ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன.
ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட படம் ‘உயர்ந்த மனிதன்’.
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில், சிவாஜியுடன், மேஜர் சுந்தரராஜன், சவுகார் ஜானகி, அசோகன், வாணிஸ்ரீ, நாகேஷ், மனோரமா, சிவகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.
ஏ.வி.எம் தயாரித்த இந்தப் படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கி இருந்தார்கள்.
வங்க மொழியில் சூப்பர் ஹிட்டான ‘உத்தர் புருஷ்’ என்ற படத்தின் ரீமேக் இது. தமிழுக்காக சில மாற்றங்களை செய்து உருவாக்கி இருந்தார்கள். இது சிவாஜியின் 125 வது திரைப்படம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், இந்தப் படத்துக்காக உருவான, ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே’, ‘என் கேள்விக்கென்ன பதில்’, ‘வெள்ளிக் கிண்ணம்தான்’, ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ உட்பட அனைத்துப் பாடல்களுமே ஹிட்.
முதலில் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சிவாஜி. வங்க மொழியில் வெளியான படத்தைப் பார்த்தவர் இதில் எனக்கு சரியான கேரக்டர் இல்லை, அந்த டாக்டர் கேரக்டரில் கெஸ்ட் ரோல் வேண்டுமானால் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டார்.
பிறகு அவரை தயாரிப்பு தரப்பில் சம்மதிக்க வைத்தார்கள்.
அடுத்து, டைரக்டர் யார் என்று கேட்டதும், அவர்கள் டைரக்ஷனில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார் சிவாஜி.
அவர்களுக்கும் சிவாஜிக்கும் அப்போது ஏதோ பிரச்சனை. அதையும் தயாரிப்பு தரப்பில் பேசி சம்மதிக்க வைத்தார்கள்.
பிறகு சிவாஜியை இயக்குவதற்கு இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சுவும் சம்மதிக்கவில்லையாம். அவர்களையும் ஏ.வி.எம் தரப்புதான் சம்மதிக்க வைத்திருக்கிறது. பிறகு ஷூட்டிங் தொடங்கியதும் சஜகமாகிவிட்டார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அந்த நாள் ஞாபகம்’ பாடல் காட்சிக்கும் அந்தப் பாடலில் வசனங்களும் இடம்பெறுவதற்கு ‘மை ஃபேர் லேடி’ என்ற ஹாலிவுட் படம்தான் காரணம்.
அதில் அந்தப் படத்தின் ஹீரோ கையில் வாக்கிங் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு பாடுவார். அதுபோன்ற பாடலையும் காட்சியையும் இதில் வைத்தார்கள்.
இந்தப் படத்தில் சிவகுமார் படிக்காதவர். இவருக்கும் கல்லூரியில் படித்த பெண்ணுக்கும் காதல். சிவகுமாருக்காக உருவாக்கப்பட்ட ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற பாடலை படமாக்கிவிட்டார்கள்.
படத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், படிக்காதவருக்கும் படித்த பெண்ணுக்குமான காதலை இப்படி தொட்டு நடித்து காட்டக் கூடாது. இருவரும் தொடாமல் நடிக்க வேண்டும் என்று சொல்ல, பிறகு ரீ ஷூட் செய்து படத்தில் சேர்த்திருக்கிறார்கள்!
– அலாவுதீன்