பூனைகள் பற்றிய அதியசக் குறிப்புகள்!
செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்தப்படியாக பலரும் வளர்ப்பது பூனை.
வீட்டில் காலில் வந்து சுழன்று கொண்டே ஒருவித பாசத்தை நம்மிடம் காட்ட கூடியது பூனை.
வீட்டில் நாம் இருக்கும் பொழுது பூனையார் மட்டும் எங்கிருந்து வருகிறார் என தெரியாது. நம் அருகில் வந்து மெல்லிய குரலில் கொஞ்ச தொடங்கி விடுவார்.
இதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். எலியைப் பிடிக்க வீட்டில் வளர்த்தால் எலியிடமே சென்று விளையாடும் திறமை பெற்றவர்.
இப்படிப் பல வீடுகளில் அழையா செல்லப்பிராணியாக இருக்கும் பூனை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
உலகில் மொத்தம் 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.
வீட்டுப் பூனைகள் பொதுவாக 4 முதல் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதுவரை வீட்டில் வளர்க்கப்பட்ட அதிக எடை கொண்ட பூனை 21. 200 கிலோ இருந்துள்ளது.
பூனைகள் சுமார் 12 லிருந்து 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஆனால், க்ரீம் பஃப் என்ற பூனை 38 வயது 3 நாள்கள் உயிர் வாழ்ந்துள்ளது.
பூனைகள் தூக்கத்தில் கும்பகர்ணன். தன்னுடைய வாழ்க்கையில் 70 சதவிகிதத்தை தூக்கத்தில் கழிக்கின்றன பூனைகள்.
பொதுவாக தூங்குவதற்கு உயரமான இடத்தை தேர்வு செய்யுமாம். தூங்காமலிருக்கும் 3 இல் ஒரு பங்கு நேரத்தை தன்னுடைய உடலை சுத்தப்படுத்துவதற்கு எடுத்து கொள்கிறது.
பூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாதாம். அதனால்தான் நாம் வைக்கும் இனிப்புகளை வேண்டா வெறுப்பாக பார்க்கும் போல.
மனிதர்களாகிய நமக்கு வியர்வை தோல் மூலம் வெளியேறும். ஆனால் பூனைகளுக்கு உள்ளங்கால்கள் மூலம் வியர்வை வெளியேறுமாம்.
பூனைகளுக்கு உப்புத் தண்ணீர், நல்ல தண்ணீர் என்ற பாகுபாடே கிடையாதாம். கடல்நீரில் இருக்கும் உப்பைக் கூட சுத்திகரிக்கும் தன்மை பூனையாரின் சிறுநீரகங்களுக்கு உண்டாம்.
பூனைகள் சாப்பிடும் உணவை ஒரேயடியாக சாப்பிடாதாம். ஒன்றிரண்டு முறை கொஞ்சமாக சாப்பிட்டு, சோதனை செய்த பிறகே முழுமையாக உணவை உண்ணத் தொடங்குமாம்.
மனிதர்களுக்கு இடது கை, வலது கை பழக்கம் இருப்பது போல பூனைகளில் பெண் பூனைக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் இருக்கும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய கிழக்கு நாடுகளில் பூனைகள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
வீடுகளில் ஒளிந்து வசிக்கும் எலிகள் தானியங்களை உண்ணக்கூடாது என்பதற்காகவே பூனைகள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
2004 ம் ஆண்டில் பிரெஞ்ச் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சைப்ரஸில் 9500 ஆண்டுகள் பழமையான பூனை கல்லறையை கண்டுபிடித்தனர். அப்போதே செல்ல பிராணிக்கு கல்லறை அமைத்துள்ளார்கள்.
ஒரு பூனை பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்களில் மனிதர்களுடன் நன்றாக பழக ஆரம்பித்துவிடும்.
பூனைகள் மெதுவாக கண்களை மூடி திறந்தால் அவை உங்களிடம் அதீத பாசம் கொண்டுள்ளது என அர்த்தமாம்.
அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே பூனைகள் கண்களை மெதுவாக அசைக்குமாம்.
பூனைகள் மனிதர்கள் அருகில் வந்து படுத்து தலையை ஒரு பக்கமாக திருப்பி கொண்டால் அது அந்த நபரிடம் இருக்கும் பொழுது மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்கிறதாம்.
பூனைகளால் பாலூட்டிகள் மற்றும் பறவைகளை சேர்ந்த 33 இனங்கள் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக்கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்.
எகிப்தியர்கள் பூனைகளை புனிதமாக கருதியுள்ளனர். பூனைத் தலை மற்றும் பெண்ணின் உடலமைப்பு கொண்ட உருவத்தை எகிப்தியர்கள் வணங்கியுள்ளார்கள்.
பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி கூடவே சில எலிகளையும் சேர்த்து புதைத்துள்ளனர். அரசர்களை புதைக்கும் பொழுது கூடவே பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பண்டைய எகிப்தியர்கள் தங்கள் வீட்டில் பூனை இறந்துபோனால் ஆண்கள் தங்கள் புருவங்களை மழித்து விடுவார்கள்.
உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன. இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன.
பூனையால் 100 விதமான சத்தங்களை எழுப்ப முடியுமாம். ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு அர்த்தம் உள்ளதாம். சக பூனைக்கு அதன் அர்த்தம் தெரியுமாம். ஆனால் நாய்க்கு 10 விதமான சத்தங்களை மட்டுமே எழுப்ப முடியுமாம்.
இந்தியாவில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனமாக பார்ப்பார்கள். அமெரிக்காவிலும் இந்த சகுனம் உண்டாம்.
