கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!

வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி.

ஒரு நாள் எனது “காற்றின் கையெழுத்து” நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன்.
மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன்.

“உன் புஸ்தகத்த முழுசா படிச்சுட்டேன்யா… பிரமாதம்… இதுக்கு ஏங்கிட்ட அணிந்துரை கேட்டிருந்தா ஃபர்ஸ்ட் கிளாஸா எழுதியிருப்பேன்… உன் அறிவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பேன்” என்றார்.

அந்நேரம் ஆனந்த விகடனில் அவருடைய கேள்வி பதில் பகுதி சில வாரங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது. இங்க பாருய்யா என்று எழுதி வைத்திருந்த கேள்வி பதில் பகுதியைக் காட்டினார்.

“நீங்கள் படிக்க சிபாரிசு செய்யும் பத்து புத்தகங்கள் என்ன?” என்று மயிலாடுதுறை ந.சண்முகம் கேட்டிருந்தார். வாலி பத்து நூல்களைப் பட்டியலிட்டிருந்தார்.

அதில் அவரது “அவதார புருஷனு”ம் ஒன்று. ஆனால் அவர் தனது பெயரையும் புத்தகப் பெயரையும் அடித்துவிட்டு, மேலே “பழநி பாரதியின் காற்றின் கையெழுத்து” என்று எழுதியிருந்தார்.

“பாருய்யா  என்னை எடுத்துட்டு அந்த இடத்துல உன்னை வச்சிருக்கேன்” என்றார்.
அடுத்த வாரம் சமீபத்தில் வாசித்த புத்தகம் பற்றி சிதம்பரத்திலிருந்து என்.காளிதாஸ் கேட்டிருந்தார்.

“பழநி பாரதியின் காற்றின் கையெழுத்து; அற்புதமான புத்தகம். IT PLAYED ON MY NERVES!” – காவியக் கவிஞர் மீண்டும் என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியிருந்தார்.

புதுமைகளை திறமைகளை இளைய பாடலாசிரியர்களை அவர் போல கொண்டாடியவர்கள் மிகக் குறைவு. அவரிடம் கற்றதும் பெற்றதும் என்னிடம் நிறைய இருக்கின்றன. நினைவுகள் சுகமானவை. சில நேரம் துயரமானவை.

You might also like