எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லது தான் என்றாலும், எல்லா பழங்களும் எல்லோராலும் வாங்கும் அளவுக்கு இருப்பதில்லை. அதேபோல் எல்லாருக்குமே பிடித்த பழமாகவும் பல பழங்கள் இருப்பதில்லை.
ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் அளவுக்கு அருமையான ஒரு பழம் வாழைப்பழம். நாம் அலட்சியமாக சாதாரண ஒரு வாழைப்பழம் தானே, அதில் என்ன சத்து இருக்கப் போகிறது என நினைக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து வரும் ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை பெருமைக்காகவே சாப்பிடுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். அதற்கு மேலாக பெயர் கூட தெரியாத பழங்களை ஆ ஆ என்ன சுவையென விரும்பி உண்கிறோம்.
ஆனால் நம்ம ஊர்களில் சாதாரணமாகக் கிடைக்கும் வாழைப்பழத்தை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எளிதான வாழையின் பயன்களைத் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன:
பேயன் வாழை, ரஸ்தாளி, பச்சை வாழை, நாட்டு வாழை, மலை வாழை, நவரை வாழை, சர்க்கரை வாழை, செவ்வாழை, பூவன், கற்பூர வாழை,
மொந்தன் வாழை, நேந்திரம், கரு வாழை, அடுக்கு வாழை, வெள்ளை வாழை, ஏலக்கி, மோரீஸ், மட்டி வாழை என பலவகைகள் உள்ளன.
கேரளாவில் நேந்திர வாழைப்பழத்தில் செய்யாத சமையலே இல்லை. நேந்திரம் சிப்ஸ் என்றால் தெரியாத ஆளே இல்லை.
இவ்வளவு வகையான பழங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனித்தனி சுவையுண்டு. நன்மையுண்டு. ஆற்றலுண்டு. பலனுண்டு. நம்ம ஊரில் நாட்டு வாழைப்பழம், ரஸ்தாளி பழம்.
குழந்தைகளுக்கு பச்சை நாடா வாழைப்பழம் கொடுத்தால் அவர்களுக்கு பசியே எடுக்காதாம்.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் :
நீர், நார், புரதம், மாவுப்பொருள், பாஸ்பரஸ், எனர்ஜி, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, தையாமின், கரோட்டின், நியாசிஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 முதலியன வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்.
என்னென்ன பயன்கள்!
சுறுசுறுப்பு தரக்கூடியது :
காலை உணவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்போம்.
மலச்சிக்கல் தீர்வு தரக்கூடியது :
உடலில் உள்ள கழிவுகள் அன்றாடம் வெளியேற ஒரு சிறந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் மந்த தன்மையை நீக்கக்கூடியது.
இரத்த சோகையோ, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் அருமையான ஒரு பழம்.
அல்சர் நோயாளிகள் உணவு சாப்பிடுவதற்கு முன் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டால் உணவிலுள்ள புளிப்பு, காரம் ஆகியவை குடலைச் சென்று தாக்காமல் வயிற்றிலிருக்கும் புண் விரைவில் குணமாக உதவி செய்யும்.
இருதயம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. டென்சன் மற்றும் இரத்த கொதிப்பு ஏற்படாமல் இதயத்துடிப்பு சீரான துடிப்பில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இது இதயத்துக்கு மிகவும் நல்லது.
வயிற்றுப்போக்கு சரிசெய்யக்கூடியது :
உடலில் நீர்ச்சத்து குறைவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவதால் அசதி ஏற்படும்.
அசதி போக்க ஒரு பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி உப்பும், சர்க்கரையும் சம அளவில் கலந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்று வலியையும் சரி செய்யும்.
கண்பார்வை கோளாறு :
கண் பார்வை கோளாறை சரிசெய்யக் கூடியது போதை தலைக்கு ஏறியவர்களை தெளிய வைக்கவும் வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால் போதைப் பொருளிலுள்ள நிகோட்டினை குறைக்க வாழைப்பழம் உதவுகிறது.
உடல் எடை குறைக்க விரும்புவோர்களுக்கு:
வாழைப்பழத்தில் அதிகம் கலோரிகள் உள்ளதால் பழம் சாப்பிட்டால் முழுமையாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
உடல் குறைக்க விரும்புவோர் செவ்வாழை பழத்தை தவிர்க்கவும். உடல் எடை ஏற்ற விரும்பினால் செவ்வாழையை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள்:
வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. வாழைப் பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளதால் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் பழம் சாப்பிடக்கூடாது.
கொய்யாவும், பப்பாளியும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த பிறகு கண்டிப்பாக வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
– வைஷ்ணவி