அழ மறுத்த நாகேஷ், அடம்பிடித்த இயக்குநர்!

நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட.
ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக் கொடுத்த படங்களில் ஒன்று, ‘நானும் ஒரு பெண்’.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா, ரங்காராவ், நாகேஷ் நடித்த இந்தப் படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கினார். 1963 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கருப்பாக இருக்கும் ஒரு பெண்படும் அவமானங்களை, அவள் அடையும் வேதனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம், இது.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை பெற்ற இந்தப் படம், தெலுங்கில் நாடி ஆடா ஜன்மே என்றும் இந்தியில் மெயின் பி லட்கி ஹூன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த ரீமேக்குகளையும் இயக்கியவர் திருலோகச்சந்தர்தான்.

இந்தப் படத்துக்காக கண்ணதாசன் வரிகளில் இடம்பெற்ற, ‘கண்ணா கருமை நிற கண்ணா’ கதையோடு இணைந்த பாடல். சுசீலாவின் குரலும் விஜயகுமாரியின் நடிப்பும் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்றது.

அந்தக் காலகட்டத்தில் வானொலியில் அதிகம் ஒலிபரப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் இப்போதும் பொருந்துவதாகவே அமைகிறது. எந்தக் காலத்துக்கும் பொருத்தமான பாடல்தான். இந்தப் பாடலுக்காக கண்ணனையும் கருப்பு நிறப் பெண்ணையும் ஒப்பிட்டு கண்ணதாசன் எழுதியிருந்த வரிகளில், வலு அதிகம்.

‘மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா/
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா-நல்ல
இடம் பார்த்து, சிலையாக அமர்ந்தாய் கண்ணா..;

– என்ற வரிகளில் விஜயகுமாரி காட்டும் எக்ஸ்பிரஷன்கள், நம்மையே அழ வைத்துவிடும்.

இந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில், சிதம்பரம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் நாகேஷ். ஒரு காட்சியில் தங்கையை காணாமல் நாகேஷ் கண்ணீர் விட்டுக் கதறி அழ வேண்டும்.

இந்தக் காட்சியை இயக்குநர் சொன்னபோது முதலில் மறுத்த நாகேஷ், நான் அழுதால், ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆனால், திருலோகச்சந்தர் பிடிவாதமாக இருந்தார். இல்லை, ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், நீங்கள் அழுதுதான் தீர வேண்டும் என்றார். அதன்படியே செய்தார் நாகேஷ்.

அந்தக் காட்சியில் அற்புதமாக நடித்திருந்தார், அவர். படம் முடிந்து புட்டேஜ் பிரச்சனை ஏற்பட்டபோது, படக்குழு நாகேஷ் அழும் காட்சியை நீக்க முடிவு செய்தது.

ஆனால், இயக்குநர் அதை நீக்க வேண்டாம் என்று, வேறு சில காட்சிகளை நீக்கினார். அந்தப் படம் வெளியானபோது, நாகேஷின் அழுகை காட்சிக்கு அவ்வளவு வரவேற்பு.

– அலாவுதீன்

You might also like