பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன.
நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன.
இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உயிர்ப்புடன் திரிவதைக் கேள்விக்குள்ளாக்குகிறது ‘அவள் அப்படித்தான் 2’.
ரா.மு.சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் சையது அபுதாகிர், சினேகா பார்த்திபராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு பெண்ணின் பயணம்!
ஆசிரியராகப் பணியாற்றி வரும் மஞ்சு (சினேகா பார்த்திபராஜா), ஒரு சனிக்கிழமையன்று பள்ளிக்குச் செல்கிறார்.
வேலை முடிந்து பல மணி நேரங்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மொபைலிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால், கணவர் ராமு (சையது அபுதாகீர்) மற்றும் அவரது குடும்பத்தினர் பதற்றமடைகின்றனர். நண்பருடன் சேர்ந்து நகரம் முழுவதும் மஞ்சுவைத் தேடுகிறார் ராமு.
உரிய பலன் கிடைக்காமல் இருவரும் சோர்வடைகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.
அடுத்த நாள் காலையில், மஞ்சு வீடு திரும்புகிறார். எந்த அசம்பாவிதமும் நிகழவில்லையே என்று குடும்பத்தினர் நோக்குகின்றனர். அதேநேரத்தில், கணவர் வீட்டில் தனது தாய் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைகிறார் மஞ்சு. ஆனால், அவரோ ‘ராத்திரி எங்க போன’ என்ற கேள்வியை மகளிடம் கேட்கிறார்.
மஞ்சு அதற்குப் பதிலளிக்கத் தயாராக இல்லை. மாறாக, தன் அறைக்குச் சென்று விடுகிறார். குளித்து, உடை மாற்றி, உணவுண்டு மெல்ல ‘ரிலாக்ஸ்’ மனநிலைக்கு மாறுகிறார்.
மனைவியின் பொறுமை, கணவர் ராமுவுக்கு எரிச்சலைத் தருகிறது. பொறுமை காக்க முடியாமல், ‘ராத்திரி ஏன் வீட்டுக்கு வரலை’ என்ற கேள்வியைக் கேட்கிறார். அப்போதும், மஞ்சு பதிலளிப்பதாக இல்லை.
தாய், மாமியார், கணவர், அவரது பாட்டி என்று வீட்டில் உள்ள அனைவரும் கேள்விகளால் துளைத்தாலும், மஞ்சு மௌனமாக இருக்கிறார். விடாப்பிடியாக, ‘நானாக பதில் சொல்வேன்’ என்பதில் உறுதியாக நிற்கிறார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள ராமு தயாராக இல்லை. அவரிடம், ‘நீங்க எத்தனையோ நாள் ராத்திரி வெளியே தங்கிட்டு காலையில வீட்டுக்கு வந்திருக்கீங்க. நான் எதுவுமே கேட்டதில்லையே.
நான் ஒருநாள்தானே வெளியில போய்ட்டு வந்தேன்’ என்று கேள்வி எழுப்புகிறார் மஞ்சு.
அதன்பிறகு, ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனை ‘ஆம்பள பொம்பள உரிமை’ சம்பந்தப்பட்டதாக மாறுகிறது.
ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் பணிக்குச் செல்லத் தயாராகிறார் மஞ்சு. திருமண நாள் என்பதால், அன்றைய தினம் தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொள்கிறார்.
’தான் என்ன பேசினால் கணவர் என்ன சொல்வார்’ என்ற முன் யோசனைகளோடு அன்றிரவு நடந்தது என்ன என்று அவரிடம் சொல்லத் தயாராகிறார். ஆனால், அங்கு நிகழ்வது வேறொன்றாக இருக்கிறது.
அப்போதும் தனது ‘ஆணாதிக்க’ மனோபாவத்தில் இருந்து ராமு கீழிறங்கி வருவதாக இல்லை. அதன் பிறகு என்ன நடந்தது, மஞ்சு என்ன செய்தார் என்று சொல்கிறது ‘அவள் அப்படித்தான் 2’.
ஓரிரவு முழுக்க வீட்டுக்கு வெளியே கழித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மனநிலையையும், அவரது வீட்டில் உள்ளவர்கள் அதனை எதிர்நோக்கும் விதத்தையும் விவரிக்கிறது இப்படம்.
நிறைய வித்தியாசங்கள்!
ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் ஒரு புதிய முயற்சி. அன்று மட்டுமல்ல, இன்றும் கூட அக்கதை புதிதாக, சமூகத்தின் ஓட்டத்தில் இருந்து விலகி நிற்கும் வகையில் இருக்கும்.
அந்த அளவுக்கு மஞ்சு என்ற பாத்திரத்தின் சிந்தனையும் செயல்பாடும் உரையாடல் மொழியும் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் தாண்டி, அந்தப் பெண் தனக்கெதிரே வரும் ஆண்களை எப்படி மதிப்பிடுகிறார் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும்.
