ஊர் சுற்றிக்குறிப்புகள் :
பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? – என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார்.
பக்கத்திலிருந்து மற்ற குடிமகன்கள் முணுமுணுக்கிறார்கள். புலம்புகிறார்கள். ஆதங்கப்படுகிறார்கள். இந்தக் காட்சி பல தொலைக்காட்சிகளில் வெளிவந்து பலரை அதிர வைத்திருக்கிறது.
“குடி குடியைக் கெடுக்கும்” என்கிற எச்சரிக்கை வாசகங்களை நினைவுபடுத்தும் அரசு தான், இன்னொரு புறம் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனைக்கான இலக்கை கூட்டிக் கொண்டே போகிறது.
48 ஆயிரம் கோடியிலிருந்து ஐம்பதாயிரம் கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அரசுக்கு இந்த அளவுக்கு வருமானம் வரக்கூடிய டாஸ்மாக்கிற்கு வருமானத்தைக் கொடுக்கும் குடிமகன்கள் இங்கு எப்படி நடத்தப் படுகிறார்கள்?
டாஸ்மாக்கில் விலையைக் கூட்டுவது பற்றி ஊடகங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டும் முன்பிருந்த அமைச்சர் வரை பலரும் அதை மறுத்திருக்கிறார்கள்.
இப்போது புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகும் கூட, டாஸ்மாக்கில் விலையேற்றம் குறித்துக் கேள்வி எழுப்புகிறவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
டாஸ்மாக் கடைகளில் இருந்து வாகனங்களை எடுத்துச் செல்கிறவர்களின் பின்னால் மோப்பம் பிடித்துச் சென்று வாயை ஊதச் சொல்லி அபராதம் விதிக்கிறார்கள்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பார்களின் உள்ளே சென்று பார்க்கும் போது தான் அங்கிருக்கும் சுகாதாரமற்ற நிலை தெரிய வரும்.
இவ்வளவு கோடிகளை அள்ளித்தரும் மதுபான விற்பனை செய்யும் இடங்கள் குறைந்தபட்ச சுகாதாரத்துடன் இருக்க வேண்டாமா?
எதற்கும் பக்கத்திலுள்ள மாநிலங்களில் இதே மாதிரியான பார்களும், விற்பனைக் கூடங்களும் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் மாண்புமிகு பார்வையுடன் ஆய்வு பண்ணலாம்.
எவ்வளவு பேர் தங்கள் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்து டாஸ்மாக்கின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்?
தங்கள் உறுப்புகளைப் படிப்படியாக இழக்கிறார்கள்? உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மையை எதிர்கொள்கிறார்கள்? தங்களின் ஆயுளைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
எத்தனை குடும்பங்கள் குடியினால் பெரும் சீரழிவைச் சந்தித்திருக்கின்றன?
இப்படியெல்லாம் அவதிப்பட்ட நிலையில் தான்பெரும்பாலான ‘ குடிமகன்கள்’ இருக்கிறார்கள்?
டாஸ்மாக் கடைகளுக்கு முன்னாலேயே எத்தனை பேர் விசித்திரக் கோணங்களில் தங்களை மறந்து விழுந்து கிடக்கிறார்கள்? விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்?
இவர்களும், இவர்களின் குடும்பங்களும் சரிந்து, அரசின் பொருளாதாரம் நிமிர வேண்டியிருப்பது கொடுமையான முரண்.
முக்கியமாக நாம் கேட்டுக் கொள்வது இதைத் தான். அரசுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் குடிமகனை முதலில் ஒரு மனிதனாக நடத்துங்கள். குடிக்க வரும் இடங்களாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பையாவது அளியுங்கள்.
மணா