ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன.

இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஊடகங்கள் சும்மா இருக்குமா?

இரு தரப்பும் எந்த அளவுக்கு உக்கிரமாக மோதிக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய காட்டில் மழை தான்.

இப்போதே மக்களிடம் சர்வே நடத்தியதாகச் சில கருத்துக் கணிப்புகள் கூட  ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

கூட்டணிக்கு இவ்வளவு எண்ணிக்கையில் தொகுதிப் பங்கீடு என்பது பற்றிய யூகங்களும் உலா வர ஆரம்பித்துவிட்டன.

அப்படித்தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் அதிலும் ராமேஸ்வரத்தை உள்ளடக்கி இருக்கிற ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போடியிட்ட இருப்பதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தெலங்கனாவில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்ட கூட்டத்தில் மோடியை ராமநாத புரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் அங்குள்ள கட்சி நிர்வாகிகள்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தெலங்கானா கூட்டத்தில் வெளிப்படுத்தியிருப்பது எதனால் என்பது தனிவிஷயம்.

எது எப்படியோ விஷயத்தைக் கசிய விட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தஞ்சாவூரில் போட்டியிட இந்திராகாந்தி விரும்பிய போது, அதற்கு உரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் அவர் போட்டியிடவில்லை.

ராகுல் காந்தி கூட கேரளாவைத் தான் போட்டியிடத் தேர்ந்தெடுத்தார்.

எங்கு போட்டியிடுவது என்ற முடிவை எடுப்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஜனநாயக உரிமை.

ஆனால் ராமநாதபுரத்தைக் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருக்கலாம், அங்கிருக்கிற ராமர் காரணமாக இருக்கலாம்.

இதோடு உத்திரப்பிரதேச்சத்தில் உள்ள அயோத்தியில் சுமார் 1800 கோடி மதிப்பீட்டில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கோவில் கட்டுமானப் பணிகளில் 1600 தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்னும் கோவில் கருவறைக் கட்டுமானப் பணி ஒன்று தான் பாக்கி.

2024-ம் ஆண்டு ஜனவரிக்குள் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்.

அதன் பிறகு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் ராமர் கோவில் திறப்பு விழா பிரமாண்டமாய் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அதற்கடுத்த சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், ராமர் கோவில் திறப்பு என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் அல்லது அப்படி மாற்றப்படும்.

அயோத்தியிலும், ராமேஸ்வரத்திலும் இருப்பவர் ராமர் தானே!

அதனால் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் வெளியிடப்பட்டிருக்கலாம் அல்லது இதில் எல்லாம் எந்த உள் அரசியலும் இல்லை என்று அவர்கள் தரப்பிலேயே லாவகமாக மறுக்கப்படலாம்.

பார்க்கலாம்.

  • யூகி
You might also like