சிறந்த ஊராட்சிக்கான விருதுபெற்ற கிராமத்தில் நிகழும் அவலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட ஆதி திராவிடர் கிராமம் ஒன்று உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி குறிப்பு.

ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2 வருடங்களாக இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிடம் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுவர் விளையாட்டு பூங்கா இருக்கிறது. ஆனால், அதிலும் வெறும் துருப்பிடித்த கம்பிகள் மட்டுமே உள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதியில் அங்கன்வாடி மையமும், கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமும் இல்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் செலவில் தேவையே இல்லாத பாதாளச் சாக்கடை திட்டம் அமைத்து பல கோடி மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டுப் பூங்கா, கழிவு நீர் கால்வாய், குடிநீர் இணைப்பு, ஆழ்துளைக் கிணறுகள், தெரு மின்விளக்குகள் அமைத்ததாக ஊராட்சியில் பொய்யான கணக்குகளைக் காட்டி பல கோடி ரூபாய் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த அரசபாளையம் ஊராட்சி சிறந்த ஊராட்சிக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்

You might also like