– இந்திரனின் நினைவுக் குறிப்புகள்
நான் சிறுவனாகவும், இளைஞனாகவும் சந்தித்த தமிழ் அறிஞர்கள் பாரதி சீடர் கனகலிங்கம், சுத்தானந்த பாரதியார், தேவநேயப் பாவாணர், மு.அருணாசலம், நீதிபதி எஸ்.மகராஜன், கா.அப்பாதுரையார், பெருஞ்சித்திரனார், மதுரகவி முருகேச பாகவதர் என்று நீளும் பட்டியலில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர் நுண்கலை ஆய்வாளர், சமணமும் பௌத்தமும், கல்வெட்டு, தொல்லியல் துறை, மொழி ஆராய்ச்சி என்று பல்துறை அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்தான்.
நான் பி.யூ.சி (இன்றைக்கு பிளஸ் 2) படிக்கும்போது என் குருநாதர் தா.கோவேந்தன் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் அறிஞர் சீனி வேங்கடசாமி அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
அப்போது நான் மயிலை சீனியின் ”சமணமும் தமிழும்” நூலைப் படித்திருப்பதாகச் சொன்னேன்.
பளபளவென்ற மொட்டைத் தலை, சாதாரண உயரம், எளிமையான வெள்ளைச் சட்டை, சாதாரண வெள்ளை வேட்டியில் இருந்த அவர் என்னை அவர் பக்கத்தில் அமரவைத்தார்.
“தம்பி நான் மொட்டைத்தலையுடன் இருப்பதால் என்னைச் சமணன் என்று நினைத்து விடாதே” என்று சொல்லி சிரித்தார்.
”நான் சமணன் அல்ல. முழுமையான வைணவன்” என்று சொல்லி என்னை அணைத்தார்.
பிறகு மேலும் மயிலை சீனியின் ஒவ்வொரு புத்தகத்தையும் தேடித்தேடி படித்தேன்.
அப்போதுதான் தமிழின் மிகப்பெரிய அறிஞராகிய மயிலை சீனியின் உயரம் கண்டு பிரமித்தேன்.
இன்றைக்கும் ஒரு கலை இலக்கிய விமர்சகனாக என்னைச் செதுக்கியதில் மயிலை சீனி அவர்களின் நூல்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதை நினைத்து அவர் பாதம் தொட்டுக் கண்களில் ஒற்றுகிறேன்.