விடுமுறை நாளில் ஒரு தாளையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தடிக்குச் செல்லுங்கள்.
உங்கள் கண்களில் தென்படும் எறும்பு, ஈ, தேனீ, மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, ஓணான், கறையான், அணில், பொன் வண்டு, குருவி, கிளி போன்ற உயிரினங்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள்.
ஒரு மரத்திலும் மரத்தடியிலும் பார்த்த உடன் தெரியும் உயிரினங்களே எவ்வளவு இருக்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
மரப்பட்டைகளுக்கு அடியில், மண்ணுக்கு அடியில், இலைகளுக்கு அடியில், பூவுக்குள், பழங்களுக்குள் இன்னும் எவ்வளவு உயிரினங்கள் இருக்கும்!
தோட்டம் முழுவதும், தெரு முழுவதும், ஊர் முழுவதும், நாடு முழுவதும், பூமி முழுவதும் எவ்வளவு உயிரினங்கள் இருக்கும்!
இதுவரை மனிதர்கள் கணக்கெடுப்பு நடத்தியதில் சுமார் 87 லட்சம் வகையான உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் மனிதர்களும் உண்டு. கடல்வாழ் உயிரினங்களான திமிங்கிலம், மீன், ஆமை, கடல்சாமந்தி போன்ற உயிரினங்களும் உண்டு. நிலத்தில் வாழும் யானை, மான், புலி போன்ற விலங்குகளும் உண்டு.
பாம்பு, உடும்பு, முதலை போன்ற ஊர்வன உயிரினங்களும் உண்டு. பறவைகளும் உண்டு. பூச்சிகளும் உண்டு. தாவரங்களும் உண்டு. நுண்ணிய உயிரினங்களும் உண்டு.
பூமியில் புதிதாக உயிரினங்கள் தோன்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், ஏற்கெனவே அறியப்படாமல் இருந்த உயிரினங்கள் புதிதாகக் கண்டறியப்படுகின்றன.
அதே நேரத்தில் பல உயிரினங்கள் மறைந்துவருகின்றன.
இயற்கையான காரணங்களாலும் சில உயிரினங்கள் அழிந்து விடுகின்றன.
மனிதர்களின் செயல்களாலும் சில உயிரினங்கள் அழிவைச் சந்திக்கின்றன.
மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது மனித இனத்தின் எண்ணிக்கை கடந்த சில நூற்றாண்டுகளில் வேகமாகப் பெருகிவருகிறது.
கி.பி.1750-ம் ஆண்டு வாக்கில் உலகின் மக்கள்தொகை சுமார் 7 கோடியே 60 லட்சம். 1800ஆம் ஆண்டு வாக்கில் இது 100 கோடியானது. இப்போது சுமார் 700 கோடிக்கும் மேல்.
தான் வாழ்வதற்கு இடம் வேண்டும் என்பதற்காக மனித இனம் பெரிய அளவில் காடுகளை அழித்துள்ளது. காடுகளை அழிப்பது என்பது பல உயிரினங்களை அழிப்பதற்குச் சமம்.
மொரிஷியஸ் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவந்த டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களைச் சாப்பிடும். டோடோ அழிந்தபோது, விதைகள் மூலம் பரவ இயலாமல் கல்வாரியா மரத்தின் இனமே அழிந்துவிட்டது.
கடந்த காலத்தில் இயற்கையான காரணங்களால் அழிந்த உயிரினங்கள் பல உண்டு.
அமெரிக்கா, ஐரோப்பா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மமூத் எனப்படும் ராட்சத யானை இனம் அழிந்துவிட்டது.
தற்போது விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பல உயிரினங்களுக்கு ஆபத்தாக முளைத்துள்ளன.
அழிவிலிருந்து உயிரினங்களைப் பாதுகாக்க உலக அளவில் பல அமைப்புகள் இருக்கின்றன. நாமும் நம்மால் முடிந்தவரை உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
– நன்றி: இந்து தமிழ் திசை