நமக்குக் குழந்தையாய் பிறந்துவிட்ட காரணத்தாலேயே, அக்குழந்தை நம் அடிமை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.
குழந்தைகளின் ஆசை என்ன என்பதை உணராமல், தமது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது.
பள்ளி நேரம் தவிர பிற நேரங்களில் சப்ஜெட் டியூஷன், மியூசிக் கிளாஸ், கராத்தே கிளாஸ், ஸ்விம்மிங் என்று தொடர்ச்சியாக ஏதாவது ஒன்றிற்கு அனுப்பிக் கொண்டே இருப்பது தவறு.
குழந்தைப் பருவத்தில்கூட, விளையாடுவதற்கு நேரம் ஒதுக்காமல், தொடர்ச்சியான அறிவுத் திணிப்பு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர வேண்டும்.
எது திறன்?
ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒருவிதத்தில் தனித்தன்மை வாய்ந்ததுதான்.
“உன் வகுப்பில் படிக்கும் லதா எப்பவும், ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறா, ஆனா உன்னால ஏன் வாங்க முடியல?” என்று பிற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பிட்டு பேசாதீர்கள்.
அவ்வாறு நீங்கள் பேசும் போது, “ஏம்மா, 30 வயசுக்குள்ள 13 தங்கப் பதக்கங்களை பி.டி.உஷா ஜெயிச்சிருக்காங்களே, உங்களால மட்டும் ஏன் அதுமாதிரி சாதிக்க முடியல?” என்று உங்கள் மகள் உங்களிடம் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தேர்வில் முதலிடத்தில் வருவது மட்டுமே திறன் அல்ல. வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவக்கூடிய வாழ்வியல் திறன்கள் பல உள்ளன.
முடிவெடுக்கும் திறன், சிக்கலுக்குக் தீர்வு காணும் திறன், படைப்பாற்றல் திறன், மாற்று சிந்தனைத் திறன், எதையும் தாங்கும் மன வலிமை போன்ற பல வாழ்வியல் திறன்களை, உலக சுகாதார அமைப்பான WHO நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்வில் முதலிடம் வராவிட்டாலும், மேற்சொன்ன வாழ்வியல் திறன்களில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ உங்கள் குழந்தையிடமும் மறைந்திருக்கும். அதனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது உங்களின் கடமை ஆகும்.
விருப்பம் அறிவது அவசியம்
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆர்வம் இல்லாத செயல்களில் ஈடுபட, உங்கள் குழந்தையை வற்புறுத்தக்கூடாது.
உதாரணமாக பாட்டுப்பாட விருப்பம் இல்லாத குழந்தையை பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி சில பெற்றோர் வற்புறுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.
அதுபோன்ற நிகழ்வுகளில், “என்னைப்பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்” என்ற திரைப்படப் பாடலை உங்கள் குழந்தை பாடிக்காட்டி, உங்கள் திணிப்பின்மீதுள்ள எரிச்சலை வெளிப்படுத்தலாம்.
பயாலஜி பாடத்தில் விருப்பம் இல்லாத குழந்தையை பயாலஜி குரூப்பில் சேர்த்துவிட்டு, “டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் உன் வாழ்க்கைக் குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று துன்புறுத்தக்கூடாது.
உங்களுடைய விருப்பத்தை, உங்கள் குழந்தையின் குறிக்கோளாக மாற்றும் உரிமையை உங்களுக்குத் யார் தந்தது? நீங்கள் பெற்ற குழந்தை என்பதால், ஒட்டுமொத்த முடிவெடுக்கும் அதிகாரமும் உங்களிடம் உள்ளதாக நீங்கள் நினைப்பது நியாயம் தானா?
வாழ்க்கை கணக்கியல்
“சின்ன பசங்களுக்கு, நல்லது, கெட்டது எப்படி புரியும்? அவனோட பிற்கால வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னுதானே நாங்க ஆசைப்படறோம், இதுல என்ன தப்பு?” என்று நீங்கள் கேட்கலாம்.
பின்னாள் வாழ்க்கைக்காக, அவனுக்கு விருப்பம் இல்லாத பாடத்தை இன்னாளில் படிக்கச் சொன்னால், அது அவனது இன்னாள் சந்தோஷத்தை தட்டிப்பறிப்பதாகத் தானே அர்த்தம்.
வியாபாரம்வேறு, அந்த வியாபாரத்தை நடத்தும் வியாபாரி வேறு என்பது தான் கணக்குப் பதிவியலின் முக்கிய கோட்பாடு ஆகும்.
வாழ்க்கைக் கணக்கியலும் இதுதான். நாம் வேறு, நம்மிடமிருந்து உருவான நம் குழந்தை வேறு.
நமது வயது, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நமக்குத் தோன்றும் நம்பிக்கைகளை, நமது குழந்தைகளிடம் தெரிவிக்கலாமே தவிர திணிக்கக் கூடாது.
சாலை வழிகாட்டிப் பலகை, வழியைக் காட்டிவிட்டு நிற்பது போல், நம் குழந்தைகளுக்கு நாம் சிறந்த வழிகாட்டிகளாய் மட்டும் இருப்போம்.
நம் குழந்தைகள் பின்னாளில் விழி கலங்கி நிற்க வாய்ப்பளிக்காமல், அவர்களிடம் இன்னாளில் மனம்விட்டு பேசி, எந்நாளும் அவர்கள் மகிழ்வோடு வாழ வழி வகுப்போம்.
****
– கலாவல்லி அருள்
தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி
துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்.
– நன்றி: இந்து தமிழ் திசை