1967 ஜூலை 18ஆம் நாள், சென்னை சட்டமன்றத்தில் 1953 முதல் ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு, உரிய வகையில் செயல் வடிவம் கொடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சென்னை மாநிலத்தின் பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று மாற்றியமைத்தல் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இம்மாநிலத்தைக் குறிப்பிடும் பெயர் தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்று இப்பேரவை உறுதியாகக் கருதுவதுடன்,
இது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் அமையும் வண்ணம் மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் இப்பேரவை பரிந்துரைக்கிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்து இது தன்னுடைய முன்னுரையாகும் என்றார் முதல்வர் சி.என். அண்ணாதுரை.
தமிழ்நாடு என்று பெயரிடுவதில் இருந்த தடைகள் யாவும் களையப்பட்டு அவையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான சூழலை அரசு ஏற்படுத்தியிருந்தது என்பதை சட்டமன்ற நிகழ்வுகள் சுட்டுகின்றன.
“எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடைய இல்லங்களில் அமர்ந்து பேசிக் கொள்கிற வேளையில், பெருமையோடு சொல்லும் செய்தியாகத் தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்று சி.என்.அண்ணாதுரை உணர்வுப் பூர்வமாகத் தம் உரையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் அவர் தம் பேச்சில், “இந்த வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியல்ல; தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல; மற்றக் கட்சிகளுக்கும் வெற்றியல்ல;
இது தமிழுக்கு வெற்றி; தமிழருக்கு வெற்றி; தமிழ் வரலாற்றுக்கு வெற்றி; தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற வகையில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்கு கொள்வோம்”
– என்று கூறித் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோரி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று முதல்வர் சி.என். அண்ணாதுரை, ‘தமிழ்நாடு வாழ்க!’ என்று மூன்று முறை முழங்க, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘வாழ்க’ என்ற வாழ்த்தொலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சட்ட முன்வடிவு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் அச்சட்ட முன் வடிவிற்குத் தமது இசைவினை 20.12.1968 அன்று அளித்தார்.
பொங்கல் திருநாளான 14.01.1969 அன்று சென்னை என்பது தமிழ்நாடு என்னும் சிறப்புப் பெயரை பெற்றது. தமிழக வரலாற்றில் தமிழ் கூறும் நல்லுலகம் ‘தமிழ்நாடு’ என்று இனிதே மலர்ந்தது.