விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

தாய் – தலையங்கம்

வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.

தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள்.

இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் விலையை ஏற்றுகிறார்கள் அல்லது தரத்தைக் குறைக்கிறார்கள்.

என்னதான் நியாய விலைக்கடைகளில் தக்காளி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்கு அரசு ஏற்பாடு செய்தாலும், விலைவாசி குறைந்த பாடாக இல்லை. இன்னும் பக்கவிளைவாகப் பல பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.

தங்கம் போன்றவற்றின் விலையும் ஒருபுறம் அதிகரிக்கின்றது என்றாலும், உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களின் வயிற்றோடு சம்பந்தப்பட்டது. வயிற்றெரிச்சலுடனும் சம்பந்தப்பட்டது.

இந்த விலையேற்றத்திற்கு என்ன தான் காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை விட, உடனடியாக விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முனைவது தான் நிலைமையைச் சமாளிக்க ஒரே வழி.

பண மதிப்பிழப்பு துவங்கி, ஜி.எஸ்.டி வரிகள் வரை சாமானிய மக்களைப் படாதபாடு படுத்தியிருக்கின்றன. கொத்துக் கொத்தாகப் பலரை வேலையிழக்க வைத்திருக்கின்றன.

தொடர்ந்து வாழ்வாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்களை மேலும் தடுமாற வைக்கின்றன உணவுப் பொருட்களின் விலையேற்றங்கள்.

விலையேற்றத்தினால் அழுந்திக்கிடக்கிறவர்களிடம் எந்த மதவாத‍ வித்தையைக் காட்டித் திசை திருப்ப முடியாது.

பொருளாதார நிபுணர்கள் விவாதிக்கலாம்.

பொருளாதார வளர்ச்சி விகிதச் சரிவு பற்றி புள்ளிவிபரக் கணக்கை அள்ளித் தெளிக்கலாம். விலையேற்றம் என்பது அவர்களுக்கு புள்ளிவிபரக் குறிப்பு மட்டுமே.

சாதாரண மக்களுக்கோ அவர்கள் மீது அழுந்தும் கனமான சுமை.

பொறுப்பில் இருப்பவர்கள் முதலில் அவர்களுடைய சுமையைக் கீழிறக்கப் பாருங்கள்.

– யூகி

You might also like