமன்றத்தில் சொன்னார்கள்.

இதற்கு காரணம் யார்? இன்றைக்குள்ள அணில் விக்ரமசிங்கேதான். அவர் ஜெயவர்த்தனாவுடைய மருமகன்.

அன்றைக்கு அமைச்சராக இருந்தார். இவர்தான் எல்லா அடிப்படையிலும் இந்த தீங்குகளையும் கொடுமைகளையும் ரணங்களையும் முன்னெடுத்தார் என்பது மறக்க முடியாத ஒன்று.

இதுதான் அன்றைக்கு 23/7/1983 அன்று தொடர்ந்து ஜுலை 24 கருப்பு ஜூலையாக உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் இதை ஒரு துக்கநாளாக எடுத்து வருகின்றனர்.

அந்த நேரத்தில் தான் இந்திரா காந்தி ஈழத் தமிழை ஆதரிக்கவும் துவங்கினார். நாடாளுமன்றத்தில் தமிழர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள், இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று முதன்முதலாக இந்திரா காந்தி சொன்னதும் கருப்பு ஜுலைக்குப் பின்தான்.

இதற்கு பிறகு நரசிம்ம ராவையும், ஜி பார்த்தசாரதியையும் தமிழர்கள் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கொழும்புவுக்கேச் சென்று பேச விட்டுவாருங்கள் என்று ஜெயவர்த்தனாவிடம் இந்திரா காந்தி சொன்னதும் உண்டு.

தமிழர்களை இன ரீதியாக அழிக்க சிங்கள அரசால் ஏற்படுத்தப்பட்ட துயரமான அந்த கருப்பு ஜுலை நாளை மறக்கவே முடியாது.

பல்வேறு கட்டங்களில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கொடுமைகளை ரணங்களை இழைத்தாலும் இந்த கருப்பு ஜூலை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இன்றும் இருக்கின்றது.

இப்பிரச்சினையில், முன்னாள் பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடியின் அணுகுமுறை எப்படி உள்ளது?

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில், இந்து மகா சமுத்திரன் பாதுகாப்பு, சீனா ஆதிக்கம், ஆயிக்கணக்கான கோயில்களை அழித்து புத்த விஹாரங்கள் அமைத்து மாற்றப்படுவதும் என பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக ஒரு கலாச்சார மையம் கட்ட வைத்துள்ளார் பிரதமர் மோடி. இவர், இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு சவாலாகி வரும் புவி அரசியலையும் திறமையுடன் சமாளித்து வருகிறார்.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்கும்படி பிரதமர் மோடியை என் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில், புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார்.

எனவேதான், பல்வேறு உத்திகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அவற்றை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது.

ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த காலம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஜெய்சங்கர் நன்கு அறிந்தவர். அதனால் இந்த பணிகளுக்கு ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றுவார்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்ட உங்களுடைய யோசனை என்ன?

ஆங்கிலேயர் காலம் முதலாகவே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டனர்.

இதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மகாத்மா காந்தியும், நேருவும் கூட உணர்ந்தனர்.

எனவே, இலங்கை தமிழர்கள் போராட்டம் முதல் நடைபெற்ற தமிழின அழிப்பு, தமிழ்த் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொடுமைகள் மீது சர்வதேச அளவில் ஒரு சுதந்திரமான விசாரணை தேவை.

முள்ளிவாய்க்கால் சம்பவமும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிகாரங்கள் இன்றி பொம்மைகளாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்க வேண்டும்.

இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் காணாமல் போன ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதே முள்ளிவாய்கால் போருக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களது காணி நிலங்களில் 14 வருடங்களாக ராணுவம் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாத இந்தராணுவத்தை அங்கிருந்து விலக்க வேண்டும்.

தமிழர்களுக்காக இந்திய அரசுஅளித்த நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. தமிழர்களே இல்லாத ராஜபக்சவின் தொகுதியான காழியில் மிகப்பெரிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் மன்மோகன் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த ரயில் நிலையத் திறப்புவிழாவுக்கு சென்றிருந்தார்.

இதுபோன்ற தவறுகளை இந்திய அரசு கணக்கு எடுத்து தம் நிதியை பயனுள்ள வகையில் செலவிட வலியுறுத்த வேண்டும்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதில் உண்மை என்ன?

பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவர்களில் முதலாமவர் நெடுமாறன், அடுத்து நான், பிறகு புலவர் புலமைப்பித்தன்.

கடந்த 1982-ல் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்புதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியில் பரவலாக அறியப்பட்டார்.

ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரை எங்களுக்கு தெரியும். சென்னையில் பிரபாகரன் மயிலாப்பூர் வீட்டில் என்னுடன்சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார்.

நெடுமாறன் கூறியதன்படி நானும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். இதை ஒரு காலத்தில் மதிமுக தலைவர் வைகோவும் வழிமொழிந்திருந்தார். அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால் ஒருநாள் வருவார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசு கூறும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. அவரது உடலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் பொய். ஏனெனில், பிரபாகரன் உறவினர்களில் யாரிடம் இருந்து ரத்தம்எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

அப்போது, இந்த சோதனைக்கான வசதி இலங்கையில் இல்லை. அதற்காக இலங்கை அரசு இந்தியாவிலும் அதை செய்யவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரமாகும். ஆனால், இவர்கள் 24 நேரத்தில் செய்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை நம்ப முடியவில்லை.

மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கையில் சிக்கும் மீனவர்களுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளதே?

இருதரப்பு மீனவர்கள் இடையே தேவையில்லாத மோதலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது. கச்சத் தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்.

இது மீட்கப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருக்கும் இந்திய பாதுகாப்பு படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும். கச்சத் தீவு அளிக்கப்பட்டபோது முறையாக வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான மசோதாக்களும் நமது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை.

You might also like