மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது?

– இந்திரன்

மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது? என்ற கேள்வியை எழுப்பி, இது பற்றி மிக சுவையாக தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு உள்ளே ஒரு உன்னதச் சிற்பம் – மகிஷாசுர மர்த்தனி தன்னை மோகித்த எருமைத்தலை அரக்கனைப் போரில் வதம் செய்து விட்ட வெற்றிக் களிப்பில் நிற்கிறாள். போர் முடிந்து விட்டது. எனவே வில்லில் நாண் இல்லை. கேடயம் வானத்தைப் பார்த்து இருக்கிறது. இடப்புறத்தில் சங்கு ஊதப்படாமல் தொங்குகிறது.. வலப்புறத்தில் சக்கரம். இவை கைகளால் தாங்கப்படாமல் வெறுமனே வெளியில் மிதந்துகொண்டுள்ளன.

இடது கால் சிம்மம் ஒன்றின் மீது வைக்கப்பட்டு இருக்கிறது. இவளது காலுக்கடியில் இருக்கும் சிங்கம் பின்னங் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் இருக்கிறது.இவளது கண்களில் வீரம், இதழ்க் கடையில் வெற்றிக் களிப்பு. எட்டுக் கைகளில் ஓர் கையைச் சிம்மத்தின் மீது ஊன்றிய காலின் தொடை மீது வைத்திருக்கிறாள். அதன்மீது ஒரு கிளி அமர்ந்திருக்கிறது. வலக்கைகளில் ஒன்று சிற்றிடையில். ஆடைகள் மார்புக் கச்சையும், இடையணிகளும் தவிர வேறில்லை.

கொசுவம் இடையிலிருந்து தொங்குகிறது. இது துவண்டு ஒரே நிலையில் தொங்குவதால் இவள் இப்போது விரைந்து இயங்கவில்லை என்று தெரிகிறது. தலைக் கோலம் அமைதியான முறையில் உயர்ந்த அமைப்பு கொண்டது. இங்கே மகிஷாசுரன் காட்டப்படவேயில்லை.

கலை விமர்சகன் என்றவகையில் உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். ஒரு போர்க்கடவுளான மகிஷாசுரமர்த்தனியின் கையில் ஏதற்காகக் கிளியை வைத்தான் சிற்பி.? புராணக்கதைப்படி மகிஷாசுரமர்த்தனிக்குக் கிளி கிடையாது?

பல்லவர்களின் இஷ்டதெய்வமான மகிஷாராசுரமர்த்தனியின் சிற்பங்களில் எதிலுமே கிளி இருக்காது.

கிளியுடன் மீனாட்சி அம்மனை நமக்குத் தெரியும். கிளியுடன் ஆண்டாளைத் தெரியும். மன்மதனின் வாகனம் கிளி. பாவை விளக்குகளின் தோளில் கிளி உண்டு. ஆனால் ஒரு போர்க்கடவுளான மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தில் ஏன் கிளி வைக்கப்பட்டது? பதில் சொல்லுங்களேன் நண்பர்களே?

You might also like