தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் இளைஞனிடம் இருந்து முதல் முறையாக ஒரு கடிதம் வந்தால் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி பரவசமாகும்.
அந்த பரவச நிலையோடுதான் தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்தார் மரியம்மா. தன் எதிர்கால கணவரிடம் இருந்து ஒரு நீண்ட கடிதத்தை அவர் எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால் அந்த கடிதத்தில் இருந்தது இரண்டே வரிகள்… அதிலும் காதல் சொட்டும் வார்த்தைகள் ஏதும் இல்லை.
“இது தேர்தல் நேரம். உன் பிரார்த்தனையின்போது எனக்காக வேண்டிக்கொள்ளவும்…” என்பதுதான் அந்த கடிதத்தில் இருந்த 2 வரிகள்.
இப்படி காதலிக்கக்கூட நேரமில்லாமல் சதா கட்சி, மக்கள் என்று வாழ்ந்தவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.
ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஒருவரால் தொடர்ந்து எத்தனை முறை ஜெயிக்க முடியும்? அதிகம் போனால் 5 முறை ஜெயிக்கலாம்.
அதற்கு மேல் மக்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.
ஆனானப்பட்ட நேரு குடும்பத்தினராலேயே ஒரு கட்டத்துக்கு மேல் அமேதி தொகுதியை தக்கவைக்க முடியாமல் போனது இந்த சலிப்புத் தன்மையால்தான்.
ஆனால் இதையெல்லாம் கடந்து புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் தொடர்ந்து 53 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறார் உம்மன் சாண்டி.
ஊருக்கெல்லாம் உம்மன் சாண்டியாக இருந்தாலும், தொகுதி மக்கள் அவரை ‘குஞ்ஞுஞ்ஞு’ என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள்.
உம்மன் சாண்டிக்கு அவரது பாட்டி வைத்த செல்லப் பெயர் அது. சிறுவயதில் பாட்டிக்கு எப்படி செல்லமாக இருந்தாரோ, அதேபோல்
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உம்மன் சாண்டி அறிமுகமானது 1970-ம் ஆண்டில்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர், தனது 27-வது வயதில் முதல் முறையாக இத்தொகுதியின் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டார்.
அரசியல் அனுபவம் இல்லாதவரான உம்மன் சாண்டிக்கு சீட் வழங்கப்பட்டதில் தொகுதியின் மூத்த காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அப்போது அதிருப்திகூட எழுந்தது.
உள்கட்சியிலேயே எதிராளிகளைக் கொண்டிருந்த அவர், தேர்தலில் ஜெயிக்க மாட்டார் என்றே பலரும் கருதினர்.
ஆனால் எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்கி 7,288 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தேர்தலில் வென்றார் உம்மன் சாண்டி.
முதல் முறை எம்.எல்.ஏ ஆன பிறகு செய்த பல நல்ல காரியங்களால் தொகுதி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனாலேயே 1977, 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 என்று புதுப்பள்ளியில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றுள்ளார் உம்மன் சாண்டி.
ஒவ்வொரு முறையும் அதற்கு முந்தைய தேர்தலில் பெற்ற வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை காண்பது கேரள மக்களின் வழக்கம்.
ஒருமுறை இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அடுத்தமுறை காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்பதை அடித்துச் சொல்லிவிடலாம்.
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 53 ஆண்டுகளாக புதுப்பள்ளி மக்கள் மனதில் மட்டும் மாறாமல் இருப்பவர் உம்மன் சாண்டி.
கோஷ்டி அரசியலுக்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சியில், கருணாகரன் கோஷ்டி, ஏ.கே.அந்தோணி கோஷ்டி என்று 2 கோஷ்டிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருப்பது உம்மன் சாண்டியின் சிறப்பம்சம்.
இதனால்தான் கடந்த 2011 – 2016 ஆட்சிக் காலத்தை வெறும் 2 உறுப்பினர்கள் மெஜாரிட்டியுடன் அவரால் முழுமையாக கடக்க முடிந்தது.
மற்ற அரசியல் தலைவர்களைப் போல் மடைதிறந்த வெள்ளம்போல் பேசும் ஆற்றலோ, மக்களைக் கவரும் தனித்துவமோ, புத்தகங்களைப் படிக்கும் பழக்கமோ உம்மன் சாண்டிக்கு இல்லை. இருந்தாலும் கேரள மக்கள் மனதில் நாயகனாய் இருக்கிறார் உம்மன் சாண்டி.
இதுபற்றி கூறும் உம்மன் சாண்டி, “மக்கள்தான் நான் படிக்கும் புத்தகம். காகிதங்களால் ஆன புத்தகங்களைப் படித்தோ, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தோ நான் திட்டங்களைத் தீட்டுவதில்லை.
சாதாரண மக்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டே நான் திட்டங்களைத் தீட்டுகிறேன்” என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
ஒரே தொகுதியில் தொடர்ந்து 12 முறை வெற்றி பெற்றதன் ரகசியம் இதுதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் இந்த மக்கள் நாயகன்.
ஒரு நல்ல, எளிமையான அரசியல்வாதியை உதாரணமாக காட்ட வேண்டுமானால் நாம் இன்னும் அண்ணா, காமராஜர் காலத்துக்கு செல்லவேண்டி இருக்கிறது. ஆனால் இந்த காலத்திலும் அப்படி ஒரு தலைவரால் இருக்க முடியும் என்பதை நிரூபித்தவர் உம்மன் சாண்டி.
முதல்வராக இருந்தாலும் வாரம் ஒரு நாளாவது தன் தொகுதிக்கு செல்லாமல் அவர் இருந்ததில்லை. ஒருமுறை பொது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு காரில் ஏறச் சென்ற அவரை பெயர் சொல்லி கத்தி அழைத்திருக்கிறார் ஒரு சிறுவன்.
காரில் ஏறப்போன சாண்டி, திரும்பி அந்த சிறுவனை அழைத்திருக்கிறார்.
முதல்வரை பெயர் சொல்லி அழைக்கலாமா என்று மற்றவர்கள் திட்ட, அவர்களை கையமர்த்திவிட்டு அந்த சிறுவனின் குறையைக் கேட்டிருக்கிறார்.
தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்று அந்த சிறுவன் சோகமாக சொல்ல, அங்கேயே அதுபற்றி விசாரிக்கச் சொல்லி இருக்கிறார் சாண்டி.
சுமார் அரை மணிநேர விசாரணைக்கு பிறகு, சிறுவன் சொன்னது உண்மைதான் என்று தெளிவாக, அவன் குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அடுத்த முறை அப்பகுதிக்கு வந்தபோது அந்த வீட்டின் கட்டுமான பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளன என்று பார்த்திருக்கிறார்.
அதுதான் சாண்டியின் ஸ்டைல்.
- பி.எம். சுதிர்
– நன்றி: வாவ் தமிழா இணைய தளம்