எழுத்தாளர் பாலகுமாரன் – தஞ்சை மண் தந்த கொடை!

எழுத்தாளர் பாலகுமாரனின் பிறந்த தினமானத்தையொட்டி எழுத்தாளர் ஜெய்ஶ்ரீ பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியருக்கு மகனாக 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பிறந்த பாலகுமாரன் 11-ம் வகுப்பு வரையே கல்வி பயின்றார்.

தன்னுடைய 20 வயது முதலே கவிதைகளை எழுத தொடங்கினார். அவற்றில் சில கணையாழி இதழிலும் வெளிவந்தன.

உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது என யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது.

ஆனால், எழுத்துச் சித்தர் எனும் வார்த்தைக்கு பலம் சேர்த்து, 90-களின் தொடக்கத்தில் எழுத்துலகில் புயலைக் கிளப்பியவர்களின் பாலகுமாரனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

இறைவனுக்கான பிரார்த்தனை குறித்து அவரது மொழியில் சொல்வதென்றால், “ஜபம் வாழ்வின் அடிப்படை. கற்றுக்கொள்வதல்ல, சொல்லி தந்து செய்வதல்ல. அது உள்ளிருந்து பீறிடவேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்தெழுந்து தானே சரிய வேண்டும்”. இந்த வரிகளை எழுதுவதற்கு ஒரு சித்தம் வேண்டும். இதை எழுதியவரை சித்தன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

தஞ்சை மண், தமிழ் வளத்திற்கு எத்தனையோ கொடையாளர்களை கொடுத்திருக்கிறது.

நகுலன் தொடங்கி, கல்கி, ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ் என இந்த வரிசையில் தன்னையும் நிலைநிறுத்திக் கொண்டவர் பாலகுமாரன். இவரது எழுத்து மிக ஜனரஞ்சகமாக இருந்தது. தொன்னூறுகளில் இவர் தமிழ் எழுத்துலகில் கொடிகட்டி பறக்கத் தொடங்கினார்.

குறிப்பாக இரும்பு குதிரைகள், உடையார், கங்கை கொண்ட சோழன், தாயுமானவன் போன்ற புதினங்களால் எழுத்து வட்டத்தில் பெரிதும் அறியப்பட்டார் பாலகுமாரன்.

கல்கியின் பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனின் இளம் பருவத்தை சிறப்பாக பதிவு செய்திருந்தது என்றால், ராஜராஜ சோழனின் தஞ்சை கோயில் கட்டிய வரலாற்றை சிறப்பாகப் பதிவு செய்த பெருமை பாலகுமாரனின் உடையார் புதினத்தையே சேரும்.

ஒருபுறம் வரலாறு புதினத்தை எழுதி திணறடித்த கைகள் மறுபுறத்தில் ஜனரஞ்சகத்தை தொடாமல் இருந்ததில்லை.

குறிப்பாக இரும்பு குதிரைகள் நாவல் இதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும். எழுத்துலகில் உச்சி முகரப்பட்ட படைப்பாளிகளில் பாலகுமாரனும் ஒருவர்.

எழுத்தை கடந்து, சினிமா துறையிலும் வீரியமாக பாலகுமாரன் இயங்கியிருக்கிறார்.

பல படங்களில் இவரது வசனங்கள் தனி முத்திரை பதித்தன. அதிலொன்றுதான் நாயகன் பட டையலாகான “நீங்க நல்வரா… கெட்டவரா…” என்பது பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

1987ல் வெளியான நாயகன் தொடங்கி, 2006ல் வெளியான புதுப்பேட்டை வரை ஏறத்தாழ 23 திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியுள்ளார்.

இதில் இயக்குநர் ஷங்கரின் காதலன் திரைக்கதைக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. மேலும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

90களில் புதினங்கள் மூலமாக இலக்கிய வாசகர்கள் மனதையும், 2000-களில் திரைக்கதைகள் வழியாக சினிமாக ரசிகர்கள் மனதிலும் இடம்பெற்ற பெருமைக்கு சொந்தக்காரராக இன்றைக்கும் கொடிகட்டி பறந்துக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன்.

கலைக்காக பாலகுமாரன் ஆற்றிய சேவைக்காக மாநில அரசு இவருக்கு கலைமாமணி வழங்கி கௌரவித்தது.

அத்துடன் சுகஜீவனம் என்ற சிறுகதை தொகுப்புக்காக மாநில அரசின் விருதினையும், மெர்க்குரி பூக்கள் நாவலுக்காக இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றார்.

திரைத்துறையை பொறுத்தமட்டில், காதலன் திரைப்படத்துக்காக மாநில அரசின் சிறந்த வசனக்கர்த்தா விருதும் கிடைக்கப் பெற்றது

இரும்புக் குதிரைகள் புதினத்திற்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது, என பல விருதுகளை பெற்ற பாலகுமாரன் 2018 மே 14-ல் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்.

You might also like