கதை, திரைக்கதை, வசனம் தாண்டி ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை, ஆடை வடிவமைப்பு உட்படப் பல அம்சங்களில் தனித்துவமான படைப்பாக மிளிர்ந்திருக்கும்.
ஆனால், ‘அவள் அப்படித்தான் 2’வில் மஞ்சு என்ற மைய பாத்திரத்தின் பெயர் மட்டுமே முதலாவதில் இருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் அவரது கணவர், பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்று ஓரிரு ஆண்கள் மட்டுமே திரையில் காட்டப்படுகின்றனர். ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் தவிர வேறெவரும் இதில் இடம்பெறவில்லை.
அந்த வகையில், குடும்ப அமைப்புக்கு உள்ளிருக்கும் ஒரு சாதாரண பெண் எப்படி தனக்கான உரிமையை வெளிப்படுத்துகிறார் என்பது மட்டுமே இக்கதையில் சொல்லப்படுகிறது.
பெண்ணியம் என்பது ஆணுக்கோ, குடும்ப அமைப்புக்கோ எதிரானதல்ல என்று கருதும் ஒரு பெண் மனதின் பரீட்சார்த்த பயணமாகவே இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆதலால், 1978இல் வெளியான ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நிச்சயமாக இரண்டையும் ஒப்பிட முடியாது.
நல்ல முயற்சி!
இதில் நாயகியாக நடித்துள்ள சினேகா பார்த்திபராஜா, அந்த பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உடல்மொழியில் வெளிப்படுத்தியிருப்பது அருமையான விஷயம்.
நேர்கொண்ட பார்வையோடு தெளிவோடும் பேசும் ஒரு பெண் திமிர்த்தனம் மிக்கவராகத் தென்பட்டுவிடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார்.
அதேநேரத்தில், தொழில்முறை நடிகர் இல்லை என்பதால் பல இடங்களில் பார்வையை, பேச்சை ஒரே திக்கில் வெளிப்படுத்துவதில் தடுமாறியிருக்கிறார்.
ராமுவாக நடித்துள்ள சையது அபுதாகீர், இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. முதல்முறை திரையில் தோன்றும் பதற்றத்தையும் மீறி, ஒரு காட்சியோடு கலக்கும் ஆர்வம் அவரிடம் தென்படுகிறது.
இவர்கள் இருவரைத் தவிர்த்து சுமார் ஒரு டஜன் பாத்திரங்கள் இதில் வந்து போகின்றன. அவர்களது நடிப்பு ஒரு குறும்படம் அல்லது பகல் நேர சீரியல் பார்த்த உணர்வைத் தருகின்றன.
ஒளிப்பதிவாளர் வேதா செல்வம், ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
’நீளம் குறைந்துவிடுமோ’ என்ற பதைபதைப்புடன், மாடிப்படிகளில் நாயகி ஏறி இறங்குவதையெல்லாம் முழுமையாகத் திரையில் காட்டுகிறார் படத்தொகுப்பாளர் அகமது. கத்திரிக்கு அவர் அதிகம் வேலை தரவில்லை.
அரவிந்த் சித்தார்த்தாவின் பின்னணி இசை, சில இடங்களில் காட்சிகளின் அடிப்படைத் தன்மையை மேலுயர்த்த உதவுகிறது.
இதர தொழில்நுட்பரீதியிலான ஒருங்கிணைப்பு பணிகள் ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தரவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும்.
ஏற்கனவே வெளியான ‘அவள் அப்படித்தான்’ தாக்கத்தில், அதிலிருந்து துளியூண்டு விஷயத்தை எடுத்துக்கொண்டு இக்கதைக்கு உயிர் தந்துள்ளார் இயக்குனர் ரா.மு.சிதம்பரம். அந்த வகையில் ஒரு நல்ல முயற்சி இது.
மனதுக்குப் பிடித்த படைப்புக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக, இப்படைப்பினை ஒரு பிரதியைப் போலத் தந்திருக்கிறார் இயக்குனர் ரா.மு.சிதம்பரம்.
ஆனால், இதில் காட்சிகள், கதாபாத்திரங்கள் இரண்டுமே குறைவாக இருப்பது திரையில் வெறுமையை அதிகப்படுத்துகிறது.
‘ராத்திரி எங்க போன’ என்ற கேள்வி கேட்கும் நாயகனையும், அதற்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்கும் நாயகியையும் மாறி மாறிக் காட்டுகிறது திரைக்கதை.
தொடர்ச்சியாக இருவரையும் திரையில் பார்ப்பது அலுப்பூட்டுகிறது. அதேநேரத்தில், இதனை ஒரு குறும்படமாக ஆக்கியிருந்தால் இன்னும் செறிவுடன் திகழ்ந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
- உதய் பாடகலிங்கம்