ஆனால் அவர்களுக்கு கருப்பு பூனை குறுக்கே போனால் மட்டுமே கெட்ட சகுனமாம். அதற்கு மாறாக ஐரோப்பிய நாடுகளில் கருப்பு பூனை குறுக்கே போனால் அது நல்ல சகுனமாம்.
தெய்வீகத்தன்மை கொண்டவர்களின் ஆன்மா தற்காலிகமாக பூனைகளின் உடலில் தங்கும் என பவுத்தர்கள் நம்புகிறார்களாம்.
பூனைகளுக்கு இருட்டில் பார்க்கும் சக்தி அதிகம். மனிதனுக்கு பார்க்க தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பகுதியே பூனைக்கு போதும். நம்மை விட 6 மடங்கு இருளில் பார்க்கும் திறன் கொண்டது.
பிளாக்ஸி என்ற பூனை உலகின் பணக்கார பூனை. அதன் எஜமானர் காலமானபொழுது தன்னுடைய குடும்பத்தினருக்கு கொடுக்க விரும்பாமல் பூனையின் பெயரில் 7 மில்லியன் பவுண்டுகள் செல்வத்தை எழுதி வைத்திருந்தார்.
வீட்டில் வளர்க்கும் பூனை மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
பூனைகளுக்கு மனிதர்களுக்கு இருப்பதைவிட அதிகமான முதுகுத்தண்டு எலும்புகள் உள்ளதால் பூனையின் உடலானது அதிக அளவில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
பூனையின் தலை நுழையும் அளவு ஓட்டை இருந்தால் போதும் அதன் மூலம் பூனையால் வெளியேற முடியும்.
பூனையின் காதுகள் 180 டிகிரி சுழலும் ஆற்றல் கொண்டது.
அதே நேரத்தில் ஒரே சமயத்தில் இரு காதுகளையும் வெவ்வேறு பக்கத்தில் சுழற்றும் ஆற்றல் கொண்டது.
ஃபெலிசெட் என்ற பூனை 18 அக்டோபர் 1963 ம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானிகளால் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிக்கு சென்று பத்திரமாக பாராசூட் மூலம் தரையிறங்கியது.
2015 ம் ஆண்டில் பூனை பெயின்டிங் ஒன்று 820000 டாலருக்கு விற்பனையானது. இந்திய ரூபாய் மதிப்பில் 58 கோடிகள்.
இதன் நீளம் 8.5 அடி உயரம் 6 அடி கொண்ட 103 கிலோ எடை கொண்ட இந்த ஆயில் பெயின்டிங் உலகின் மிகப்பெரிய பூனை ஓவியம் என கூறப்படுகிறது. இது மை வைப்ஸ் லவ்வர்ஸ் (my wife’s lovers) என அழைக்கப்படுகிறது.
உலகின் முதல் பெரிய பூனை கண்காட்சி லண்டனின் கிரிஸ்டல் பேலஸில் ஜூலை 1871 இல் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பூனை இனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுமார் 2 லட்சம் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களாம்.
பெரும்பாலான பூனைகளுக்கு தண்ணீர் மற்றும் ஈரப்பதம் பிடிப்பதில்லையாம். அதன் அதிக படியான உரோமம் தண்ணீரில் நனைந்தால் அதை பராமரிக்க சிரமமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சராசரியாக ஒரு பூனையால் ஒரே தாவலில் 8 அடி உயரத்திற்கு தாண்ட முடியும். இது அதன் உடல் நீளத்தை கணக்கிடும் பொழுது 6 மடங்கு அதிகம்.
பூனையின் மூக்கு மனிதர்களின் கைரேகையை போல தனித்துவமானது. இது ஒவ்வொரு பூனைக்கும் மாறுபட்டிருக்கும்.
பூனைகளுக்கு 3 கண் இமைகள் உள்ளது.
பூனையின் இதயம் நிமிடத்திற்கு 110 லிருந்து 140 முறை துடிக்கிறது. மனிதர்கள் இதயத்தை விட இரு மடங்கு அதிகம்.
பூனையால் தண்ணீர் குடிக்காமல் இறைச்சியை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ முடியுமாம்.
4000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் ஒரு பூனையை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பூனைகள் தன்னுடைய குட்டிகளை 2 மாதங்கள் வரை சுமக்கும். ஒரு பூனை வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அவரது வீட்டில் இருந்த அதிகப்படியான எலித் தொல்லையால் பூனையை மாநகராட்சி ஊழியர்களிடம் வாங்கி வளர்த்தார். இப்போதுவரை அந்த பூனை பிரதமர் வீட்டில் 10 ஆண்டுகளாக.
பூனைகள் இறைச்சி மற்றும் தாவர உணவுகள் ஆகிய இரண்டையும் சாப்பிட கூடியது. வீட்டில் வளர்க்கும் பூனை மிதமான சூடு கொண்ட உணவுகளையே சாப்பிடும். மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவதில்லை.
மேலைநாடுகளில் பூனைகளின் ரோமத்தில் இருந்து பெண்களுக்கான மேலாடைகள் செய்யப்படுகின்றன.
ஒரு மேலாடை செய்ய 24 பூனைகளின் ரோமம் தேவைப்படும். தொப்பிகள், போர்வைகள், கையுறைகள், பொம்மைகள் போன்ற பல பொருட்கள் பூனை தோல் மற்றும் ரோமத்தால் செய்யப்படுகின்றன.
நம்முடைய வீட்டில் வளர்க்கப்படும் பூனையின் மரபணு 95.6 சதவிகிதம் புலியை ஒத்துள்ளது.
பூனைகளுக்கு 230 எலும்புகள் உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு 206 எலும்புகள் மட்டுமே உள்ளன.
பெண் பூனைகள் பிறந்த 4 மாதத்தில் கர்ப்பம் தரிக்க தயாராகிவிடும்.
– நன்றி: ஜீ தமிழ்