அந்த காலத்திலும் தக்காளி காஸ்ட்லியா இருந்திருக்குமோ?

தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன.

அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி.

அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம் வந்துவிடும்.

ஆனால், அந்தப் பாடலின் உள்ளர்த்தம் வேறுமாதிரியானது.

‘உள்ளமிளகாயா’ என்பது ‘உன் உள்ளம் இளகாதா?’ என்று அர்த்தப்படும். ‘ஒரு பேச்சுரைக்காயா?’ என்பதில், ‘ஒரு வார்த்தை நீ கூற மாட்டாயா? என்ற அர்த்தம் தொனிக்கும்.

இதேப்போல காளமேகப் புலவர் பாடிய ஒரு காய்கறி, சமையல் பாடல் உண்டு.

‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காய் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தை மகள்
உப்புக்காண் சீச்சீ உமி’

எல்லாமே தெரியாத காய்கறி பெயர்களாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள்.
கரிக்காய்-அத்திக்காய், கன்னிக்காய்-வாழைக்காய், பரிக்காய்-மாங்காய், அப்பைக்காய்-கத்தரிக்காய்.

கவியரசர் கண்ணதாசன் ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில், ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே’ என்ற பாடலை எழுதினார்.

‘காய், காய்’ என முடியும் அந்தப் பாடலின் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு வகை அர்த்தம் மிளிரும்.

அந்தப் பாடலில் மட்டும், அத்திக்காய், ஆலங்காய், பாவைக்காய், அவரைக்காய், கோவைக்காய், மாதுளங்காய், ஏலக்காய், வாழைக்காய், சாதிக்காய், விளங்காய், தூதுவளங்காய், மிளகாய், சுரைக்காய், கொத்தவரங்காய் எல்லாம் வந்துவிடும்.

எல்லாம் வந்தும் என்ன செய்ய? அந்த தக்காளிக்காய் மட்டும் இல்லை.

ஒருவேளை அந்த காலத்திலும்கூட தக்காளி காஸ்ட்லி காயாக இருந்திருக்குமோ?

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like