பக் நாய் என்று சொல்வதை விட வோடபோன் டாக் என்று சொன்னால் தான் நாம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
தனித்துவமான உடல் தன்மையையும் சுருக்கங்களுடன் கூடிய முகம் மற்றும் சுருண்ட வால் போன்ற அமைப்புகளைக் கொண்ட பக் டாக் ஒரு பழங்கால நாய் இனமாகும்.
இதன் இனங்கள் கிமு 400க்கும் முந்தையவை.
பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இந்த இனம் சீனாவில் தோன்றியதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இது ஒரு கலப்பின நாய் இனம் ஆகும். விக்டோரியா மகாராணியால் பெரும் அளவு பாசத்துடன் வளர்க்கப்பட்டது.
இந்த நாயின் குணம் ஆனது தனது எஜமானரிடம் பாசத்துடனும் நட்புடனும் பழகும் இயல்புடையது. (pug என்றால் சண்டைக்காரன் என்று பொருள் தரும்).
இந்த நாயானது பல புகழ் பெற்ற நபர்களால் வளர்க்கப்பட்டது மற்றும் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நாய் திருவிழாவில் சிறந்த நாய் இனம் என தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தகைய சிறப்புடைய இந்த நாயினம் 19 ஆம் நூற்றாண்டில் உறுதியான கால்களுடனும் நீண்ட நடுத்தரமான உயரத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் காணப்பட்டன என வரலாற்று ஓவியங்கள் கூறுகின்றன.
மனிதனின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதால் இந்த நாய் இனங்கள் குட்டையாக மாற்றப்பட்டது மட்டுமல்லாமல் பல மருத்துவப் பிரச்சனைகள் வரும் சாத்தியக் கூறுகளுடனும் உள்ளன.
மனிதனின் ஆராய்ச்சியின் முடிவுகளை pug நாயின் மண்டையோடுகளைப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடியும்.
இதன் கர்ப்ப காலம் சராசரியாக 63 நாட்கள். இவை 4 முதல் 6 குட்டிகள் வரை ஈனும். அதிகபட்சமாக 9 குட்டிகளை ஈனும் வகையில் உடலமைப்பைப் பெற்றுள்ளது.
முதல்முறையாக நாய் வளர்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த இனங்களை பரிந்துரைக்கலாம்.
மிகவும் எளிமையாக பழகக்கூடிய குழந்தை போன்ற குணமுடையன இந்த pug நாய் இனங்கள்.
– சங்கீதா